ஒரே மேடையில் டிரம்ப்- புதின்- ஜி ஜின்பிங்.. உலகமே உற்று பார்க்கும் சந்திப்பு! ஏன் ரொம்பவே முக்கியம்?
பெய்ஜிங்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகிய மூன்று பேரும் இன்று நடைபெறும் முத்தரப்பு உச்சி மாநாட்டில் சந்திக்க உள்ளனர். உலகின் டாப் 3 நாடுகளின் தலைவர்கள் சந்திக்கும் மீட்டிங் என்பதால் உலகின் ஒட்டுமொத்த பார்வையும் இதன் பக்கமே திரும்பியுள்ளது. இதில் உக்ரைன் பதற்றம், அணு ஆயுத கட்டுப்பாடு, ஈரான் போர் குறித்து விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.
சீனாவில் ஷென்சென் நகரில் இப்போது ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க உலகின் பல்வேறு முக்கிய தலைவர்களும் சீனாவுக்கு சென்றுள்ளனர். இந்தச் சூழலில் தான் உலகின் முக்கிய நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீன நாட்டு அதிபர்கள் இன்று சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்கள்.

முக்கியம்
1945ஆம் ஆண்டு பிப்ரவரியில் அமெரிக்கா, பிரிட்டன், சோவியத் யூனியன் தலைவர்கள் யால்டாவில் நடத்திய உச்சி மாநாட்டை போலவே இதுவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. உக்ரைன் போர், அமெரிக்க மிட் டேர்ம் தேர்தல், உலக நாடுகளுடனான உறவுகள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் இந்த சந்திப்பில் பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று தலைவர்களுக்கும் தங்களுக்கு என தனித்தனியே அஜெண்டா வைத்துள்ளனர். இருப்பினும், இந்த சந்திப்பு உடனடியாக உலக அரசியலை மாற்றும் என உறுதியாக சொல்ல முடியாது.
ரஷ்யா
இந்த கூட்டத்தில் உக்ரைன் போர் குறித்து புதின் முக்கியமாக பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்படலாம். ஆனால், ஐரோப்பிய நாடுகள் இல்லாமல் ஐரோப்பிய பாதுகாப்பு விவகாரங்களை விவாதிப்பது லாஜிக்கே இல்லை என்று அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் மட்டும் இதில் முடிவெடுக்க முடியாது என்று ஐரோப்பிய வெளியுறவு உறவுகள் கவுன்சிலின் கொள்கை ஆய்வாளர் ஃப்ரெட்ரிக் வெஸ்லாவ் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் இந்த சந்திப்பு ரஷ்யாவுக்கு முக்கியமானதாக இருக்கும் என ஹட்சன் இன்ஸ்டிடியூட்டின் மூத்த ஆய்வாளர் சிபோரா ஃபிரைட் தெரிவித்துள்ளார். பொருளாதார வலிமை குறைந்திருந்தாலும், உலக வல்லரசு என்ற ரஷ்யாவின் இமேஜ்ஜை தக்கவைக்க இந்தச் சந்திப்பு உதவும். உக்ரைன் போரில் சாதகமான முடிவுகள், பொருளாதார தடைகள் நீக்கம் உள்ளிட்ட எந்தவொரு சலுகையும் கிடைக்காவிட்டாலும், ரஷ்யாவுக்கு உலக அரசியலில் அங்கீகாரம் கிடைப்பதே ஒரு வெற்றியாக அமையலாம்.
அணு ஆயுதங்கள்
அமெரிக்காவை பொறுத்தவரை அணு ஆயுத இருப்புகள் குறித்தும் டிரம்ப் பேச விரும்புகிறார். ஆனால், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் தலா 5,000க்கும் அதிகமான அணு ஆயுதங்கள் உள்ள நிலையில், சீனாவிடம் 600 அணு ஆயுதங்களே உள்ளன. இதனால் அணு ஆயுத கட்டுப்பாடு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதை சீனா இதுவரை தவிர்த்து வந்துள்ளது. இந்த மீட்டிங்கில் அது குறித்து ஆலோசிக்கப்படலாம்.
மேலும், அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையேயான அணு ஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தமான 'நியூ ஸ்டார்ட்' கடந்த பிப்ரவரி மாதம் காலாவதியானது. இதற்கு பதிலாக, சீனாவையும் உள்ளடக்கிய புதிய நவீன ஒப்பந்தம் தேவை என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் போர்
அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய மூன்று நாடுகளின் தலைவர்களும் ஈரான் போர் குறித்தும் விவாதிக்க வாய்ப்புள்ளது. சீனா, ரஷ்யா என இரு நாடுகள் உடனும் ஈரானுக்கு நல்லுறவு இருப்பதால் ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் இந்த சந்திப்பு முக்கியமானதாக இருக்கலாம்.


Click it and Unblock the Notifications
