Dhanush: அப்பா டைரக்டர், ஆனால் இட்லி வாங்க காசு இல்லையா? பரிதாபங்கள் கோபி கேட்ட கேள்வி! தனுஷ் எமோஷனல்
சென்னை: நடிகர் தனுஷ் சமீபத்தில் நடந்த இட்லி கடை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், தான் சிறுவனாக இருந்தபோது பூ பறித்து, அதற்கு கிடைத்த கூலி காசில் இட்லி வாங்கிச் சாப்பிட்டதாகப் பேசியிருந்தார். இந்த விஷயம் இணையத்தில் பயங்கர வைரலானது. பலரும், "உங்க அப்பா அப்போவே இயக்குநரா இருந்தாரே, எப்படி இட்லி வாங்கக் காசு இல்லாம இருந்திருக்கும்?" என்று கேள்வி எழுப்பி, ஏகப்பட்ட மீம்ஸ்கள் போட்டுத் தனுஷை கேலி செய்தனர். இந்நிலையில், அதே இட்லி கடை படத்தின் விளம்பர நிகழ்ச்சியில், இந்த இட்லி கதை குறித்து தனுஷ் விளக்கம் அளித்திருக்கிறார்.

வைரலான இட்லி கதை
இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழாவில், "சின்ன வயசுல இட்லி சாப்பிடக் காசு இல்லாம கஷ்டப்பட்டேன்" என்று தனுஷ் பேசியிருந்தார். இந்த விஷயம் பெரிய அளவில் கேலி கிண்டலுக்கு ஆளானது. ஏனென்றால், தனுஷின் தந்தை அப்போதே ஒரு பிரபலமான இயக்குநர். அப்படியிருக்க, எப்படித் தனுஷுக்கு இட்லி சாப்பிடக் காசு இல்லாமல் இருந்திருக்கும் என்றுதான் பலரும் கேட்டனர். இந்த நிலையில் இட்லி கடை விளம்பர நிகழ்ச்சியில், சுதாகர் தனுஷிடம் நேரடியாகவே இந்தக் கேள்வியைக் கேட்டார். "இட்லி வாங்க காசு இல்லாம கஷ்டப்பட்டதா சொன்னீங்க. உங்க அப்பா அப்போவே இயக்குநராக இருந்தபோது எப்படி சார்?" என்று கேட்டதற்கு, தனுஷ் சிரித்துக்கொண்டே ஒரு தெளிவான பதிலைச் சொன்னார்.

"நான் 1983-ல் பிறந்தேன். எங்க அப்பா 1991-ல் தான் இயக்குநர் ஆனார். அந்த எட்டு வருஷமும் நாங்க வறுமையிலதான் இருந்தோம். 91-ல் இயக்குநர் ஆனாலும் கூட, 95-ம் வருஷம் வரைக்கும் கொஞ்சம் சிரமம்தான். நாலு பிள்ளைகளை படிக்க வைக்கணும், பார்த்துக்கணும் என்பது அப்பாவுக்குக் கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. 94, 95-ல் இருந்து தான் எங்க வாழ்க்கை ஓகேவாக மாறியது" என்று சொன்னார்.
தொடர்ந்து, "சின்ன வயசுல பக்கத்துல அப்பா இல்லை, அம்மா இல்லை, பாட்டிக்கிட்ட போய் எனக்கு அங்க போகணும், அது சாப்பிடணும், இது சாப்பிடணும்னு காசு கேட்டா, உடனே கொடுத்துவிட மாட்டாங்க. அதிலும் பட்ஜெட் வைத்து குடும்பம் நடத்தும்போது பிள்ளைகள் கேட்டதும் காசு கொடுத்துவிட முடியாது. நாங்க நாலு பேரும் வீட்டின் நிலைமையைப் புரிந்துகொண்டு, அவங்களுக்குப் பாரமாக இருக்கக் கூடாது என்று நினைப்போம். அதனால, வயலில் வேலை செய்து, அதில் கிடைக்கும் கூலியில் இட்லி வாங்கிச் சாப்பிடுவோம்" என்று வெளிப்படையாகப் பேசினார்.

மக்களின் கருத்து
தனுஷ் சொன்ன இந்தக் காரணத்தைக் கேட்ட ரசிகர்கள், "அவர் சொன்னது உண்மைதான். வசதி இல்லாத வீடுகளைச் சேர்ந்த 70ஸ், 80ஸ், 90ஸ் கிட்ஸுகள் அந்த காலத்தில் சிறு சிறு வேலைகள் செய்து தங்களுக்குப் பிடித்ததை வாங்கிச் சாப்பிட்டது உண்டு. அதை போய் பெரிதாக எடுத்துக்கொண்டுத் தனுஷை கிண்டல் செய்தது சரியில்லை. இனியாவது சும்மா சும்மா அவரைப் பற்றி மீம்ஸ் போட வேண்டாம்" என்று சமூக வலைத்தளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
இட்லி கடை படம் அக்டோபர் 1-ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இந்த இட்லி கதை படத்தின் விளம்பரத்துக்குப் பெரிய அளவில் உதவியுள்ளது.












Click it and Unblock the Notifications