தேவா மாதிரி யாரும் தம்பிகளுக்கு செய்ய மாட்டாங்க.. எங்க அண்ணன் இளையராஜா கூட! கங்கை அமரன் உருக்கம்
சென்னை: ஒருவருடைய திறமை அவர் இறந்த பிறகும் பேசப்படும், ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் மற்றவர்களுக்கு என்ன செய்தார்? தன்னுடன் இருந்தவர்கள் எப்படி நடத்தினார் என்பதெல்லாம் அவர் மறைந்த பிறகு தான் இன்னும் அதிகமாக வெளியே வரும். அப்படித்தான் இசையமைப்பாளர் தேவா மறைவுக்கு பிறகு அவரை பற்றி பல சுவாரஸ்யமான விஷயங்களை திரையுலகினர் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் கங்கை அமரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தேவாவை பற்றி பேசி இருக்கும் விஷயம் பலரையும் நெகிழ வைத்திருக்கிறது.
பொதுவாக கங்கை அமரன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர். சில நேரங்களில் அவருடைய பேச்சு சர்ச்சையாக மாறினாலும், சில நேரங்களில் அவர் காட்டும் பெருந்தன்மையும் கவனிக்கப்படும். அந்த வகையில் தேவாவை பற்றி அவர் வெளிப்படையாகவே பேசி இருக்கிறார். அதாவது அவர் பேசுகையில், "தேவா மாதிரி எந்த அண்ணனும் தம்பிகளுக்கு செய்ய மாட்டாங்க. ஏன், எங்க அண்ணன் இளையராஜா கூட அப்படி செய்ய மாட்டார். அந்த அளவுக்கு தேவா எல்லாருக்கும் செய்வார்" என கங்கை அமரன் சொல்லி இருக்கிறார்.

தேவா செய்த உதவிகள்
மேலும் அவர் பேசும் போது, எனக்கு எங்க அண்ணன் எதுவும் செய்ய வேண்டும் என்று கூட இல்லை. நான் அந்த நேரத்திலேயே பாடல்கள் எழுதிக் கொண்டிருந்தேன், இசை அமைத்துக் கொண்டிருந்தேன், படங்களும் இயக்க தொடங்கிவிட்டேன். அதனால் என்னுடைய பாதை தனியாக போய்க் கொண்டிருந்தது. ஆனால் தேவா அவருடைய தம்பிகளுக்கு எல்லா விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்வாரு. சம்பள விஷயமாக இருந்தாலும் சரி, வேலை கொடுப்பதாக இருந்தாலும் சரி அவர் யாருக்கும் பாகுபாடு பார்க்க மாட்டார்கள். எல்லோருக்கும் அவரவருக்குரிய பங்கை பிரித்து கொடுத்து விடுவார்.
யாராவது கலைஞர்கள் வேலை இல்லாமல் இருந்தால் உடனே தன்னுடைய இசைக் குழுவில் சேர்த்துக்கொள்வார். அவர்களுக்கு வேலை கொடுப்பார். அது மட்டுமல்லாமல் மற்ற இயக்குனர்களிடமோ, வேறு யாரிடமோ பேசி அவர்களுக்கு வாய்ப்பு வாங்கி கொடுப்பார். இப்படி எத்தனையோ பேருக்கு உதவி செய்திருக்கிறார்" என்று நெகிழ்ச்சியாக கங்கை அமரன் பேசி இருக்கிறார்.
இசைத்துறையில் வாய்ப்பு கிடைப்பது எவ்வளவு முக்கியம் என்பது அந்த துறையில் இருப்பவர்களுக்கு தான் தெரியும். ஒரு படத்தில் வேலை கிடைத்தால் அடுத்த படத்துக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்று எதிர்பார்ப்பில் பல கலைஞர்கள் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு தன்னுடைய குழுவில் இடம் கொடுப்பதுடன் நிறுத்திக் கொள்ளாமல், மற்றவர்களிடம் வாய்ப்பு கேட்டு கொடுத்து இருக்கிறார் தேவா என கங்கை அமரன் சொல்லி இருப்பது அவருடைய இன்னொரு முகத்தை நமக்கு காட்டுகிறது.
குடும்பத்தினருக்கு சப்போர்ட்
தேவாவின் குடும்ப பாசம் பற்றி கங்கை அமரன் நெகிழ்ச்சியுடன் பேசுகையில், எனக்கும் தேவாவுக்கும் சம்பந்தக்காரர் உறவு இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். நான் அவரை நன்றாகவே அறிவேன், அவருடைய மனைவி அவரை பார்த்து பார்த்து கவனித்துக் கொள்வார். குழந்தைகள், பேர குழந்தைகள், கொள்ளு பேர குழந்தைகள் வரை எல்லாரிடமும் ரொம்ப அன்பாக இருப்பார். குடும்பத்தின் மீது அவ்வளவு பாசம் வைத்திருந்தார். அவரை போல ஒருவரை பார்க்க முடியாது என்று பெருமையாக கங்கை அமரன் பேசியிருக்கிறார்.
தேவா மறைந்த செய்தி வெளியானதிலிருந்து அவருடைய இறுதி சடங்கு வரை கங்கை அமரன் தேவாவின் குடும்பத்தினருடன் இருந்தார். தேவாவின் உடலை அவருடைய சொந்த ஊரான ராணிப்பேட்டை மாவட்டம் சங்கரமல்லூரில் உள்ள பண்ணை தோட்டத்தில் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று யோசனையை தேவா மகன் ஸ்ரீகாந்திடம் கங்கை அமரன் சொன்னதாக ஸ்ரீகாந்த் வீடியோவில் பேசியிருந்தார்.
உண்மையான மரியாதை
நான் திக்கு தெரியாமல் தவித்துக் கொண்டு இருந்த சமயத்தில் கங்கை அமரன் தான் எனக்கு அட்வைஸ் சொல்லி வழி நடத்தினார், அதற்கு நன்றி என்று ஸ்ரீகாந்த் வீடியோ வெளியிட்டு இருந்தார். தேவா இறந்து சில மாதங்கள் கடந்து விட்டாலும் அவர் இசை அமைத்த பாடல்களை இன்றும் ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவருடன் வேலை பார்த்த இசை கலைஞர்களுக்கு வேலை வாங்கிக் கொடுத்தது, சம்பளத்தில் பாகுபாடு காட்டாமல் நடந்து கொண்டது, குடும்பத்தினரிடம் இருந்த பாசம் என கங்கை அமரன் பகிர்ந்து இருக்கும் விஷயம் தேவாவின் மனிதநேயத்தை நமக்கு காட்டி இருக்கிறது. ஒரு இசை அமைப்பாளராக மட்டுமல்லாமல் பலருக்கு ஆதரவாக இருந்த மனிதராகவும் தேவாவை பற்றி இப்போதும் பேசப்படுவது அவருக்கு கிடைத்திருக்கும் உண்மையான மரியாதை.




Click it and Unblock the Notifications
