ஆப்கானில் இருந்து வெளியேறியது புத்திசாலித்தனமான, சிறந்த முடிவு..டிரம்புக்கு, அதிபர் ஜோ பைடன் பதிலடி!
வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா படைகள் வெளியேறியது புத்திசாலித்தனமான முடிவு என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தது.
ஆப்கான் அரசை, ராணுவத்தை முறியடித்து அதிரடியாக ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். இதனை தொடர்ந்து 2001ம் ஆண்டு முதல் தொடர்ந்து 20 ஆண்டுகளாக நிலை நிறுத்தப்பட்டு இருந்த அமெரிக்க ராணுவ வீரர்கள் முழுமையாக ஆப்கானில் இருந்து வெளியேறி உள்ளனர்.

இது முட்டாள்தனம்
இதனால் பல ஆயிரம் கோடி மதிப்பிலான ஹெலிகாப்டர்கள், பாதுகாப்பு தளவாடங்களை அமெரிக்க வானுவம் ஆப்கானிலேயே விட்டுச் சென்று விட்டது. அமெரிக்க வரலாற்றில் ஒருபோதும் போரிலிருந்து விலகுவது இவ்வளவு மோசமாக கையாளப்படவில்லை. இந்த பலவீனமான திரும்பப் பெறுதல் போன்ற முட்டாள்தனத்தை இதுவரை யாரும் நினைத்ததில்லை என்று அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தை முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சனம் செய்தார்.

ஜோ பைடன் உரை
ஜோ பிடனின் வெளியுறவுக் கொள்கையின் தாக்கங்கள் அமெரிக்காவிற்கு பேரழிவை ஏற்படுத்தலாம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் அமெரிக்க தூதரக அதிகாரி நிக்கி ஹேலியும் கணடனம் தெரிவித்தார். ஆப்கானில் அமெரிக்காவின் பின்வாங்கல் ஜோ பைடன் அரசுக்கு தோல்வி என்று பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியது புத்திசாலித்தனமான முடிவு என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

சிறந்த முடிவு
இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அதிபர் ஜோ பைடன் பல்வேறு விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக பேசியதாவது:- நான் உங்களுக்கு என் வார்த்தையை அளிக்கிறேன்: என் முழு இருதயத்தோடும், இது சரியான முடிவு, புத்திசாலித்தனமான முடிவு மற்றும் அமெரிக்காவிற்கு சிறந்த முடிவு என்று நம்புகிறேன். ஆப்கானிஸ்தானில் போர் இப்போது முடிந்துவிட்டது. இந்தப் போரை எப்படி முடிவுக்குக் கொண்டுவருவது என்ற பிரச்சினையை எதிர்கொண்ட நான்காவது ஜனாதிபதி நான். இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அமெரிக்கர்களுக்கு ஒரு உறுதிமொழி அளித்தேன்; அதை மதித்தேன்.

உறுதி அளித்தேன்.
அமெரிக்க மக்களின் முக்கிய தேசிய நலனுக்கான சேவையில் இல்லாத ஒரு போரில் தொடர எந்த காரணமும் தேவையில்லை. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் போது, இந்த போரை முடிவுக்கு கொண்டுவருவேன் என்று அமெரிக்க மக்களுக்கு உறுதி அளித்தேன். இன்று அந்த உறுதிப்பாட்டை மதிக்கிறேன். அமெரிக்க மக்களுடன் மீண்டும் நேர்மையாக இருக்க வேண்டிய நேரம் இது. ஆப்கானிஸ்தானில் ஒரு வெளிப்படையான பணியில் எங்களுக்கு இனி ஒரு தெளிவான நோக்கம் இல்லை.

புதிய சவால்கள்
ஆப்கானிஸ்தானில் 2 டிரில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் செலவழித்து இருக்கிறோம்.பிரவுன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்ட செலவு ஆப்கானிஸ்தானில் 20 வருடங்களுக்கு ஒரு நாளைக்கு 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று கூறுகிறது. நமது மக்களின் முக்கிய தேசிய நலனுக்கான சேவையில் இல்லாத ஒரு போரில் தொடர நான் மறுத்துவிட்டேன். உலகம் மாறுகிறது. அமெரிக்கா புதிய சவால்களை எதிர்கொள்கிறது.

சீனாவுடன் போட்டி
நாம் சீனாவுடன் கடுமையான போட்டியில் ஈடுபட்டுள்ளோம். ரஷ்யாவுடன் பல முனைகளில் சவால்களை எதிர்கொள்கிறோம். சைபர் தாக்குதல்கள் மற்றும் அணு ஆயுத பரவலை எதிர்கொள்கிறோம், இந்த புதிய சவால்களை எதிர்கொள்ள அமெரிக்காவின் போட்டித்தன்மையை நாம் அதிகரிக்க வேண்டும்.ஆப்கானிஸ்தானில் மற்றொரு தசாப்தத்தில் அமெரிக்கா சிக்கிக்கொள்வதை விட இந்த போட்டியை அமெரிக்கா அதிகம் விரும்புகிறது. இவ்வாறு ஜோ பைடன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications