திருவாதிரை நாளில் களி சாப்பிட வந்த சிதம்பரம் நடராஜர்..ஆருத்ரா தரிசன அற்புதங்கள்
மதுரை: ஆருத்ரா தரிசன நாளில் திருவாதிரை களி செய்து சிவபெருமானுக்கும் நடராஜருக்கும் நைவேத்தியம் செய்வார்கள். மார்கழி திருவாதிரை நாளில் களி படைப்பது ஏன் என்பது பற்றி சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன.
திருவாதிரைக்கு ஒருவாய் களி என்றொரு புகழ்பெற்ற வாசகம் உண்டு. திருவாதிரை விரதம் இருந்து நாளைய தினம் களி சமைத்து நடராஜ பெருமானுக்கு நைவேத்தியம் செய்து விரதத்தைப் பூர்த்தி செய்வார்கள் பக்தர்கள். ஆருத்ரா தரிசன நாளில் நடராஜருக்கு களி சமைத்து நிவேதனம் செய்யப்படுவதற்கு ஒரு சுவையான கதை ஒன்று உள்ளது. பக்தன் சமைத்து கொடுத்த களியை இறைவனே சுவையாக உண்ட சம்பவமும் சிதம்பரத்தில் நடந்துள்ளது.
நடராஜருக்கு ஆண்டுக்கு ஆறு முறை திருமஞ்சனம் நிகழ்த்தப்படுகிறது. சித்திரை மாத திருவோணம், ஆனி மாத உத்திரம், மார்கழி மாத திருவாதிரை ஆகிய நாட்களில் நிகழ்த்தப்பெறும் திருமஞ்சனங்கள் நடசத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து நடத்தப்படுவன. மாசி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் வளர்பிறை சதுர்த்தசி யில் திருமஞ்சனம் நடக்கும்.

நடராஜருக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை. இது உஷ்ணம் மிகுந்த நட்சத்திரமாகும். அதோடு வெம்மை மிகுந்த சுடலையின் சூடான சாம்பலை திருமேனியில் தரித்து, எப்போதும் திருக்கரத்தில் அக்னியையும் ஏந்தியிருப்பதால் நடராஜர் கடுமையான வெப்பத்தால் சூழப்பட்டிருக்கிறார். இந்த வெப்பத்தை தணிக்க வருடத்திற்கு ஆறுமுறை அவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இவற்றில் ஆனி திருமஞ்சனம் தனிச் சிறப்புடையது.
ஆடி முதல் மார்கழி வரை தேவர்களின் இரவு பொழுதாகக் கருதப்படுகிறது. கடைசி பகுதியான மார்கழி மாதம் தனுர் மாதம் என போற்றப்படுகிறது. இது தேவர்களின் பிரம்மமுகூர்த்த காலமாகும். இந்த மாத திருவாதிரை நட்சத்திர தினத்தன்று தேவர்கள் இறைவனுக்கு மாலை நேர பூஜை செய்வதாக ஐதீகம். அப்போது சிவன் கோயில்களில் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. களி சமைத்து இறைவனுக்கு நைவேத்தியம் செய்வார்கள். இந்த களி சமைப்பதன் பின்னணி என்ன என்பதை பார்க்கலாம்.
களி என்பது ஆனந்தம் என்றும் பொருள் தரும். அஞ்ஞானம் அகன்று மெய்ஞானம் தோன்றிய நிலையில் ஆன்மா ஆனந்த நிலையில் இருக்கும். சத், சித் ஆனந்தம் கிட்டும் என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்ததே திருவாதிரைக் களி நிவேதனம் ஆகும்.

சிதம்பரத்திற்கு அருகே உள்ள ஒரு ஊரில் சேந்தனார் என்றொரு விறகுவெட்டி இருந்தார். அவர் சிறந்த சிவபக்தர். தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்துப் பின் தான் சாப்பிடுவார். ஒரு நாள் அதிகமாக மழை பெய்து விறகுகள் ஈரமாகி விட்டன. அதனால் அன்று அவரால் விறகு விற்க முடியவில்லை. சேந்தனாரிடம் அரிசி வாங்க காசு அவரிடம் இல்லை. எனவே அன்று கேழ்வரகில் களி செய்து சிவனடியாரை எதிர்பார்த்திருந்தார். சோதனையாக யாரும் அன்று வரவில்லை.
சிவ பக்தர் வராமல் மனம் வாடிப்போனார் சேந்தனார். தனது பக்தன் மனம் நோக விடுவாரா இறைவன். சிதம்பரம் நடராஜப் பெருமானே சிவனடியார் வேடத்தில் சேந்தனார் வீட்டுக்கு வந்தார். உடனே மகிழ்ச்சியடைந்த சேந்தனார் சமைத்த களியை சிவனடியாருக்குப் படைத்தார். சிவனடியார் களியை மிக விருப்பமுடன் சாப்பிட்டதோடு மிச்சமிருந்த களியையும் தனது அடுத்த வேளை உணவிற்குத் தருமாறு வாங்கிச் சென்றார்.
மறுநாள் காலையில் வழக்கம் போல் திலைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் கோயில் கருவறையைத் திறந்த போது நடராஜப் பெருமனைச் சுற்றி எங்கும் களிச் சிதறல்கள் இருந்தன. உடனே அரசருக்கு அறிவித்தார்கள். அரசர் அன்று இரவு தான் கண்ட கனவை எண்ணினார். கனவில் நடராஜப் பெருமான் தான் களியுண்ணச் சென்றதைத் தெரிவித்து இருந்தார். அதன்படி சேந்தனாரைக் கண்டு பிடிக்கும்படி அமைச்சருக்கு ஆணையிட்டார். ஆனால் அவரோ அன்று சிதம்பரம் நடராஜப் பெருமானின் தேர்த்திருவிழா நடந்துகொண்டிருந்தது. அதற்குச் சேந்தனாரும் வந்திருந்தார்.

சிவனைத் தேரில் அமர்த்திய பின், அரசர் உட்பட எல்லோரும் தேரை வடம்பிடித்து இழுத்தார்கள். மழைகாரணமாக சேற்றில் தேர் அழுந்திச் சிறிதும் அசையாது நின்றது. அரசர் மிகவும் மனவருந்தினார். அப்போது அசரீரியாக "சேந்தா நீ பல்லாண்டு பாடு" என்று கேட்டது. சேந்தனார் இறைவன் அருளால் "மன்னுகதில்லை வளர்க நம்பக்தர்கள் வஞ்சகர் போயகல" என்று தொடங்கி "பல்லாண்டு கூறுதுமே" என்று முடித்துப் பதின்மூன்று பாடல்கள் இறைவனை வாழ்த்திப் பாடினார். உடனே தேர் நகர்ந்தது.
இதைப்பார்த்த அரசனும் அமைச்சர்களும் அந்தணர்களும், சிவனடியார்களும் சேந்தனாரின் கால்களில் விழுந்து வணங்கினார்கள். அரசர் தாம் கண்ட கனவைச் சேந்தனாருக்குத் தெரிவித்தார். தனது வீட்டிற்குக் களி சாப்பிட நடராஜப் பெருமானே வந்தார் என்றதை அறிந்து சேந்தனார் மனமுருகினார். அன்றைய தினம் திருவாதிரை நாள் என்றும் எனவேதான் இன்றும் திருவாதிரை நாளில் நடராஜப் பெருமானிற்குக் களி படைக்கப்படுகிறது. திருவாதிரைக்கு ஒருவாய் களி என்று கூறுவதோடு களி சமைத்து நடராஜ பெருமானுக்கு நைவேத்தியம் செய்து விரதத்தைப் பூர்த்தி செய்வார்கள் பக்தர்கள். நாளைய தினம் திருவாதிரை நாளில் களி சமைத்து இறைவனுக்கு படைத்து அக்கம் பக்கத்தினருக்கு கொடுத்து விரதத்தை பூர்த்தி செய்வோம்.












Click it and Unblock the Notifications