நேரலையில் செய்தி வழங்கிய ரிப்போர்ட்டரிடம் 'இயர்போனை ஆட்டைய போட்ட கிளி'.. பரவும் வீடியோ!
வாஷிங்டன்: கொள்ளை சம்பவம் குறித்து செய்தியாளர் ஒருவர் நேரலையில் பேசிக்கொண்டு இருந்த போது அவரது காதில் மாட்டியிருந்த இயர்போனை எங்கிருந்தோ பறந்து வரும் கிளி ஒன்று அவரது தோளில் அமர்ந்து கவ்விச்செல்லும் காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
விஞ்ஞானம் வளர வளர கருவிகளின் அளவும் குறைந்து கொண்டே செல்கிறது.
செல்போன்கள் துவக்க காலத்தில் அளவில் பெரியதாக இருந்ததை இதற்கு சிறந்த உதாரணமாக சொல்லலாம்.

ஹெட்செட் பயன்பாடு
தற்போதைய நவீன காலத்திற்கு ஏற்ப வசதிகள் பெருகி பெருகி செல்போன்கள் போன்ற கேட்ஜெட் கருவிகளின் அளவு சுருங்கிவிடது. ஹெட்செட்களையும் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக சொல்ல முடியும். வயர் ஹெட்செட்டுகளில் இருந்து தற்போது புளூ டூத் வசதியுடன் இயங்கும் வயர்லெஸ் ஹெட்செட்டுகள் ஏகத்திற்கும் பிரபலம் ஆகி விட்டது.

இயர்போன்
இத்தகைய வயர்லெஸ் ஹெட்செட்டுகளின் அடுத்த அப்டேட் ஆக இயர்போன் ( earphone) எனப்படும் சிறிய அளவிலான ஹெட்போன்கள் இப்போது புழக்கத்தில் வந்து விட்டன. நகரம், கிராமம் என பாரபட்சம் இன்றி பட்டிதொட்டியெல்லாம் இப்போது இயர் போன்கள் பயன்படுத்தும் இளசுகளின் எண்ணிக்கை பெருகி விட்டது. வயர்கள் போன்ற சிரமம் எதுவும் இன்றி காதில் பொருத்தி இசையை ரசிக்க முடியும் என்பதால் இத்தகைய இயர்போன்களை பலரும் சர்வசாதாரணமாக பயன்படுத்துவதை பார்க்க முடிகிறது.

தூக்கி சென்ற கிளி
அதேபோல தொழில் நிமித்தமாக பலருக்கும் இத்தகைய இயர்போன்கள் பல்வேறு வசதியாக உள்ளது. குறிப்பாக அடிக்கடி பயணங்களில் இருப்பவர்கள், செய்தியாளர்கள் என பலருக்கும் இத்தகைய இயர்போன்களை பயன்படுத்தி பேசுவதற்கும் பயனளிப்பதாக உள்ளது. அந்த வகையில் சிலி நாட்டை சேர்ந்த செய்தியாளர் ஒருவர் நேரலையில் பேசிக்கொண்டு இருந்த போது அவரது காதில் மாட்டியிருந்த இயர்போனை கிளி ஒன்று கவ்விச்செல்லும் காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

செய்தியை நேரலையில்..
தென் அமெரிக்க நாடான சிலி நாட்டில் உள்ள பிரபலமான செய்தி தொலைக்காட்சிகளில் ஒன்று சிலிவிஷன். இந்த சேனலில் பணியாற்றும் நிகோலம் க்ரும் என்ற செய்தியாளர், அங்குள்ள ஒரு பகுதியில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து இருப்பதாக கூறி அதுபற்றிய செய்தியை நேரலையில் வழங்கி வந்தார். அப்போது செய்தியாளர் நிகோலம் க்ரும் தோளில் வந்து அமர்ந்த கிளி ஒன்று நொடிப்பொழுதில் லாவகமாக காதில் மாட்டியிருந்த இயர்போனை திருடிக்கொண்டு சிட்டாய் பறந்துவிட்டது.

இணையத்தில் பரவும் வீடியோ
இதைக்கவனித்த கேமரா மேன் கிளியை பிடிக்க முயன்றார். ஆனாலும், கேமராமேனுக்கு தண்ணி காட்டிய கிளி தப்பி பறந்து விட்டது. எனினும் சிறிது நேரத்தில் தனது இயர்போனை கிளி கீழே போட்டுவிட்டதாகவும் அதை தான் எடுத்துக்கொண்டுவிட்டதாகவும் செய்தியாளர் நிகோலம் தெரிவித்து இருக்கிறார். செய்தியாளர் காதில் இருந்த இயர்போனை திருடிக்கொண்டு கிளி பறந்து செல்லும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

லட்சக்கணக்கான பார்வைகள்
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியான சில மணி நேரங்களில் லட்சக்கணக்கான பார்வையாளர்களை கடந்துள்ளது. நெட்டிசன்கள் பலரும் சுவாரசியமாக தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications