சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட பெண் மும்பையில் உயிரிழப்பு.. மரணத்தைவிட கொடுமையான விளம்பரம்
மும்பை: மும்பையில் கடந்த நவம்பர் 13ம் தேதி உயிரிழந்த சென்னை பூர்வீகத்தைச் சேர்ந்த வயதான பெண்ணின் குடும்பத்தினரையும் உறவினர்களையும் கண்டுபிடிக்க உதவுமாறு அக்கம் பக்கத்தினர் வெளியிட்டுள்ள செய்திதாள் விளம்பரம் பலரையும் நெகிழ வைத்துள்ளது. மரணத்தைவிடவும் கொடுமையானது என்ன தெரியுமா?, ஒருவர் இறந்துவிட்ட நிலையில் அவரைப் பற்றிய தகவலை அறியக்கூடிய நெருங்கிய உறவினர்கள் யாரும் தொடர்பில் இல்லாதிருப்பது தான். இந்த விளம்பரம் இப்போது பேசுபொருள் ஆகி உள்ளது.
மும்பையில் தனியாக வசித்து வந்த லலிதா கிருஷ்ணமூர்த்தி என்ற பெண் கடந்த நவம்பர் 13ஆம் தேதி டல் நலக்குறைவால் காலமானார். சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட அவருக்கு மகள்கள் மற்றும் உறவினர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களின் தற்போதைய இருப்பிடம் தெரியாததால், குடும்பத்தினரைத் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருக்கிகறது.

அவரது மகள்கள், நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் அல்லது உறவினர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது தெரியாத சூழலில் அக்கம் பக்கத்தினர் செய்திதாளில் விளம்பரம் போட்டிருக்கிறார்கள்
அந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: "மறைவு அறிவிப்பு: ஆழ்ந்த துயரத்துடன், திருமதி லலிதா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 13 நவம்பர் 2026 அன்று மும்பையில் காலமானார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர் சென்னையைச் சேர்ந்தவர். இவருக்குப் புதல்விகளும் உறவினர்களும் உள்ளனர்; ஆனால், அவர்கள் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. எனவே, அவரது பிள்ளைகள், நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் அல்லது அவர்களைப் பற்றி அறிந்தவர்கள் யாராவது இருந்தால், தயவுசெய்து எங்களைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்புக்கு:
உஷா லட்சுமிநாராயண், பவன் ஷெட்டி" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இதை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள நெட்டிசன்கள், மரணத்தைவிடவும் கொடுமையானது என்ன தெரியுமா?, ஒருவர் இறந்துவிட்ட நிலையில் அவரைப் பற்றிய தகவலை அறியக்கூடிய நெருங்கிய உறவினர்கள் யாரும் தொடர்பில் இல்லாதிருப்பது தான்.. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளனர்.
இன்னும் சில நெட்டிசன்கள், மனித வாழ்க்கை குறித்தும் கேள்விகளை எழுப்பி உள்ளனர்.இன்றைய சூழலில் பணம் தான் பிரதானம் என்று எல்லாருமே சம்பாதிப்பதற்காக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். பணம் மட்டுமே பிரதானமாக இருப்பதால் உறவுகளின் மதிப்பை பலர் கண்டுகொள்வது இல்லை. பெற்ற தாய் தந்தையை பிரிந்து வெளிநாடுகளில் அல்லது வெளிமாநிலங்களில் வாழும் மகன்கள் மற்றும் மகள்கள்,அவர்களின் மரணத்திற்கு கூட வர முடியாத நிலையில் இருக்கிறார்கள் என்பது உண்மையில் மிகவும் கசப்பானது. அதேபோல் பெற்ற தாயை தனியாக தவிக்கவிட்டு விட்டு, அவர்கள் குடும்பத்துடன் இருக்கிறார்கள். அக்கம் பக்கத்தினருக்கு கூட இவர்களை பற்றி தெரியாமல் வாழ்கிறார்கள் என்பதுவும் மோசமானது என்று நெட்டிசன்கள் விமர்சிக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications
