கடலோர நகரங்களுக்கு ஆபத்து?.. அதிகரிக்கும் வெப்பத்தால் ஏற்படக்கூடிய பாதிப்பு.. 'ஷாக்' ரிப்போர்ட்!
வாஷிங்டன்: கடல் நீர் மட்டம் உயர்வதற்கு கிரீன்லாந்து தான் முக்கிய பங்களிப்பை அளித்து வருகிறது. கார்பன் உமிழ்வு இதே அளவுக்கு இருக்கும் பட்சத்தில் 2,100 ஆம் ஆண்டில் கடல் நீர் மட்டம் 50 செ.மீட்டர் வரை உயர்வுக்கு வழிவகுக்கும். இதனால், கடற்கரையோரங்களில் வசிக்கும் பல கோடிக்கணக்கான மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்கள் அதிகரிப்பதால் பூமியின் வெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த 100 ஆண்டுகளில் மட்டும் நாம் வாழும் இந்த பூமியின் சராசரி வெப்பநிலை 0.8 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல், நிலக்கரி போன்ற புதைபடிம எரிபொருள்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தியதும், வனப்பகுதிகள் அழிப்பு உள்ளிட்டவையே இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

கடல் மட்டம் உயர்வது
புவி வெப்பம் அதிகரிப்பால் ஏற்படும் பருவ நிலை மாற்றத்தால் அதிக அளவு மழை, வரலாறு காணாத வறட்சி, பூமியின் தட்பவெப்ப நிலை மாறுவது என பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. பருவமழை மாற்றத்தால் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்வது உள்ளிட்ட பிரச்சினைகளும் மனித குலத்திற்கும் மனிதன் வாழ்வியல் சூழலுக்கும் ஆபத்தை ஏற்படுத்தலாம் என்பது இயற்கை ஆர்வலர்களின் வாதமும் விஞ்ஞானிகளின் வாதமுமாக இருக்கிறது.

ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு
பருவ நிலை மாற்றத்தை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் ஒருபக்கம் நடந்தாலும் வளர்ந்த, வளரும் நாடுகள் இடையேயான வேறுபாடுகள் உள்ளிட்ட காரணத்தால் இந்த விவகாரத்தில் ஒரு உறுதியான தீர்வை எட்டுவதில் சிக்கல் நிலவுகிறது. புவி வெப்பம் அடைவதால் பனிப்பாறைகள் உருகி கடல் நீர் மட்டம் உயர்ந்து வருவதை ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இந்த நிலையில், கீரின்லாந்தில் உள்ள பனிப்பாறைகள் கடந்த ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்து வருவதாக ஆய்வாளர்கள் அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளனர்.

கிரீன்லாந்தில் உள்ள பனிப்பாறைகள்
ஆர்க்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கிடையில் அமைந்துள்ள தீவு அதிக அளவு பனிப்பரப்புகளை கொண்டதாகும். உலகின் மிகப்பெரிய பனித்தீவாக கருதப்படும் இந்த தீவு உலகளாவிய கால நிலை அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது கிரீன்லாந்தில் கடந்த ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்ப நிலை அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கிரீன்லாந்தில் உள்ள பனிப்பாறைகள் குறித்து கடந்த சில ஆண்டுகளாக ஆய்வு செய்து வரும் தங்களது ஆய்வு முடிவுகளை ஜர்னல் நேட்சர் என்ற இதழில் வெளியிட்டுள்ளனர்.

புவி வெப்பமயமாதலே காரணம்
கடந்த 2001- முதல் 2011- கால கட்டத்தில் கடந்த நூற்றாண்டுடன் ஒப்பிடுகையில், சராசரியாக 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரித்ததாக ஆய்வளர்கள் கூறுகின்றனர். ஜெர்மனியில் உள்ள ஆல்ஃபெர்ட் வெஜினர் இன்ஸ்டிடியூட் சார்பாக இந்த ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்வில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர்கள், கிரீன்லாந்து தீவில் உள்ள பனிப்பாறைகளில் சுமார் 100 அடி வரை துளையிட்டு ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இதில் பனிப்பாறைகளில் கடந்த ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பம் அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது. கிரீன்லாந்து தீவில் ஏற்பட்டுள்ள இந்த அதீத வெப்ப நிலை உயர்வுக்கு மனிதன் ஏற்படுத்திய புவி வெப்பமயமாதலே காரணம் என்றும் ஆய்வாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

50 செ.மீட்டர் வரை உயரும்
இது தொடர்பாக ஆய்வாளர்கள் மேலும் கூறுகையில், கடல் நீர் மட்டம் உயர்வதற்கு கீரினிலாந்துதான் முக்கிய பங்களிப்பை அளித்து வருகிறது. கார்பன் உமிழ்வு இதே அளவுக்கு இருக்கும் பட்சத்தில் 2,100 ஆம் ஆண்டில் கடல் நீர் மட்டம் 50 செ.மீட்டர் வரை உயர்வுக்கு வழிவகுக்கும். இதனால், கடற்கரையோரங்களில் வசிக்கும் பல கோடிக்கணக்கான மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்" என்று தெரிவித்துள்ளனர். அதேவேளையில், இந்த ஆய்வு முடிவுகளை மேற்கோள் காட்டி பருவநிலை நிபுணர்கள் கூறுகையில், மனித சமூகத்தின் செயல்பாடுகள் பூமியை அதன் ஆபத்தின் விளிம்பை நோக்கி தள்ளுவதாகவும் மனிதன் மற்றும் இந்த கிரகத்தின் எதிர்காலத்தை காக்க உடனடியாக நடவடிக்கை தேவை என்றும் எச்சரித்துள்ளனர்.

7 மீட்டர் அளவுக்கு உயர்த்தும்..
ஒவ்வொரு தசாப்தத்திலும் கிரீன்லாந்து டிரில்லியன் டன் எடையிலான பனிப்பாறைகள் உருகுவதாகவும் பனிப்பாறைகள் உருகுவது அதிகரித்து வருவதாகவும் எச்சரித்துள்ள ஆய்வாளர்கள் கடல் மட்டம் 7 மீட்டர் அளவுக்கு உயர்த்தும் அளவுக்கு கிரீன்லாந்தில் நீர் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அமேசான் மழைக்காடுகளில் பெய்யும் மழைப்பொழிவு அளவையும் பாதித்து இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications