ஆர்யாவால் தான் என்னுடைய ஷாப் மூடிட்டேன்.. இன்னும் காசு தரல! சைவம் ரவி எமோஷனல்
சென்னை: நடிகர் ஆர்யாவால் என்னுடைய ஷாப் மூடிவிட்டேன் என்று சீரியல் நடிகர் சைவம் ரவி சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். ஆர்யா தன்னுடைய ஷாப்பில் அதிகமான கடன் வைத்திருந்ததால் தன்னால் ஷாப்பை தொடர்ந்து நடத்த முடியவில்லை அதனால் மூடிவிட்டேன் என்று கூறியிருக்கிறார். அதே நேரத்தில் ஆர்யா தனக்கு செய்த நல்லது பற்றியும் பேசி இருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.
விஜய் டிவி ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் கதாநாயகனின் அப்பாவாக நடிகர் சைவம் ரவி நடித்திருந்தார். அந்த சீரியல் முடிவடைந்த பிறகும் இப்போதும் பல சீரியலில் தொடர்ச்சியாக நடித்திருக்கிறார். அதே நேரத்தில் சினிமாவிலும் நடித்திருக்கிறார். சைவம் படத்தில் இவருடைய நடிப்பு எதார்த்தமாக இருந்தது. அந்த திரைப்படத்தின் மூலமாகத்தான் இவருக்கு சீரியலிலும் இப்போது வாய்ப்பு அதிகமாக வந்து கொண்டிருக்கிறது.

சமீபத்தில் கூட விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பனிவிழும் மலர் வனம் என்ற சீரியலிலும் முக்கிய கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். சீரியல் ஒரு பக்கம் நடித்துக் கொண்டிருந்தாலும் சினிமாவிலும் குணச்சித்திர வேடங்களில் சைவம் ரவி நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்து சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார்.
அதில், என்னுடைய வாழ்க்கையை மொத்தமாக மாற்றியது நடிகர் ஆர்யா தான். நான் ஒரு ஷாப் வைத்திருந்தேன். அந்த ஷாப்பிற்கு நடிகர் ஆர்யா வந்திருந்தார். அப்போது அங்கே நிறைய ஸ்டூடண்ட்ஸ் இருந்தார்கள். அந்த இடத்தில் ஆர்யா வந்ததுமே நான் இனி தினமும் இங்கே வருகிறேன் ஒரு அக்கவுண்ட் போட்டுக்கொள்ளலாமா என்று சொல்லி இருந்தார். நானும் பார்க்க பெரிய இடத்து பையன் போல இருக்கிறாரே அதனால் சரியாக காசு தந்து விடுவார் என்று சொல்லி என்னுடைய ஷாப்பில் இருந்த பையனிடம் இவர் பெயரில் ஒரு நோட்டு போடு என்று சொல்லி இருந்தேன்.
நாட்கள் செல்ல செல்ல பக்கங்கள் கூடிக்கொண்டே போனது பிறகு நான் என்னுடைய ஷாப் பையனிடம் நான் எத்தனை பக்கம் போயிருக்கிறது என்று கேட்டபோது அவர் ஒரு நோட்டு முடிந்து இரண்டாவது வந்து விட்டது என்று சொன்னார். நான் ஆர்யாவிடம் பணம் கேட்கும் போதெல்லாம் ஆர்யா நமக்குள் என்ன பணம் பாகுபாடு பார்த்துக் கொள்ளலாம் என்று ஜாலியாக சொல்லிவிடுவார். அவர் நடித்த நண்பேன்டா திரைப்படத்தில் அவர் எப்படி நண்பேன்டா என்று சொல்லிக் கொண்டு போவாரோ அதுபோல தான் என்னுடைய வாழ்க்கையிலும் விளையாடிக் கொண்டிருந்தார்.
ஆர்யா பல ஷோரூம் கடைகளை திறந்து வைத்திருக்கிறார். ஆனால் ஆர்யாவால் நான் என்னுடைய ஷாப்பை மூடிவிட்டேன். ஆர்யா எனக்கு மூன்று நோட்டுக்கு மேலாக கடன் தர வேண்டியது இருந்தது. இப்ப வரைக்கும் அந்த கடன் எனக்கு தரவில்லை. ஆர்யாவிடம் பணம் கேட்டு நான் சூட்டிங் நடக்கும் இடத்திற்கு போவேன். என்னிடம் அவர் ஜாலியாக பேசிக் கொண்டிருப்பார். ஒவ்வொரு முறையும் பணம் தரேன் என்று சொல்லுவார் ஆனால் தர மாட்டார்.
ஒருமுறை அப்படித்தான் அவர் மதராசபட்டினம் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். நான் அவரைப் பார்க்க அங்கு போயிருந்தேன். மதராசபட்டினம் திரைப்பட சூட்டிங் ஸ்பாட்டில் ஆர்யாவும் இயக்குனர் ஏ எல் விஜயும் பேசிக் கொண்டிருந்தனர். நான் அப்போது ஆர்யா பக்கத்தில் போய் நிற்க ஏஎல் விஜயிடம் ஆர்யா என்னை அறிமுகப்படுத்தி இவருக்கு ஒரு கேரக்டர் கொடுங்க என்று சொல்ல, விஜய் என்னை பார்த்துவிட்டு இவருக்கு இந்த படத்திற்கான கேரக்டர் கொடுக்க முடியாது.
இவருடைய ஸ்டைலை பார்ப்பதற்கு இந்த படத்திற்கு சரியானவர் போல இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் நான் ஆர்யாவின் கேரவனுக்குள் சென்று ஆர்யாவின் மேக்கப் மேனிடம் எனக்கும் முடி எல்லாம் வெட்டி விட சொல்லி நான் மதராசபட்டினம் படத்தில் எல்லோரும் இருந்த மாதிரி கெட்டப்போடு விஜய் பக்கத்தில் போய் நின்றேன். விஜய் அதிர்ந்து போய்விட்டார்.
நீங்க இப்படி மாறிட்டீங்களே என்று சொன்னார். ஆனாலும் உங்களுக்கு படத்தில் கொடுக்க கேரக்டர் எதுவும் இல்லை. ஏற்கனவே எல்லா கேரக்டரும் முடிவாகிட்டாங்க என்று சொன்னார். ஆனாலும் ஆர்யாவிடாமல் சொன்னதால் 15 நாட்கள் என்னை வைத்து சூட்டிங் எடுத்தார்கள். படம் வந்த பிறகு நான் பார்க்கும்போது சொடுக்கு விடும் நேரத்தில் என்னுடைய காட்சி போய்விட்டது. அது பற்றி நான் ஏஎல் விஜயிடம் கேட்கும் போது சார் ஏற்கனவே படம் லென்த்தாக இருந்தது. அதனால் வேறு வழி இல்லாமல் உங்களுடைய காட்சிகளை தூக்க வேண்டிய நிலைமை ஆகிவிட்டது என்று சொன்னார்.
அதற்கு பிறகு தான் விஜய் எனக்கு சைவம் படத்தில் வாய்ப்பு தந்ததால் அந்த படமும் எனக்கு நல்ல வரவேற்பையும் புகழையும் தந்தது. ஆர்யாவால் தான் நான் என்னுடைய ஷாப்பை மூடினேன். ஆனால் அவரால் எனக்கு ஏ எல் விஜயின் அறிமுகம் கிடைத்தது. அதனால் நான் இன்று சினிமாக்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன் என்று அந்த பேட்டியில் சைவம் ரவி பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications