மிஸ் யுனிவர்ஸ்.. மெக்சிகோ சாப்ட்வேர் இன்ஜினியர் ஆண்ட்ரியா மெஸாவிற்கு மகுடம்! இந்திய அழகி 4வது இடம்
வாஷிங்டன்: 2021ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் மெக்சிகோ நாட்டின் ஆண்ட்ரியா மெஸா பட்டம் வென்றுள்ளார்.
Recommended Video
69வது ஆண்டுக்கான பிரபஞ்ச அழகிப் (Miss Universe 2021) போட்டி புளோரிடாவில் ஹாலிவுட் அரங்கில் உள்ள ராக் ஓட்டல் அண்ட் கேசினோவில் நடந்தது.

மொத்தம், 74 நாடுகளைச் சேர்ந்த பெண் போட்டியாளர்கள் இதில் கலந்து கொண்டனர். இதில் மெக்சிகோ நாட்டை சேர்ந்த 26 வயதான ஆண்ட்ரியா மெஸாவும், பிரேசிலின் 26 வயதான ஜூலியா காமாவும் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றனர். இதில் பிரபஞ்ச அழகியாக ஆண்ட்ரியா மெஸா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த அறிவிப்பு வெளியானதுமே, ஆண்ட்ரியா மெஸா மகிழ்ச்சியில் உற்சாகக் குரலிட்டு, கண்ணீர் விட்டார். இதையடுத்து, கடந்த ஆண்டு பிரபஞ்ச அழகியாக தேர்வான, தென் ஆப்பிரிக்காவின் ஜோஜிபினி டுன்ஸி, மிஸ் யுனிவர்ஸ் மகுடத்தை ஆண்ட்ரியாவுக்கு சூட்டினார்.
2வது இடத்தை ஜூலியா காமா பெற்றார். பெரு நாட்டைச் சேர்ந்த ஜானிக் மெக்டா (27) 3வது இடத்தை பிடித்தார்.
மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த பெண்கள் 3வது முறையாக பிரபஞ்ச அழகிப் பட்டத்தைத் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2010ல் ஜிமினா நவரெட்டேவும், கடந்த 1991ல் லுபிடா ஜோன்ஸும் அந்த நாட்டிலிருந்து பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டநர்.
மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த அட்லின் கேஸ்டிலினோ 4வது இடத்தைப் பெற்றார். கொரோனா பரவல் காரணமாக, பாதுகாப்பான வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடந்த வருடம் கொரோனா வைரஸ் பரவலால் முதல் முறையாக பிரபஞ்ச அழகி போட்டி ரத்து செய்யப்பட்டது.
பட்டம் வென்ற ஆண்ட்ரியா மெஸா, சாப்ட்வேர் இன்ஜினியர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications