பைசன் மட்டுமல்ல, டியூட் படமும் அசிங்கமா இருக்கு! அவங்க வீட்டில இப்படி பண்ணுவாங்களா? மோகன் ஜி ஆதங்கம்
சென்னை: இந்த ஆண்டு தீபாவளித் திரைப் போட்டி, வழக்கம் போல ரஜினி - கமல் அல்லது அஜித் - விஜய் என்று இல்லாமல், அடுத்த தலைமுறை நடிகர்களான பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்', துருவ் விக்ரமின் 'பைசன்', மற்றும் ஹரிஷ் கல்யாணின் 'டீசல்' ஆகிய மூன்று இளைஞர்களின் படங்களுடன் களமிறங்கியது. இந்த மூன்றுப் படங்களுமே நல்ல வரவேற்பைப் பெற்று, கோலிவுட்டுக்கு வெற்றித் தீபாவளியாக அமைந்தன. இந்த நிலையில் பைசன் மற்றும் டியூட் படத்தை பற்றி மோகன் கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.

இளைஞர்களின் கதைக்களத்தில் வெற்றி
ஹரிஷ் கல்யாணின் 'டீசல்' திரைப்படம் மற்ற இரண்டு படங்களைவிடக் குறைவான வரவேற்பைப் பெற்றாலும், அதுவும் பெரும்பாலும் நேர்மறையான விமர்சனங்களையே பெற்றது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் வந்த 'பைசன்' வழக்கம் போலத் தீவிரமான விஷயத்தைப் பேசியது. தென் மாவட்ட இளைஞர்களின் வாழ்வியலையும், மனநிலையையும் மாற்றும் வகையில், சாதி ஒற்றுமையைக் காத்திரமாகக் காட்டியிருந்ததால், மாரியின் முந்தையப் படங்களைப் போலவே, இந்தப் படமும் கொண்டாடப்பட்டது. வசூலிலும் இந்தப் படம் சக்கைப்போடு போட்டது, 50 கோடி வசூலைக் கடந்து துருவ் விக்ரமிற்கு முதல் அரைசதப் படமாக அமைந்தது.
டியூட் கதைக்களம்
சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கீர்த்திஸ்வரன் இயக்கிய 'டியூட்' திரைப்படம், காதலியைக் காதலனுடன் சேர்த்து வைக்கும் கதையாக இருந்தாலும், அதில் ஆணவக் கொலையை எதிர்த்துப் பேசிய விஷயம் பெரிய கவனத்தை ஈர்த்து படம் கொண்டாடப்படுவதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
முற்போக்கு கருத்துகளுக்கு வந்த எதிர்ப்பு
'பைசன்' மற்றும் 'டியூட்' என இவ்விருப் படங்களுமே சமத்துவம், முற்போக்கு போன்ற நல்ல விஷயங்களைப் பேசியதால், அவை ஒருதரப்பினருக்கு செட் ஆகவில்லை. குறிப்பாக, 'பைசன்' படத்தை எதிர்க்கிறேன் என்று சொல்லி 'டியூட்' படத்துக்குச் சென்றவர்கள், கீர்த்தியின் கதைக்களத்தால் சத்தம் இல்லாமல் செய்து அனுப்பப்பட்டனர் என்று பா ரஞ்சித் பேசியிருந்தார்.
மோகன் ஜியின் சர்ச்சை கருத்து
இந்நிலையில், 'திரௌபதி', 'பகாசூரன்' போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் மோகன் ஜி, 'டியூட்' படம் குறித்துக் களத்தில் குதித்து விமர்சனம் செய்திருக்கிறார். அவர் பேசுகையில், "டியூட் படத்தில் ஆணவக் கொலை பற்றிப் பேசியிருப்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால், புதுக் காதலருக்குப் பிறந்த குழந்தைக்கு, இன்னொருவரின் இனிஷியல் போட்டு, அவர்கள் இரண்டு பேரும் ஒன்றாகத் தங்க அவர் வீட்டிலேயே அனுமதி கொடுப்பதைப் பார்க்கும்போது அருவருப்பாக இருக்கிறது" என்று தெரிவித்தார்.
மோகன் ஜியின் கேள்வி
மேலும், "இப்படி ஒரு விஷயத்தை இயக்குநர் நியாயப்படுத்தியிருப்பது தவறு. இந்தப் படம் அடுத்த தலைமுறைக்குத் தவறான உதாரணம். இந்தப் படத்தில் சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தில் இப்படி ஒரு விஷயம் நடந்தால் ஏற்றுக்கொள்வீர்களா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது" என்றார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில், பலரும் சமூக வலைத்தளங்களில், "பெண்ணின் உணர்வுக்கும், அவள் மனதுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் எதையும் மோகன் ஏற்றுக்கொள்ள மாட்டார். அதில் ஏதோ ஒரு தவறை கண்டுபிடிப்பார் என்பதற்கு இது ஒரு உதாரணம்" என்று மோகன் ஜி-யைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
தீபாவளியின் வெற்றிப் படங்களான 'பைசன்' மற்றும் 'டியூட்' ஆகியவை பேசிய முற்போக்குக் கருத்துகள், திரையரங்குகளில் வசூலைக் குவித்தாலும், சமூகத்தில் இன்னமும் விவாதப் பொருளாகவே இருக்கின்றன.












Click it and Unblock the Notifications