கட்சி தொண்டர்கள் தான் முக்கியம்.. அதிமுகவின் தனித்துவத்தை விட்டுக்கொடுக்காத எடப்பாடி!
சென்னை: 2026ம் ஆண்டுக்கான தமிழக சட்டசபை தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த தேர்தலில் அதிமுகவை தலைமையேற்று வழிநடத்தும் எடப்பாடி பழனிசாமி, எம்ஜிஆர், ஜெயலலிதா பாணியில் கட்சியின் தனித்துவத்தை விட்டு கொடுக்காமல் செயல்பட்டு வருகிறார்.
தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரம் இன்றுடன் முடிவடைய உள்ளது. இந்த தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி தொகுதி பங்கீட்டில் காட்டிய உறுதி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்வரான எடப்பாடி பழனிசாமி அதிரடியாக சசிகலா, டிடிவி தினகரன், ஓ பன்னீர் செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கினார். ஒற்றை தலைமை தான் கட்சிக்கு நல்லது என்பதில் உறுதியாக இருந்து அதனை செய்து காட்டியுள்ளார்.

உறுதியாக இருந்த எடப்பாடி
எடப்பாடி பழனிச்சாமி இந்த சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா பாணியில் கூட்டணி பங்கீட்டில் பிற கட்சிகளுக்கு தொகுதிகளை வாரி வழங்கி விட்டு கொடுக்காமல் உறுதியாக இருந்தார். பாஜக 40 முதல் 60 தொகுதிகளில் வரை கேட்டாலும் கூட வெறும் 27 தொகுதிகள் மட்டுமே கொடுத்தார். இதுதவிர பிற கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் வழங்கியது போக அதிமுக மொத்தம் 178 தொகுதிகளில் களமிறங்கி உள்ளது.
நிர்வாகிகளுக்கு முன்னுரிமை
இதன்மூலம் அதிமுகவின் நலனை எந்த கட்சியிடமும் விட்டு கொடுக்க மாட்டேன். இந்தியாவையே ஆண்ட கட்சியாக இருந்தாலும் சரி தமிழகத்தில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்பதை உறுதி செய்துள்ளார். 178 தொகுதிகளில் அதிமுக கூட்டணி போட்டியிடுவதன் மூலமாக நிர்வாகிகள், தொண்டர்கள், முன்னாள் அமைச்சர்களுக்கு உரிய முறையில் அவர்கள் விரும்பும் தொகுதிகளை வழங்கி போட்டியிட வாய்ப்பு வழங்கி உள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதன்மூலம் அதிமுக கட்சியில் உள்ள நிர்வாகிகள், தொண்டர்களின் நலனில் முக்கியத்துவம் தந்துள்ளார்.
210 தொகுதிகள் இலக்கு
அதுமட்டுமின்றி கடந்த 2021 சட்டசபை தேர்தலில் 66 தொகுதிகளில் அதிமுக வென்றது. இப்போது 210 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று எடப்பாடி பழனிச்சாமி சூளுரைத்து மாநிலம் முழுவதும் 2 முறை தீவிரமாக பரப்புரை மேற்கொண்டுள்ளார். அதோடு மக்களை கவரும் வகையில் வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.
கவனம் பெற்ற வாக்குறுதிகள்
ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.10 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று கூறியுள்ளார். சட்டம் - ஒழுங்கு பிரச்சனைக்கு முக்கிய காரணமாக இருக்கும் போதைப்பொருளை ஒழித்து போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம் போதைப்பொருள் பிடியில் இருந்து முழுமையாக தமிழகத்தை விடுவிப்போம் என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
இதுதவிர அதிமுக ஒருபோதும் யாருக்கும் அடிமையாக இருக்காது. சிறுபான்மையினரின் உரிமைகளை ஒருபோதும் விட்டு கொடுக்காது என தேர்தல் கூட்டங்களில் தொடர்ந்து அழுத்தமாக கூறி சிறுபான்மையினருக்கு பக்கப்பலமாக இருந்து வருகிறார். அதுமட்டுமின்றி ரமலான் நோன்புக்கு அரிசி வழங்குவது, ஹஜ் பயண நிதி போன்ற திட்டங்களை மீண்டும் செழுமைப்படுத்துவதாக அவர் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications