குழந்தையை பொத்தி வளர்க்கிறேன்..முத்தம் தர தடை..நீயா நானாவில் மாடர்ன் அம்மாக்களின் அட்ராசிட்டி
சென்னை: முத்தம் என்பது அன்பின் வெளிப்பாடு. குழந்தைகளை கொஞ்சும் போதே முத்தம் கொடுப்பார்கள். ஆனால் அந்த முத்தம் கூட கொடுக்கக் கூடாது, தொட்டு கொஞ்சக்கூடாது என்பது இன்றைய மாடர்ன் அம்மாக்களின் கண்டிசன் ஆக உள்ளது.
ஞாயிறன்று விஜய்டிவியில் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் குழந்தைகளை பொத்தி பொத்தி வளர்க்கும் மாடர்ன் தாயார்கள் ஒரு புறமும் தங்களது பேரன் பேத்திகளை கைகளால் தொட்டு கொஞ்சுவதற்குக் கூட வாய்ப்பு மறுக்கப்படுகின்ற பாட்டிமார்கள் இடையேயான விவாதம் நடைபெற்றது.
இதில் ஒரு தாய், தனது குழந்தையை யாரும் முத்தம் கொடுக்க அனுமதிக்க மாட்டேன் என்றும், சற்றே ஒரு படி மேலே போய் தானுமே முத்தம் கொடுக்க மாட்டேன் என்றும் சொன்னது அதிர்ச்சியாக இருந்தது. வெளியே வேலைக்கு போய் விட்டு வரும் அப்பா வியர்வையோடு முத்தம் கொடுப்பது தவறு என்று சொன்னார் இன்னொரு அம்மா.

மாடர்ன் அம்மாக்களின் கண்டிஷன்கள்
குழந்தைகளுக்கு கண்டதையும் தரக்கூடாது என்று சொன்னார் ஒரு அம்மா. அது கூட ஏற்றுக்கொள்ளலாம். சாக்லேட் தரக்கூடாது என்று சொன்னார் அம்மா. பற்கள் சொத்தை ஆகிவிடும் என்று கூறினார். எங்கள் வீட்டில் தரையில் விளையாடலாம். வெளியில் போய் தரையில் விளையாடக்கூடாது என்று சொன்னார். கை மருத்துவம் பார்க்க விடமாட்டோம். என் குழந்தை தூங்கும் போது டிஸ்டர்ப் செய்வது பிடிக்காது. குழந்தைக்கு பாலூட்டும் தாய்மார்கள் மாம்பழம், பலாப்பழம், நவாற்பழம் சாப்பிடக்கூடாது என்பதால் தனது கணவரையும் சாப்பிட விடுவதில்லை என்று சென்னார் ஒரு பெண். பாவம் அந்த கணவர்.

பாசத்திற்கு தடையா?
பேரப்பிள்ளைகளை தூக்கி வைத்துக்கொள்வது எங்களுக்கு ஒரு சந்தோஷம் என்று கூறினார் பாட்டி. அதை ஏன் இவர்கள் தடுக்கிறார்கள் என்று கேட்கிறார் பாட்டி. ஆனால் நடக்க விட வேண்டும் என்று சொல்கிறார் அம்மா. அவன் சுதந்திரமாக இருக்க மாட்டான் என்கிறார் அந்த அம்மா. பாசத்திற்கு தடை போடக்கூடாது என்பது பாட்டிகளின் வாதம். சின்னக்குழந்தைகளுக்குத்தான் முத்தம் கொடுக்க முடியும். அதில் என்ன நோய் வந்து விடப்போகிறது. உங்களை நாங்கள்தானே வளர்த்தோம் என்று ஆதங்கத்தோடு தங்கள் தரப்பு கருத்தை முன் வைத்தார் ஒரு பாட்டி.

அன்பும் பாசமும் அவசியம்
இந்த விவாத நிகழ்ச்சி குறித்து மனநல மருத்துவர் Raiz Raiz தனது முகநூல் பக்கத்தில் இதனை தெளிவாக எழுதியுள்ளார். ஒரு குழந்தையை அதனது தாயோ தந்தையோ தாத்தாவோ பாட்டியோ கட்டியணைக்கும் போது ஆக்சிடோசின் எனும் வேதிப் பொருள் குழந்தையின் மூளையில் சுரந்து ஒரு நல்ல தன்னம்பிக்கை உணர்வையும் பாதுகாப்பு உணர்வையும் கொடுக்கிறது. குழந்தைக்கு அரவணைப்பு கிடைக்கும் போதெல்லாம் நரம்பு மண்டலத்தின் ஆற்றுபடுத்துதல் மற்றும் அமைதிப்படுத்தும் வேலையை செய்யும் parasympathetic nervous system தூண்டப்பட்டு குழந்தை ஒரு பாதுகாப்பான கதகதப்பான மனநிலையோடு வளர்கிறது.

நோய் எதிர்ப்புத் தன்மை
அன்பும் அரவணைப்பும் கிடைக்காத, பாதகமான சூழ்நிலையில் வளரும் குழந்தைக்கு படபடப்புக்கான நரம்பு மண்டலமான sympathetic nervous system (freight, fight, flight) அடிக்கடி அதிகமாக தூண்டப்பட்டு பதட்டமும் கோபமும் சுய பச்சாதாபமும் கொண்ட தன்னம்பிக்கை இல்லாத குழந்தையாக அது வளர்கிறது.
கிருமித் தொற்றுலிருந்து குழந்தையை காப்பாற்றுகிறோம் எனும் பெயரில் அவர்களின் immunity எனும் நோய் எதிர்ப்பு தன்மையை வளர விடாமலே தடுக்கின்றனர்.

கொரோனா காலம்
நன்றாகப் பாருங்கள் இப்படி obsessive வாக இருக்கும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கு தொற்று நோய்கள் வருகின்றனவா இல்லையா என்று. எல்லா குழந்தைகளையும் போலத்தான் அவர்களுக்கும் தொற்று வரும். எனக்கென்னவோ இந்த கோவிட் பெருந்தொற்று காலம் இந்த obsessive அம்மாக்களை கொஞ்சம் அதிக obsessive வாக ஆக்கிவிட்டதோவென தோன்றுகிறது.

அறிவியல் பூர்வ உண்மை
இதை கெஸ்ட் ஸ்பீக்கர் டாக்டர் ஷாலினி தனக்குப் பிடித்த evolution theory யை வைத்தே அழகாக விளக்கிக் கூறினார். தாத்தா பாட்டிகள் தங்களது முத்தத்தின் மூலம் பேரக் குழந்தைக்கு தங்களது பரம்பரை நோய் எதிர்ப்பு சக்தியை கடத்துகின்றனர் என்பதையும் அழகாக அறிவியல் பூர்வமாக எடுத்துக் கூறினார்.
ஒரு அம்மா 'முத்தம் கொடுப்பதால் தேமல் வருகிறது' என சும்மா அடித்துவிட்டார். கொஞ்சம் விட்டால் சின்ன வயசில் தலையில் முத்தம் கொடுப்பதால் தான் முதிய வயதில் மனிதனுக்கு வழுக்கை விழுகிறது எனச் சொன்னாலும் சொல்லுவார்கள். அறிவியல் ஆதாரம் இல்லாத தகவல்களையும் தங்களின் எண்ணங்களுக்கு சாதகமாக இருந்தால் எளிதில் நம்பிவிடுகிறார்கள் பாருங்களேன்.

தொற்று நோய்கள்
ஒரு பாட்டி 'நாங்க குழந்தைகளுக்கு நோய்களைக் கொடுத்துவிடுவோம் எனச் சொல்லி முத்தம் கொடுக்கவிடாமல் தடுப்பது மிக அநியாயம்' எனச் சொன்னதற்கு , ஒரு மாடர்ன் அம்மா 'வயதானவர்களுக்குத் தானே டயபட்டீஸ், பீபி என அதிகமாக இருக்கிறது' எனச் சொன்னது படு அபத்தமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. இவை தொற்று நோய்கள் இல்லை என்பது கூடவா அவருக்குத் தெரியவில்லை?

அதிகரிக்கும் நோய்கள்
Epidemiologist David Strachan proposed the theory that a reduced exposure to dirt could render a person prone to allergy. அது போல தொற்றுகள் குறைய குறைய மேலை நாடுகளில் அலர்ஜி, ஆஸ்த்துமா, ஆட்டோ இம்முன் டிஸாடர்கள், gluten, lactose intolerance போன்ற பிரச்சனைகள் அதிகமாகிக் கொண்டே வருகின்றன எனச் சொல்கிறார்கள்.

குழந்தை வளர்ப்பு
ஆண்களைச் சுற்றியே சுழன்றுக் கொண்டிருந்த இந்திய பெண்களின் உலகம் இன்று சற்று மாறி, தங்களது குழந்தைகளைச் சுற்றியே சுழல்கிறதோ? மாடர்ன் அம்மாகளுக்கு குழந்தையின் மீது 'இது என்னோட குழந்தை, எனக்கே மட்டுமான குழந்தை' என்பது போல் ஒரு வித possessiveness வளர்ந்து விட்டிருக்கிறதோ? குழந்தையை ஒரு perfect ட்டான robot ஐ வளர்ப்பது போல் வளர்ப்பது மூலம் குழந்தை வளர்ப்பையே இவர்கள் சற்று materialise பண்ணிவிட்டார்களோ எனத் தோன்றுகிறது.

இனம்புரியா பயம்
தங்களது சில ஆழ்மன பதட்டங்களுக்கும் சில இனம்புரியா பயங்களுக்கும் திசை திருப்பிகளாக தங்களை அறியாமலே இதை பயன்படுத்துகிறார்களோ? சிலர் மற்றவர்கள் தங்களை புகழ வேண்டுமென்று அப்படி வளர்ப்பதாக சொன்னார்கள். இவற்றையெல்லாம் அந்த குழந்தைகளின் பார்வையிலிருந்துப் பார்த்தால் எவ்வளவு முட்டாள்த்தனம் என்பது புரியும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு! என்று பொளேர் என்று பொட்டில் அடிப்பது போல பதிவிட்டுள்ளார் இந்த மனநல மருத்துவர்.












Click it and Unblock the Notifications