கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!
சென்னை : சின்னத்திரை நடிகைகள் என்றாலே வசதியான வாழ்க்கை, பிரமாண்ட வீடுகள், லக்ஷுரி வாழ்க்கை என்று பலருக்கும் ஒரு பொதுவான எண்ணம் இருக்கிறது. ஆனால் அந்த எண்ணத்துக்கு முழுக்க மாற்றாக, தனது வாழ்க்கை அனுபவத்தால் பதில் சொல்லியிருக்கிறார் பிரபல நடிகை ரஷ்மி தேசாய்.
ஒரு காலத்தில் கடன் சுமையால் வீட்டையே இழந்து, தெருவில் கூட தங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட இவர், இன்று பல கோடி சொத்துகளுக்கு அதிபதியாக உயர்ந்திருக்கிறார் என்பதே பலரையும் ஆச்சரியப்படுத்தும் உண்மை.

சின்னத்திரையில் இருந்து ஸ்டார்டம் வரை
இப்போதெல்லாம் முன்னணி சேனல்களில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் 90 கிட்ஸ்களின் மனம் கவர்ந்த ஒரு சில சீரியல்கள் பலருக்கும் பேவரைட் ஆக இருந்தது. அதில் ஒரு சீரியல்தான் சிந்து பைரவி. இந்த சீரியலின் கதைப்படி இரண்டு குட்டி பெண்களின் ஸ்கூல் வாழ்க்கையில் தொடங்கி பிறகு அவர்களுடைய இளமை காலம் வரை ஒளிபரப்பானது. அந்த சீரியலில் வில்லியாக நடித்தவர்தான் ரேஷ்மி தேசாய்.
இந்தி மற்றும் போஜ்புரி மொழிகளில் தனது பயணத்தை தொடங்கிய ரஷ்மி தேசாய், 2000களில் ஒளிபரப்பான பல சீரியல்கள் மூலம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றார். குறிப்பாக குடும்ப கதைகளில் வில்லி மற்றும் உணர்ச்சி மிக்க கதாபாத்திரங்களில் நடித்தது அவருக்கு தனி அடையாளத்தை உருவாக்கியது.
திரைப்பட வாய்ப்புகளும் வந்தபோதும், சின்னத்திரைதான் அவரை ரசிகர்களுக்கு நெருக்கமாக்கியது. அந்த புகழே அவரை முன்னணி நடிகையாக உயர்த்தியது.
வாழ்க்கையை சிதைத்த கடன் சுமை
பிரபலமாக இருந்த காலத்திலேயே, தனது கனவு வீட்டை வாங்கியிருந்தார் ரஷ்மி தேசாய். ஆனால் அந்த முடிவு தான் பின்னர் அவருக்கு பெரிய சோதனையாக மாறியது. வீட்டு கடன் உட்பட சுமார் 3.5 கோடி ரூபாய் வரை கடன் சுமை அதிகரித்தது. ஒரு கட்டத்தில் வருமானம் குறைந்ததால், அந்த கடனை செலுத்த முடியாத நிலை உருவானது.
இதனால், அவர் வாங்கிய வீடு ஜப்தி செய்யப்பட்டு, வாழ இடமின்றி வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது.
தெருவில் தூக்கம்
இந்த கடினமான காலத்தை நினைவுகூரும் போது, ரஷ்மி தேசாய் கூறிய வார்த்தைகள் யாரையும் உருக்க வைக்கும் வகையில் இருக்கின்றன. "வீட்டை இழந்த பிறகு, நான்கு நாட்கள் தெருவிலேயே தூங்கினேன். என்னுடைய பொருட்களை என் மேனேஜர் வீட்டில் வைத்திருந்தேன். சில நேரங்களில் 20 ரூபாய் இருந்தால் தான் உணவு வாங்கி சாப்பிட முடிந்தது," என்று அவர் கூறியுள்ளார்.
ஒரு காலத்தில் திரையில் பிரகாசித்த நடிகை, வாழ்க்கையின் நிஜத்தில் இப்படிப் பட்ட சோதனைகளை சந்தித்தது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.
தொடர்ந்து சோதனைகள்
இந்த கடன் பிரச்சனையுடன் சேர்த்து, தனிப்பட்ட வாழ்க்கையிலும் சிக்கல்கள் வந்தன. குடும்பத்திலிருந்து விலகி வாழ வேண்டிய நிலை, அதே நேரத்தில் விவாகரத்து தொடர்பான பிரச்சனைகளும் அவரை மேலும் மனதளவில் பாதித்தன.
ஒரே நேரத்தில் பல பிரச்சனைகளை சந்தித்த அவர், வாழ்க்கையின் மிகக் கீழ்மட்டத்தை பார்த்ததாகவே கூறப்படுகிறது.
அதிர்ச்சியிலிருந்து அதிரடி கம்பேக்
ஆனால் அந்த தோல்வியில் நின்றுவிடவில்லை ரஷ்மி தேசாய். மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பி, தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். மெதுவாக வாய்ப்புகள் அதிகரிக்க, அவரின் வாழ்க்கையும் பாதை மாறத் தொடங்கியது. கடன்களை அடைத்து, மீண்டும் நிலைநிறுத்திக்கொண்டார்.
இன்று கோடிகளில் சொத்து
தற்போது, கோடிகளில் சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார் ரஷ்மி தேசாய். அவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 15 கோடி ரூபாயை தாண்டும் என கூறப்படுகிறது. மேலும், பிரமாண்டமான அடுக்குமாடி வீட்டில் வசித்து, லக்ஷுரி கார்களுடன் வாழ்ந்து வருகிறார்.
உண்மையான வாழ்க்கைப் பாடம்
திரையில் காணும் பிரகாசம் மட்டுமே ஒரு நடிகையின் வாழ்க்கை அல்ல என்பதை, தனது அனுபவத்தால் நிரூபித்துள்ளார் ரஷ்மி தேசாய். "கீழே விழுந்தாலும் மீண்டும் எழ முடியும்" என்ற நம்பிக்கைக்கு உயிர் கொடுக்கும் உதாரணமாக இவரின் வாழ்க்கை இருக்கிறது.
ஒரு காலத்தில் தெருவில் தூங்கியவர், இன்று கோடிகளில் செல்வம் கொண்டவராக உயர்ந்திருக்கிறார் என்பதே - முயற்சி இருந்தால் வாழ்க்கை எப்படி மாறும் என்பதற்கான உணர்வுபூர்வமான சாட்சியாகும்.












Click it and Unblock the Notifications