அடுத்தடுத்து சர்ச்சையில் சூரி! மேடையில் தொகுப்பாளரிடம் கோபப்பட்டு சொன்ன வார்த்தை!
சென்னை: காமெடி நடிகராக அறிமுகமாகி, இப்போது கதாநாயகனாகவும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் சூரி. விடுதலை, கருடன், கொட்டுக்காளி என வித்தியாசமான படங்களைத் தேர்வு செய்து வந்தவர், மண்டாடி படத்துக்குப் பிறகு ஆக்ஷன் ஹீரோவாகவும் கவனம் ஈர்த்திருக்கிறார். ஆனால், படங்கள் பற்றிய பேச்சைத் தாண்டி சமீபகாலமாக சூரி பேசும் சில விஷயங்களும் சர்ச்சையாகி வருகின்றன.
இப்போது ஜெய் நடிக்கும் புதிய படத்தின் அறிமுக விழாவில் சூரி பேசிய விதம் இணையத்தில் விவாதமாகியிருக்கிறது. நிகழ்ச்சியில் நடந்தது என்னவென்றால், மேடைக்கு வந்த சூரியிடம் படக்குழுவினரை அறிமுகப்படுத்துவதற்காக ஒரு அட்டையைக் கொடுத்திருக்கிறார்கள். அப்போது தொகுப்பாளர், படத்தில் இருந்து யாரை மேடைக்கு கூப்பிட போகிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்.

கோபப்பட்ட சூரி
அதற்கு சூரி, "கார்டுல என்ன கொடுத்திருக்கீங்களோ அந்த பெயரைக் கூப்பிடுறேன். உன்னுடைய பெர்சனல் பெயரையெல்லாம் நான் கூப்பிட முடியாது. அதை நிகழ்ச்சி முடிச்சிட்டு கூப்பிடுறேன். இப்ப இங்க என்ன இருக்கோ அதை கூப்பிடுறேன்" என்று கோபமாகப் பேசியிருக்கிறார். இதையடுத்து, அட்டையில் ஹீரோ பெயர் இருக்கிறதா, இயக்குநர் பெயர் இருக்கிறதா என்று தெரிந்துகொள்வதற்காகத்தான் கேட்டதாக மற்றொரு தொகுப்பாளர் விளக்க முயன்றிருக்கிறார்.

சூரி சொன்ன வார்த்தை
அதற்கும், கூப்பிட்டதுக்குப் அப்புறம் தெரியும், யார் பேர் இருக்குன்னு என்று சூரி பதிலளித்திருக்கிறார். பின்னர் அந்தத் தொகுப்பாளர் அவரிடம் மன்னிப்பும் கேட்டிருக்கிறார். இந்த வீடியோ வெளியானதும், சூரி இப்படிக் கோபப்பட்டிருக்க வேண்டியதில்லை என்று சிலரும், நிகழ்ச்சியை நடத்துபவர்கள் கேள்வி கேட்ட விதத்தில்தான் பிரச்சினை இருக்கிறது என்று மற்றொரு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பரோட்டா சூரி சம்பவம்
சூரியை பொறுத்தவரை, அவர் பேசும் விஷயங்கள் விமர்சனத்துக்கு உள்ளாவது இது முதல் முறையல்ல. ஒரு பேட்டியில், "நான் பரோட்டா சூரி கிடையாது. சூரி என்ற பெயரில்தான் படத்தில் அறிமுகமானேன்" என்ற வகையில் அவர் பேசியது அப்போது சர்ச்சையானது. பல ஆண்டுகளாக அவரை ரசிகர்கள் அடையாளப்படுத்திய பெயரை அவர் மறுப்பது போல அந்தப் பேச்சு இருப்பதாக சிலர் விமர்சித்தனர். அதற்குப் பிறகும் சில பேட்டிகளில் இது பற்றி சூரியே விளக்கமும் கொடுத்து இருந்தார்.
இப்போது மண்டாடி படத்துக்கு பிறகு சூரியின் பேச்சுகளும் செயல்களும் அதிகமாகக் கவனிக்கப்படுகின்றன. முன்பு அவரை காமெடி நடிகராகப் பார்த்தவர்கள், இப்போது கதாநாயகனாகவும் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த மாற்றத்துடன் அவரைப் பற்றிய எதிர்பார்ப்புகளும் அதிகரித்திருக்கின்றன.

ரசிகர்கள் கருத்து
மேடையில் அவர் கோபப்பட்ட வீடியோவைப் பார்த்த சிலர், வெற்றிக்குப் பிறகு சூரியின் கேரக்டர் மாறிவிட்டதா என்று கேள்வி எழுப்புகிறார்கள். இன்னும் சிலரோ, ஒரு குறிப்பிட்ட வீடியோவை மட்டும் வைத்து ஒருவருடைய குணத்தை முடிவு செய்துவிட முடியாது என்கிறார்கள். உண்மையில், அந்த நிகழ்ச்சியில் என்ன நடந்தது, தொகுப்பாளர் கேட்ட கேள்வி சூரிக்கு ஏன் அப்படித் தோன்றியது என்பது குறித்து சூரியின் விளக்கம் வந்தால்தான் முழுமையாகத் தெரியும். ஒருவேளை பிராண்ட் பண்ணுவதற்காக கூட இப்படி பேசி இருக்கலாம் அதனால் இப்போதைக்கு வைரலாகும் வீடியோவை வைத்தே இரு தரப்பினரும் தங்களுடைய கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள்.
சூரி இத்தனை ஆண்டுகளாக உழைத்து கதாநாயகனாக உயர்ந்திருப்பது மறுக்க முடியாத விஷயம். அதேபோல, அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் இப்போது அதிகமாகக் கவனிக்கப்படுவதும் உண்மைதான். ரசிகர்கள் அவரிடம் எதிர்பார்ப்பது நல்ல படங்களை மட்டுமல்ல, அவருடைய பேச்சிலும் முன்பு பார்த்த எளிமை தொடர வேண்டும் என்பதுதான்.


Click it and Unblock the Notifications
