“வாடா வா! நீதான் ஸ்டாலினா? நீதான் கருணாநிதி பையனா.. எமர்ஜென்சி கொடுமைகளை பகிர்ந்த முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: 48 ஆண்டுகளுக்கு முன்னர் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை எனும் எமர்ஜென்சியால் சிறை கொடுமைகளை எதிர்கொண்டு சித்ரவதைகளை அனுபவித்து உயிரிழந்த ஜனநாயகவாதிகள் ஆயிரமாயிரம் பேர்! தமிழ்நாடும் அந்தப் பெருங்கொடுமையை எதிர்கொண்டது. தமிழ்நாட்டு தலைவர்களும் இந்திராவின் அவசரநிலை காலத்தில் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படு ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டனர்.
இன்றைய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், 1976-ம் ஆண்டு எமர்ஜென்சி அமலில் இருந்த போது மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அனுபவித்த சிறை கொடுமைகளை உயிர்மை இதழுக்கு பேட்டியாக கொடுத்திருந்தார். அந்த பேட்டியின் ஒரு பகுதி:

சத்தங்கள் அற்ற அமைதியான இரவு எட்டரை மணி வாக்கில்தான் ஆரம்பித்தது அந்தக் கொடுமை.. அப்போ பாதிப்பேர் தூங்கிட்டாங்க. மீதிப்பேர் பேசிட்டு இருந்தாங்க..அப்போதான் திடீர்னு 'ஐயா! ஆ! அம்மா!..' என்று அடிவயிற்றிலிருந்து பலர் அலறும் சத்தம்! அதைக் கேட்டுத்தான் ஏதோ பெரிய விபரீதம் நடக்கிறது என்று புரிந்தது. எங்களது அந்த ஒன்பதாம் பிளாக்கில் தங்கியிருந்தவர்களை ஒவ்வொரு செல்லாகப் போய் அவர்களை வெளியே வராந்தாவில் இழுத்துப் போட்டு, மற்ற செல்லில் இருப்பவர்களும் பார்க்கும்படி விளாசிக் கொண்டிருந்தார்கள்! சுருண்டு விழுந்தபடி, வயிற்றைப் பிடித்துக் கொண்டபடி ஒவ்வொருவரும் அடிவயிற்றிலிருந்து சத்தமெழுப்பிக் கதற, அந்தக் கதறல் அடித்தவர்களுக்கு இன்னும் வெறியூட்டி இருக்கும் போல.. இன்னும் சத்தத்துடன் அடிகள் விழுந்தன!..
கடைசி செல்லான 10ஆவது செல்லில் ஆரம்பித்து வரிசையாக ஒவ்வொரு செல்லில் இருந்தவர்களையும் இப்படியே இழுத்து வெளி வராந்தாவில் போட்டு மற்றவர்கள் பார்க்க அடித்துத் துவைத்துக் கொண்டிருந்தார்கள்..

சாதாரணமாக ஒரு விபத்து விஷயத்தில்கூட அந்த விபத்தில் அடிபடுபவரைவிட, அந்த விபத்தை அவர் எப்படி சந்தித்திருப்பார்.. அந்த சமயங்களில் அவருக்கு எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பார்க்கும் மற்றவர்களுக்குத்தான் அந்த விபத்து இன்னும் பயங்கரமாகத் தெரியும்!. மனித மனதின் இந்த பலவீன இயல்பைத் தெரிந்துகொண்டு கொடூரமான அந்த அடிகள் பற்றி ஒரு பெரிய பயத்தை எங்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்றே அந்த நள்ளிரவில் வரிசையாக ஒவ்வொரு அறையிலும் இருப்பவர்களை வெளியே மற்றவர்கள் பார்க்க இழுத்துப் போட்டு அடித்து மிதித்தார்கள்.
இதோ எட்டாவது செல் வந்தாகி விட்டது. அடுத்து நமக்குத்தான். இதோ அதற்கடுத்து..என்று அனைவரும் முதுகுத்தண்டு சிலீரிட அந்தக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். லத்தியால் அடித்த அந்த ஒவ்வொரு அடியும் நங்கு நங்கு என்று படு சத்தத்துடன் விழுந்தது. லத்திகள் முழுக்க கைதிகளின் பிய்ந்த சதைகள் ரத்தத்துடன் தொங்கிக் கொண்டிருந்தது பார்த்த பலரை இன்னும் நடுங்க வைத்தது!
இந்த இரவில் நான் மூன்றாவது செல்லுக்கு மாற்றப்பட்டிருந்தேன். அங்கே அன்றிரவு நான், ஆற்காட்டார், சிட்டிபாபு, நீல.நாராயணன், வி.எஸ்.கோவிந்தன் என ஐந்து பேர் இருந்தோம். ஐந்தாவது செல்...நாலாவது செல் என ஒவ்வொன்றாக முடிந்து அடுத்து எங்கள் செல்லின் அந்த இரும்புக் கதவு திறந்தது.

"வாங்கடா வெளீல..."என்று பெருங்குரல் வந்தது! அண்ணன் சிட்டி பாபு எதையும் வேகத்துடன் எதிர்த்து நிற்பவர். அவரே முன்னால் சென்றார்.
"வாடா, நீ தான் சிட்டிபாபுவா?" என்று அவர் கன்னத்தில் இறங்கியது அடி! தொடர்ந்து இதே மாதிரி பளீரென்று இறங்கின லத்தி அடிகள்..
ஆற்காட்டாருக்கும் அதே வரவேற்புதான். "நீதாண் வீராசாமியாடா?" என்று அவரை அடித்த அடிகளில் அவர் நெடுமரம்போல அப்படியே சாய்ந்து விட்டார்.

"வாடா வா! நீதான் ஸ்டாலினா? நீதான் கருணாநிதியோட பையனா?" என்று கண்களில் கொலை வெறியுடன் கேட்டபடியே ஒருவன் என் கன்னத்தில் இடி மாதிரி ஒரு அறைவிட, எனக்கு அப்படியே பார்வையே தட்டாமாலை சுற்ற ஆரம்பித்துவிட்டது. அடுத்தது லத்தியால் முழங்கையில் விழுந்தது முதல் அடி.. அவ்வளவுதான்! 'ஐயோ..' என்று நான் சுருண்டு முழங்கையைப் பிடித்தபடியே அப்படியே நினைவு இழந்து விழுந்துவிட்டேன். அப்புறம் எத்தனை அடிகள் விழுந்ததோ தெரியவில்லை. அப்புறம் அறையில் வைத்து எங்களைப் பூட்டின பின் என் செல் தோழர்கள் தண்ணீர் தெளித்து என்னை எழுப்பிய பின்புதான் நான் விழித்தேன்.
வாங்கிய அடியில் ஆளுக்கொரு பக்கம் உடம்பைப் பிடித்து முக்கி முனகியபடி இருந்தார்கள் அனைவரும்! அதிலும் சிட்டிபாபு அண்ணன், சுருண்டு மயக்கமாகி விழுந்து விட்ட என்மேல் அடிகள் எதுவும் விழக்கூடாது என்று என்மேலே குறுக்கே படுத்து அந்த அடிகளை முழுசாகத் தன்மேல் தாங்கிக் கொண்டிருந்திருக்கிறார்.
என் முகத்தை நசுக்க வந்த பூட்ஸ் காலைத் தன் உடம்பில் ஏந்தியிருக்கிறார். என்னை அடிக்க வந்தவர்கள் பூட்ஸால் நசுக்கி ஆத்திரத்தில் அவர்மேல் ஏறி மிதித்ததில், அவருடைய கல்லீரல் ரொம்ப பாதிப்படைந்து விட்டது (இந்த மரண அடிகளே அவருக்கு வினையாக முடிந்து அவர் இன்னுயிரை சிறையிலேயே பறித்துக் கொண்டது) அப்புறம் அங்கே நினைவற்று விழுந்து கிடந்த சிட்டிபாபு அண்ணனைத் தண்ணீர் தெளித்து எழுப்பி விட்டோம்! அந்த இடமே சுடுகாட்டின் மௌனத்தைவிட மோசமாக இருந்தது! என்ன பேசுவது? யாருக்கு யார் ஆறுதல் சொல்வது?
எல்லோருக்குமே பிரமை பிடித்தது போல ஆகிவிட்டது. இப்படித்தான் இனி தினமுமே இரவில் அடிகள் தொடருமோ என்று பய சந்தேகம் ஒருபுறம்.. யாருக்கும் எதுவும் புரியவில்லை. சிறைவிதிகளை எல்லாம் தூக்கி குப்பையில் கடாசி விட்டு இப்படி தன்னிச்சையாக நடக்கும் இந்த சிறையில் இனி அடுத்து என்ன நடக்குமோ என்று ஒவ்வொரு நிமிடமும் திகில் நிமிடங்களாகவே அனைவருக்கும் இருந்தது.
அந்த ஒன்பதாம் நம்பர் பிளாக்கில் கைதிகளாக இருந்த எங்களை இப்படிக் கொடூரமாக அடித்ததும்கூட ஒரு கைதிதான்..ஆயுள் கைதி..அவன் பேர் சுருளி.. சிறைக் காவலர்கள் ஆயுள் கைதிகளின் மன வெறுப்பையும் உடல் வலுவையும் பயன்படுத்தி எங்களை இப்படி அடிகளால் துவைத்துக் காயப் போட்டிருக்கிறார்கள்.
காலைக்கடன் முடிக்கக்கூட எழ முடியாமல் அடுத்த நாள் திணறினார்கள் பலர். எல்லோரையுமே சிறைக்குள்ளே இருக்கும் மருத்துவமனைக்கு வரச்சொல்லி எங்கள் காயங்கள் ஆற இங்க் போன்ற வயலெட் கலர் மருந்து போட்டு விட்டார்கள்.

காயங்கள் ஆறும்வரை வெளியே யாரையும் பார்க்கக் கூடாது என்பதாலேயே அதுவரை நாங்கள் எங்களது குடும்பத்தாரைச் சந்திக்க அனுமதிக்கவில்லை.
முதன்முதலில் சிறையில் என்னைப் பார்க்க என் மனைவியும் அம்மா உட்பட என் குடும்பத்தாரும் வந்தபோது கூட, அன்றைய தினம் சூபிரின்டெண்ட் வித்யாசாகர் என்னைக் கூப்பிட்டு 'இங்கே நடந்த எதையும் யாரிடமும் ஒரு சின்ன அளவில்கூட சொல்லக் கூடாது என்று எச்சரித்துதான் அனுப்பினார். என் சோர்வு வெளியே தெரியக்கூடாது என்று ஷேவ் பண்ண வைத்துக் கூட்டிப் போனார். ஆனால் என்னதான் இருந்தாலும் உண்மையை யாரால் மறைக்க முடியும்? இதுபோல் காட்டுமிராண்டித்தனமாகக் கைதிகளை, அதுவும் அரசியல் கைதிகளை அடித்ததுப் பற்றி பலரும் வெளியே பேச ஆரம்பிக்க அது பெரிய பிரச்னையானது அப்போது.. தவிர தி.மு.க.கட்சியும் இது குறித்து ஒரு கேஸ் போட்டது. அப்புறம்தான் சிறையில் என்ன நடக்கிறது என்றி விசாரிக்க டெல்லியிலிருந்து சிறைத்துறை உயரதிகாரிகள் சென்ட்ரல் ஜெயிலுக்கு எங்களை விசாரிக்க வந்திருந்தார்கள்.அப்போதும்கூட அந்த உயரதிகாரிகளிடம் யாரும் எதுவும் பேசக்கூடாது என்று கடுமையாக உத்தரவு போட்டிருந்தார்கள்.
ஆனால் முரசொலி மாறன் அத்தான் எதற்கும் பயப்படாமல் துணிந்து, இங்கு நடந்த அராஜகத்தை எல்லாம் அந்த உயரதிகாரிகளுக்கு விளக்கிச் சொன்னார். அவர் பேச ஆரம்பித்ததுமே மற்றவர்களும் தைரியத்துடன் பேச ஆரம்பித்தார்கள். 'எங்களுக்கு சிறை விதிகளின்படி எந்த அடிப்படை வசதியும் தருவதில்லை.. குறிப்பாக 24 மணி நேரமும் செல்லில் ஆடுமாடுகளைப் போல அடைத்து வைப்பதால் எங்களில் பலர் டாய்லெட் கூடப் போக முடியவில்லை. பல் தேய்க்க முடியவில்லை.. குளிக்க முடியவில்லை..' என்று சொன்னோம். அந்த உயரதிகாரிகள் அன்றே அந்தக் கட்டுப்பாட்டை நீக்கி விட்டார்கள். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்திருந்தார்.
(நன்றி உயிர்மை, https://dmk4tn.in/)












Click it and Unblock the Notifications