• search
keyboard_backspace

பிறமாநிலத்தவர் நகரின் மத்தியில் வாழ்கின்றனர்-பூர்வகுடிகளை குடியிருப்பில் இருந்து துரத்துவதா? சீமான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை தீவுத்திடல் சத்தியவாணி முத்துநகர் பகுதி மக்களை வெளியேற்றுவதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சீமான் இன்று வெளியிட்ட அறிக்கை:

சென்னை தீவுத்திடல் அருகே சத்தியவாணி முத்துநகர், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் நீண்ட காலமாக நிலைத்து வாழ்ந்து வரும் 3,500 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பூர்வகுடி தமிழர்களை, அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயற்சிக்கும் தமிழக அரசின் செயல் அதிர்ச்சியளிக்கிறது.

Seeman condemns eviction of Chennai Sathyavani Muthu Nagar People

எவ்வித முன்னறிவிப்புமின்றிக் காலங்காலமாக வாழ்ந்து வரும் தொல்குடி மக்களின் வாழ்விடங்களை இடித்துத் தரைமட்டமாக்கியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

தமிழகத்தின் தலைநகராக விளங்கும் சென்னை மாநகரில் மக்கள் குடியேற்றத்தினால் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் இடநெருக்கடியை சமாளிக்க ஒவ்வொரு முறையும் குடிசைப்பகுதியில், நீண்டகாலமாக வசிக்கின்ற ஏழை, எளிய தொல்குடி தமிழர்களை அவர்களின் வாழ்விடத்திலிருந்து தொடர்ச்சியாக வெளியேற்றுவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

சென்னையில் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எவ்வித தடையுமின்றி, நிரந்தர வசிப்பிடம் பெற்று, பாதுகாப்பாக அனைத்து வசதிகளும் நிறைந்த நகரின் முக்கியப் பகுதிகளில் குடியேறி வாழ முடிகிறது. ஆட்சி, அதிகாரத்தைச் சேர்ந்தவர்களும், மேல்தட்டு வர்க்கத்தினரும் சென்னையின் நூற்றுக்கணக்கான நீர்நிலைகளையும், புறம்போக்கு நிலங்களையும் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட வசிப்பிடங்களில் அங்கிருந்து அப்புறப்படுத்தபடாமலும், எவ்வித அதிகார அச்சுறுத்தல்களுக்கு ஆளாகாமலும் நிலைத்து வாழ முடிகிறது.

ஆனால், எதிர்த்துக் கேள்விகேட்க அறியாத பாமரர்களாகிய குடிசைப்பகுதிகளில் வசிக்கும் பூர்வக்குடி தமிழர்களை மட்டும் எளிதாக விரட்டியடிப்பதும், அவர்களின் பூர்வீக இடத்திலிருந்து வெகுதூரத்தில், நகரத்திற்கு வெளியே துரத்தியடித்து வாழ்வாதாரத்தை அழித்தொழிப்பதென்பது அரச கொடுங்கோன்மையின் உச்சமாகும்.

'ஸ்மார்ட் சிட்டி' எனும் பெயரில் நவீன நகரங்களை உருவாக்க முனைபவர்கள் நவீன கிராமத்தை உருவாக்கி கிராமங்களிலேயே கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தந்து, நகரத்தை நோக்கி மக்கள் இடம்பெயர்வதைத் தடுக்காமல் விட்டதன் காரணமாகவே நகரம் பிதுங்கி வழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

எதிர்காலத்தேவையைக் கருத்தில்கொண்டு சென்னை மாநகரின் உள்கட்டமைப்பைச் செழுமைப்படுத்த தவறியதாலும், மிதமிஞ்சிய ஊழல் மற்றும் இலஞ்சம் நிறைந்த ஐம்பதாண்டு காலத் திராவிட ஆட்சிகளின் காரணமாகவும் சென்னை அதன் தனித்தன்மையை இழந்து வாழத்தகாத நகரமாக மாறிவருகிறது.

மேலும், நிலம், நீர் , காற்று ஆகியவை முற்றாக மாசுபட்டு, சுற்றுச்சூழல் சீர்கெட்டுக் கோடைக்காலத்தில் கடும் வறட்சியும், மழைக்காலத்தில் பெருவெள்ளமும் ஏற்பட்டு தவிக்கும் நிலைக்குத் தலைநகர் தள்ளப்பட்டுள்ளது. ஆட்சியாளர்கள் தாங்கள் செய்தத் தவறினை மறைக்க, அப்பாவி பூர்வகுடித் தமிழர்களை வெளியேற்றி தண்டிப்பதென்பது வாக்களித்து ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த மக்களுக்குச் செய்யும் வரலாற்றுப் பெருந்துரோகமாகும்.

ஆகவே, சென்னை தீவுத்திடல் அருகே சத்தியவாணி முத்துநகர், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் நெடுங்காலமாக வசித்துவரும் தொல்குடி தமிழர்களின் குடிசைகளை எவ்வித முன்னறிவிப்புமின்றி அகற்றி, அவர்களை அப்புறப்படுத்தும் முடிவை தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.

மேலும் அவர்கள் வசிக்கும் பகுதிகளிலேயே பாதுகாப்பான, நிரந்தர வசிப்பிடங்களை உருவாக்கித் தரவேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

English summary
Naam Tamilar Chief Seeman has condemned the eviction of the Chennai Sathyavani Muthu Nagar People.
Related News
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Just In