வாயில் அடி.. பயமே இல்லை - சதாம் உசேன் கைதானது எப்படி? “திக்திக்” நொடிகளை பகிர்ந்த அமெரிக்க வீரர்
வாஷிங்டன்: கடந்த 2006 ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்ட ஈராக் அதிபர் சதாம் உசேனை உயிரிழந்து 16 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அவரை கைது செய்தபோது நிகழ்ந்த பல்வேறு பரபரப்பு நிகழ்வுகளை முதல் முறையாக வெளியில் பகிர்ந்து இருக்கிறார் அமெரிக்க முன்னாள் ராணுவ அதிகாரியான கெவின் ஹாலாண்ட். சதாம் உசேனை கைது செய்ததற்காக முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷால் பாராட்டப்பட்டார் கெவின்.
அமெரிக்காவை சேர்ந்த "டேஞ்சர் கிளோஸ்" எனப்படும் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்காவின் டெல்டா படையை சேர்ந்த கெவின் ஹால்லாண்ட், சதாம் உசேனை கைது செய்யும்போது நடந்த பல்வேறு தகவல்களை வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஈராக் போர் சதாம் உசேன் கைது என பல்லாயிரக்கணக்கான செய்திகள் இணையத்தில் கொட்டிக்கிடக்கும் நிலையில், அதில் இடம்பெறாத பல சுவாரஸ்ய தகவல்களை வெளியிட்டு இருக்கிறார்.

குழியில் பதுங்கிய சதாம் உசேன்
ஈராக் போரின்போது தலைமறைவாகி இருந்த சதாம் உசேனை கண்டுபிடித்தது பற்றி அவர் விளக்கமளித்து இருக்கிறார். "ஈராக்கில் உள்ள சிறிய விவசாய நகரத்தில் உள்ள குழியில் சதாம் உசேன் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே நாங்கள் அப்பகுதிக்கு சென்றோம். அவர் பதுங்கி இருந்த குழியை கண்டுபிடித்தோம்.

இலைகளால் மூடப்பட்ட குழி
அந்த குழி முழுவதும் இலைகள், மணலால் மூடப்பட்டு இருந்தது. சுவாசத்திற்காக மட்டும் ஒரு சிறிய பைப் அதில் வைக்கப்பட்டு இருந்தது. நாங்கள் அந்த குழியை சூழ்ந்து இருந்த மணல் மற்றும் இலைகளை அகற்றிவிட்டு பார்த்தோம். அப்போது செங்கல் தரைபோல் காட்சியளித்தது. அதில் யாரோ மறைந்து இருப்பதை உறுதிசெய்தோம்.

அரபு மொழியில் பேச்சு
அந்த சமயத்தில் ஒரு கையெறி குண்டு வீசப்பட்டபோது அரபு மொழியில் யாரோ பேசுவதை எங்களால் கேட்க முடிந்தது. அதன் பின்னர் அந்த குழியில் இருந்து கைகள் வெளியே வந்தன. அவரின் தலையில் அதிக முடி சிக்கு படிந்து இருந்தது. அப்போது நாங்கள் அவரை பிடித்தோம். அவர் தான். அவரே தான். என மகிழ்ச்சியில் பேசினோம்.

சதாம் உசேனுக்கு வாயில் அடி
சதாம் உசேனை குழியில் இருந்து வெளியே எடுக்க எனது சக ராணுவ வீரர்கள் உதவி செய்தார்கள். சதாம் உசேனிடம் கிளாக் 18 ரக துப்பாக்கி இருந்தது. மற்றொரு டெல்டா படை வீரர் எந்த துப்பாக்கியை பறிக்க சாதம் உசேனின் வாயில் அடித்தார். அதன் பிறகு சதாம் உசேன் எங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட முயன்றார்.

பயமில்லாத முகம்
'நான் தான் ஈராக்கின் அதிபர். உங்களோடு நான் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறேன்' என்று அவர் ஆங்கிலத்தில் பேசினார். 'அதற்கான நேரம் முடிந்துவிட்டது, சகோதரரே!' என்று நாங்கள் பதிலளித்தோம். சதான் உசேன் ஆபத்தானவர் என்பதை அவரை பார்த்தவுடன் புரிந்துகொண்டேன். அவர் எந்த பயமும் இன்றி காணப்பட்டார்.

அணு ஆயுதம் இல்லை.
சதாம் உசேன் ஈராக் அதிபராக பதவி வகித்த காலத்தில் ஏராளமான ஷியாக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. இதனை தொடர்ந்து ஈராக் அணு ஆயுதத்தை பதுக்கி வைத்திருப்பதாகக் கூறி ஈராக்கில் அமெரிக்க படைகளை குவித்து சதாம் உசேனை அமெரிக்காவின் ஜார்ஜ் புஷ் அரசு கைது செய்தது. அவர் தூக்கிலிடப்பட்ட சில ஆண்டுகளில் ஈராக்கில் அணு ஆயுதம் பதுக்கப்பட்டு இருப்பதாக சொன்ன குற்றச்சாட்டில் உண்மையில்லை என்பது உறுதியானது.












Click it and Unblock the Notifications