"ஸ்டாலின் முகத்தில் பாஜக கரி பூசிவிட்டது! கறுப்பு சட்டையை கழட்டுங்க முதல்ல.." ஆவேசமாக பேசிய இபிஎஸ்
திருப்பூர்: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற மாபெரும் பரப்புரைக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS), ஆளும் திமுக அரசையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாகச் சாடினார். குறிப்பாக, நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் ஸ்டாலின் வேண்டுமென்றே அரசியல் செய்வதாகக் குற்றம் சாட்டினார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தீவிர சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்றைய தினம் பல்லடம் திருப்பூர் சாலையில் கூடியிருந்த மக்கள் மத்தியில் பரப்புரை நிகழ்த்தினார். அப்போது அவர் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுகவும் முதல்வர் ஸ்டாலினும் வேண்டும் என்றே அரசியல் செய்வதாக விமர்சித்தார்.

எடப்பாடி பழனிசாமி
மேடை தோறும் ஸ்டாலின் கறுப்புச் சட்டை அணிந்து வருவதை விமர்சித்த இபிஎஸ், "ஸ்டாலின் கறுப்புச் சட்டை போட்டிருக்கிறார்.. ஊர் முழுவதும் கறுப்புக் கொடி ஏற்றச் சொன்னார். ஆனால் நான் வரும் வழியில் எங்கேயும் கறுப்புக் கொடியைப் பார்க்கவில்லை. தமிழ்நாட்டின் நாடாளுமன்ற எம்பிக்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் எனப் பொய் சொல்லி அரசியல் செய்கிறார். ஆனால், மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் சமமாகத் தொகுதிகளை உயர்த்துகிறது என்பதை நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் தெளிவுபடுத்தியிருக்கிறார்" என்று கூறினார்.
சட்டையைக் கழற்ற வேண்டியதுதானே?
தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாட்டுக்கு 59 தொகுதிகள் என சொல்லி இருந்தனர். ஏற்கனவே 7.18% ஆக இருக்கும் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறைந்துவிடும் என்றார் ஸ்டாலின். ஆனால் இப்போது அது 7.23% ஆகப் புள்ளிவிவரப்படி கூடியிருக்கிறது. இப்போது ஸ்டாலின் தனது கறுப்புச் சட்டையைக் கழற்ற வேண்டியதுதானே? உளவு துறையாவது அவருக்கு இதைச் சொல்லியிருக்க வேண்டும். ஸ்டாலின் முகத்தில் பாஜக கரி பூசிவிட்டது" என குறிப்பிட்டார்.
திமுக எம்பிக்கள் வேஸ்ட் லக்கேஜ்
திமுக கூட்டணியில் உள்ள 39 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கடுமையாக விமர்சித்த இபிஎஸ், "மாலை 6 மணிக்கே உள்துறை அமைச்சர் அமித்ஷா தொகுதி மறுசீரமைப்பு குறித்துத் தெளிவுபடுத்திவிட்டார். ஆனால், 39 எம்பிக்களில் ஒருவராவது ஸ்டாலினிடம் தகவல் சொன்னார்களா? 39 எம்பிக்களும் 'வேஸ்ட் லக்கேஜ்', வெறுமனே பெஞ்ச்சை தேய்க்கிறார்கள். அதே அதிமுக காவிரி விவகாரத்தில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தபோதும், உச்சநீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டி 22 நாட்கள் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தோம். அதுதான் அதிமுகவின் நிலைப்பாடு" என்று தெரிவித்தார்.
தனது உரையின் முடிவில், வருகிற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை, தாமரை மற்றும் குக்கர் சின்னங்களில் வாக்களித்துத் தமிழகம் அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபிக்குமாறு பொதுமக்களிடம் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications