என்ன நடக்குது? வேகமாக சுழல தொடங்கும் பூமி! 24 மணி நேரத்தைவிட குறையும் ஒரு நாள்! ஆய்வாளர்கள் குழப்பம்
வாஷிங்டன்: கடந்த ஜூலை 29ஆம் தேதி, பூமி 24 மணி நேரத்திற்கு முன்பே தனது ரோட்டேஷனை முடித்துவிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
நமது பூமி சூரியனைச் சுற்றி வருகிறது. ஒரு முறை சூரியனைச் சுற்றி வருவதே ஒரு வருடம் ஆகும். அதேபோல பூமி தன்னை தானே சுற்றி வருகிறது.
இதுதான் பூமியில் இரவையும் பகலையும் தீர்மானிக்கிறது. இப்படி ஒரு முறை பூமி தன்னை தானே சுற்றி வரச் சரியாக 24 மணி நேரம் ஆகும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

வேகம்
இதனிடையே கடந்த ஜூலை 29ஆம் தேதி பூமியானது வழக்கத்திற்கு மாறாக 1.59 மில்லி விநாடிகள் முன்னதாகவே தனது சுழற்சியை நிறைவு செய்து உள்ளது. இதன் மூலம் மிகக் குறுகிய நாள் என்ற சாதனை படைக்கப்பட்டு உள்ளது. இது வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கிற்குச் சற்று அதிகமாகும். நமக்குப் பார்க்க இது பெரிய விஷயம் போல இல்லை எனத் தோன்றினாலும், 1.59 மில்லி விநாடிகள் கூட பூமியின் சுழற்சியில் மிக முக்கியம் என்று எச்சரிக்கின்றனர் ஆய்வாளர்கள்.

2020ஆம் ஆண்டு
சமீப காலமாகவே பூமி அதன் சுற்றும் வேகத்தை அதிகரித்து வருகிறது. 1960ஆம் ஆண்டுக்குப் பின்னர், கடந்த 2020ஆம் ஆண்டில் தான் பூமியில் குறுகிய மாதம் பதிவானது. 2020 ஜூலை 19ஆம் தேதி மிகவும் குறுகிய நாள் பதிவானது. வழக்கமான 24 மணிநேர நாளை விட 1.47 மில்லி விநாடிகள் குறைவாக இருந்தது. அதாவது அன்றைய தினம் பூமி வழக்கத்தைக் காட்டிலும் வேகமாகச் சுற்றி உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து வேகம்
அதன் பின்னரும் கூட பூமியின் சுழற்சி விகிதம் தொடர்ந்து அதிகரித்தே வந்தது. இருப்பினும், அது குறிப்பிடத்தக்க அளவுக்குச் சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. இந்தச் சூழலில் தான் இப்போது குறுகிய நாள் பதிவாகி உள்ளது. வரும் நாட்களில் நாட்கள் மேலும் குறுகியதாக மாறலாம் என்றும் அதற்கான தொடக்கமாக இது இருக்கலாம் என்றும் இன்டிரஸ்டிங் இன்ஜினியரிங் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது

காரணம்
பூமி சுழற்சி ஏன் வேகமாகிறது என்பதற்கான தெளிவான காரணம் எதுவும் தெரியவில்லை. பூமியின் மையப் பகுதி அல்லது வெளிப்புற அடுக்குகள், கடல்கள், அலைகளில் ஏற்படும் மாற்றம் இதற்குக் காரணமாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. காலநிலை மாற்றம் கூட இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அல்லது "சாண்ட்லர் வோபிள்" (Chandler wobble) பூமியின் புவியியல் துருவங்களின் இயக்கத்துடன் இது தொடர்பு இருக்கலாம் என்றும் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

லீப் வினாடிகள்
அதேநேரம் பூமி சுழலும் வேகம் இப்படித் தொடர்ந்து அதிகரித்து வந்தால் அது நெகடிவ் லீப் வினாடிகளுக்கு வழிவகுக்கும். அதாவது பூமி சூரியனைச் சுற்றி வரும் விகிதத்திற்கும் கடிகாரங்களுக்கும் மேட்ச் ஆகாமல் போகலாம். இதுபோன்ற லீப் வினாடிகள் ஸ்மார்ட்போன்கள், கணினிகளுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தும்.

என்ன பாதிப்பு
ஏனெனில் கடிகாரம் 23:59:59 இலிருந்து 23:59:60 வந்த பின்னர் தான், 00:00:00 என்று அடுத்த நாளுக்கு மாறும். பூமி வேகமாகச் சுற்றுவதால் லீப் விநாடிகள் ஏற்படும்பட்சத்தில் அது ஐடி பிரோகிராம்களுக்கு சிக்கலைத் தரும். இதைத் தவிர்க்க 23:59:58இல் இருந்து 00:00:00 நாம் வாட்சுகளை மாற்றினாலும் கூட, தேதி மற்றும் நேரத்தைக் கொண்டு இயங்கும் பிரோகிராம்கள் சிக்கலை எதிர்கொள்ளலாம்.

27 முறை
இதுவரை சர்வதேச அளவில் நேரத்தை ஒழுங்குபடுத்தும் ஒருங்கிணைந்த யுனிவர்சல் டைம் ஏற்கனவே 27 முறை லீப் நொடிகளை அட்ஜெஸ்ட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது இதேபோன்ற நிகழ்வுகள் இனி அடிக்கடி நடக்கும்பட்சத்தில், அது தொழில்நுட்ப ரீதியாக மட்டுமின்றி இயற்கையிலும் கூட சில மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications