டாம் குரூஸின் திரைப்பட இயக்குநர்.. மனைவியுடன் சடலமாக மீட்பு! படுகொலை என காவல்துறை சந்தேகம்!
வாஷிங்டன்: பிரபல ஹாலிவுட் நடிகரான டாம் குரூஸின் இயக்குநர்களின் ஒருவரான ராப் ரீனர், தனது மனைவி மிச்செலுடன் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அவரது இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் திட்டமிட்ட படுகொலை என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். இது தொடர்பான விசாரணை தற்போது சூடுபிடித்திருக்கிறது.
ஒரு நடிகராக, ரீனர் 1970களில் சிபிஎஸ் தொலைக்காட்சியில் வெளியான பிரபலமான நகைச்சுவைத் தொடரான 'ஆல் இன் தி ஃபேமிலி"யில் மைக்' மீட்ஹெட் ஸ்டிவிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் பதிந்தார். ஹாலிவுட்டில், ரீனர் ஒரு திறமையான இயக்குனராகத் திகழ்ந்தார். 1984ஆம் ஆண்டு வெளியான 'திஸ் இஸ் ஸ்பைனல் டேப்' என்ற ஆவணப்படத்தின் மூலம் அவரது இயக்குநர் பயணம் தொடங்கியது.

காணாமல் போன ஒரு இளைஞனின் உடலைத் தேடிச் செல்லும் நான்கு சிறுவர்களின் உணர்வுபூர்வமான கதையான 1986ஆம் ஆண்டு வெளியான 'ஸ்டாண்ட் பை மீ', பில்லி கிரிஸ்டல் மற்றும் மெக் ரியான் நடித்த 1989ஆம் ஆண்டு வெளியான 'வென் ஹாரி மெட் சாலி' என ரீனர் மொத்தம் இருபதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். இதில், 'வென் ஹாரி மெட் சாலி' திரைப்படம். எல்லா காலத்திலும் சிறந்த காதல் நகைச்சுவைத் திரைப்படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
1987ஆம் ஆண்டு வெளியான சாகசத் திரைப்படமான 'தி பிரின்சஸ் பிரைட்', ஸ்டீபன் கிங்கின் நாவலைத் தழுவி உருவான உளவியல் திரில்லர் படமான 'மிசரி', மற்றும் ஜாக் நிக்கல்சன், டாம் குரூஸ், டெமி மூர் நடித்த 1992ஆம் ஆண்டு இராணுவ நீதிமன்ற நாடகப் படமான 'எ ஃபியூ குட் மென்' என ரீனர், பலவகையான திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.
இந்நிலையில் இவரது மறைவு திரைத்துறையினர் மட்டுமல்லாது, சினிமா ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், "இது திட்டமிட்ட படுகொலை. இதை செய்தவர்கள் யார் என்பதை விரைவில் கண்டுபிடிப்போம்" என தெரிவித்திருக்கின்றனர்.
அதேபோல லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர், "இது எங்கள் நகரத்திற்கும் நாட்டிற்கும் ஒரு மிகப்பெரிய இழப்பு. ராப் ரீனரின் பங்களிப்புகள் அமெரிக்க கலாச்சாரம் மற்றும் சமூகத்தில் ஆழமான தாக்கத்தை செலுத்தியுள்ளன. தனது ஆக்கப்பூர்வமான படைப்புகள் மற்றும் சமூக, பொருளாதார நீதிக்கான முன்முயற்சிகள் மூலம் அவர் எண்ணற்ற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளார்" என்று கூறியுள்ளார்.
தற்போதைய நிலவரப்படி இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை. பிரேதப் பரிசோதனையின் அறிக்கையில்தான் மரணம் எப்படி ஏற்பட்டது என்பது குறித்து தெரிய வரும்.
நடிகர், இயக்குநர் என்பதை கடந்து, இவர் அரசியல் ஆர்வலராகவும் அறியப்படுகிறார். அதாவது, கடந்த 2004ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜான் கெர்ரியை ஆதரித்தார். அப்போதைய ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யூ புஷை விமர்சிக்கும் விளம்பரங்களில் ரீனர் நடித்திருந்தார். அதேபோல அடுத்தடுத்த ஜனாதிபதி வேட்பாளர்களான அல் கோர் மற்றும் ஹிலாரி கிளிண்டன் ஆகியோருக்கும் ஆதரவு தெரிவித்திருக்கிறார். தன்பாலின ஈர்பாளர்களின் திருமணங்களைத் தடை செய்யும் விதமாக கொண்டுவரப்பட்ட மசோதாவையும் இவர் எதிர்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications