திருவண்ணாமலையில் நாளை காலையில் பரணி தீபம் 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம்..குவியும் பக்தர்கள்
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் நாளை அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட உள்ளது. மலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுவதை தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். சிறப்பு பேருந்துகளும், சிறப்பு ரயில்களும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் இன்று திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகிறது.
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் மலையே சிவனாக வணங்கப்பட்டு வருகிறது. பவுர்ணமி மற்றும் கார்த்திகை தீப நாட்களில் பல லட்சம் பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர். சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சி கொடுத்ததால் திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
திருமாலுக்கும், பிரம்மனுக்கும் இடையே யார் பெரியவர் என்ற போட்டியில் அடிமுடி காண முடியாத அக்னி பிழம்பாக காட்சியளித்ததாக ஐதீகம். அந்த நாளே கார்த்திகைதீப திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரியும் பஞ்சமூர்த்திகள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் உலா வருகின்றனர். சனிக்கிழமையன்று மகா தேரோட்டம் நடைபெற்றது. கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் பரணி தீபம், அண்ணாமலையார் தீபம்,விஷ்ணு தீபம் உள்ளிட்ட ஐந்து தீபங்கள் ஏற்றப்படும்.
டிசம்பர் 6ஆம் தேதி அதிகாலையில் பரணி தீபம் அண்ணாமலையார் கருவறையில் ஏற்றப்பட்டு, பின்னர் அர்த்த மண்டபத்தில் ஐந்து தீபங்களாக அவை காண்பிக்கப்படும். நாளை மாலை 2,668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இந்த தீபாமானது தொடர்ந்து 10 நாட்கள் அணையாமல் எரியும்.

கொப்பரைக்கு சிறப்பு பூஜை
தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. மகா தீப பஞ்சலோகத்தால் ஆன தீப கொப்பரைக்கு 300 கிலோ எடை கொண்டதாகும். நாளை மலை உச்சியில் தீபம் ஏற்றப்படவுள்ள நிலையில், இன்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொப்பரையை ஊழியர்கள் மலை உச்சிக்கு கொண்டு சென்றனர். இந்த தீப கொப்பரையில் நாளை மாலை மகா தீபம் ஏற்றப்படும்.

மலை மீது மகாதீபம்
நாளை மாலை 6.00 மணிக்கு தீபங்களை மேள தாளத்துடன் வெளியே எடுத்துவந்து கொடிக் கம்பம் அருகேயுள்ள அகண்ட தீப கொப்பரையில் ஒன்றுசேர்த்து எரிய விடுவார்கள். அந்த நிமிடத்தில் அர்த்தநாரீஸ்வரர் வெளிவந்து காட்சி கொடுத்துவிட்டு உடனே உள்ளே சென்றுவிடுவார். இது இரண்டு நிமிட தரிசனம்தான். அப்போதே வாசல் வழியே பெரிய தீவட்டியை ஆட்டி மலைக்கு அடையாளம் காட்டுவார்கள். இதற்காகவே காத்திருந்தோர் மலைமீது உடனே மகாதீபம் ஏற்றிவிடுவர். மக்கள் கோஷமாக "அண்ணாமலைக்கு அரோஹரா' என முழக்கமிட்டு தரிசனம் செய்வார்கள். இதனையடுத்து வீடு முழுவதும் தீபமேற்றி மாவிளக்கேற்றி பூஜை செய்துவிட்டு விரதம் முடிப்பார்கள்.

சிறப்பு பேருந்துகள் இயக்கம்
மகா தீபத்திருவிழாவை முன்னிட்டு 2700 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளதாக முன்னதாகத் தகவல்கள் வெளியானது. பக்தர்களின் வருகையைப் பொறுத்து பேருந்துகளில் எண்ணிக்கை அதிகரிப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எத்தனை பேருந்துகள்
அதேபோல், விழுப்புரத்தில் இருந்து இன்று முதல் மூன்று நாள்களுக்கு 317 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திண்டிவனத்தில் இருந்து 82 பேருந்துகளும் புதுச்சேரியில் இருந்து 180 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. திருக்கோவிலூரில் இருந்து 115 சிறப்பு பேருந்துகள், கள்ளக்குறிச்சியில் இருந்து 200 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

சிறப்பு ரயில்கள் அயக்கம்
சென்னை கடற்கரை முதல் வேலூர் வரை இயக்கப்படும் ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து இன்று மாலை 6 மணிக்கு புறப்பட்டு, திருவண்ணாமலைக்கு நள்ளிரவு 12.05 மணிக்குச் சென்றடையும். அதேபோல மறுமார்க்கமாக நாளை முதல் டிசம்பர் 8ஆம் தேதி வரை திருவண்ணாமலையில் இருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில்
ஏற்கெனவே திருவண்ணாமலை தீபத்திருவிழாவுக்காக தாம்பரத்தில் இருந்து டிசம்பர் 6, 7 தேதிகளில் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தில் காலை 8.40க்கு புறப்படும் சிறப்பு ரயில் பிற்பகல் 12.15க்கு திருவண்ணாமலையை சென்றடையும். தொடர்ந்து திருவண்ணாமலையிலிருந்து பிற்பகல் 1.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மாலை 5.30 மணிக்கு தாம்பரம் வந்து சேரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

3000 கிலோ பசு நெய்
ஏழடி உயரமுள்ள செப்புக் கொப்பரையில் தான் மகாதீபம் ஏற்றப்படுகிறது. 3,000 கிலோ பசுநெய், 1,000 மீட்டர் காடாதுணி திரி, 2 கிலோ கற்பூரம் இட்டு தீபம் ஏற்றுவார்கள். தீபம் ஏற்றும் உரிமையுடையோர் மீனவ இன பரத்வாஜ குலத்தவர்கள்தான். இவர்களின் பரம்பரையினர்தான் இப்போதும் தீபம் ஏற்றுகிறார்கள். நாளைய தினம் மலை மீது ஏற்றப்படும் மகாதீபம் 11 நாட்கள் எரியும். இரவில் பத்து கிலோமீட்டர் தூரம் வரை தெரியும். மகா தீப திருவிழாவை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications