தனுஷ் பாதுகாவலர்களால் தூக்கி வீசப்பட்ட ரசிகர் வெளியிட்ட வீடியோ.. அப்போ என்ன நடந்தது என உருக்கம்!
சென்னை: சமீபத்தில் ஓம் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் தனுஷ் உடன் செல்ஃபி எடுக்க ஆசைப்பட்ட ரசிகர் ஒருவரை பாதுகாவலர்கள் தூக்கி வீசி வெளியேற்றிய வீடியோ பெரிய அளவில் விமர்சனங்களை ஏற்படுத்தியது. அந்த சம்பவம் நடந்த போது தனுஷ் பக்கத்திலேயே இருந்தும் எதுவும் செய்யாமல் அமைதியாக இருந்தது ஏன்? என்று பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர். இப்போது அந்த வீடியோவில் இருந்த ரசிகர் கௌதம், "தனுஷை யாரும் தவறாக நினைக்க வேண்டாம்" என்று கூறி ஒரு வீடியோ பதிவை வெளியிட்டு இருக்கிறார்.
ஓம் பட சர்ச்சை
தனுஷ் "ஓம்" படத்தில் பிரமோஷனில் பேசும்போது, "எல்லோருக்கும் இதயம் லப் டப் என்ற துடிக்கும். ஆனால் எனக்கு மட்டும் பேன்ஸ்... பேன்ஸ் என்று துடிக்கும்" என பேசி இருந்தார். ஆனால் அவர் கண் முன்பே செல்பி எடுக்க ஆசைப்பட்ட ரசிகரை தரதரவென இழுத்து பாதுகாவலர் தூக்கி வீசியதுதான் பெரிதாக பேசப்பட்டது.

ரசிகரை தாக்கிய பாதுகாவலர்கள்
இந்த வீடியோ வைரலாகி வந்ததை தொடர்ந்து சம்பந்தப்பட்ட ரசிகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், "என் பெயர் கௌதம். ஹைதராபாத்தில் இருக்கிறேன். தனுஷ் சாருடன் நான் ஒரு போட்டோ எடுத்தேன். ஆனால் அப்போது என்ன நடந்தது என்று தெரியாமல் சிலர் ஒரு சின்ன வீடியோ கிளிப்பை வைத்து தவறாக, உங்கள் மனதில் நினைத்ததை எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் எவ்வளவு வெறுத்தாலும் நான் தனுஷுக்கு ரசிகராகவே இருப்பேன். ஏனென்றால் என்னுடைய தலைவர் யார் என்பது எனக்கு தெரியும். தலைவர் மீது நான் எப்போதும் அன்போடு இருப்பேன்" என்று அந்த வீடியோவில் அவர் பேசியிருக்கிறார்.
ரசிகர் வெளியிட்ட வீடியோ
மேலும், தனுஷ் உடன் எடுத்த சர்ச்சைக்கு உரிய செல்பி போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து, "நான் செல்ஃபி தான் கேட்டேன். நான் கடந்த 10 ஆண்டுகளாக தனுஷ் அண்ணாவின் தீவிர ரசிகன். தனுஷ் அண்ணா மீதான தவறை கண்டுபிடிக்க, ஒவ்வொரு புள்ளியிலும் ஏன் தொடர்ந்து தேடிக் கொண்டு இருக்கிறீர்கள். தனுஷ் அண்ணா எப்போதும் ஒன்றை சொல்வார், நான் யாரென்று என்னுடைய குடும்பத்துக்கு தெரியும். ரசிகர்களுக்கு தெரியும், என் கடவுளுக்கு தெரியும் என அடிக்கடி சொல்வார். ஓம் நமச்சிவாய..." என்று எழுதி இருக்கிறார்.

ரசிகரின் பதிவு
அந்த ரசிகரின் இந்த பதிவு மீண்டும் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. ஒரு ரசிகர் செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டு சென்றது, அவரை பாதுகாவலர்கள் வெளியேற்றியது என அந்த வீடியோவில் நடந்த விஷயங்கள் தனுஷை சுற்றி விமர்சனங்களை உருவாக்கின. ஆனால் தற்போது அந்த ரசிகரே தனுஷை தவறாக நினைக்க வேண்டாம் என்று கூறியிருப்பது விவாதத்தை வேறு பக்கமாக திருப்பி இருக்கிறது. அந்த ரசிகர் தனுஷை 10 ஆண்டுகளாக ரசித்து வருவதாகவும் ஒரு செல்பி எடுக்க வேண்டும் என்று ஆசையில் தான் போயிருந்தேன் என்று கூறி இருக்கிறார்.
இந்த வீடியோவை வைத்து தனுஷ் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதே நேரத்தில் ரசிகர்களுடன் நடிகர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி இருக்க வேண்டும்? விவாதிக்கப்பட்டு வருகிறது. தனுஷ் மீது விமர்சனங்கள் வருவது புதிதல்ல. ஆனால், ஒரு சம்பவம் வைரலானதும் அதில் சம்பந்தப்பட்ட ரசிகரே விளக்கம் கொடுத்து தனுஷை தவறாக நினைக்க வேண்டாம் என்று சொல்வது இந்த விவாகரத்தில் கவனிக்கப்படும் விஷயமாக மாறி இருக்கிறது.




Click it and Unblock the Notifications
