ஒரே நாடு, ஒரே மதமாக்கும் முயற்சி... மக்களை பழிவாங்கும் பாஜக அரசு - கேரளாவில் ஸ்டாலின் ஆவேசம்
திருவனந்தபுரம்: ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கல்வி, ஒரே மதம் என மாற்ற மத்திய பாஜக முயற்சி செய்து வருவதாகவும் இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்றால் மாநிலங்களை காக்க வேண்டும் என கேரளாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
கேரள மாநிலம் கண்ணூரில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கிய கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 23 வது ஆண்டு அகில இந்திய மாநாடு நாளை நிறைவடைகிறது.
இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

கேரளாவில் ஸ்டாலினுக்கு வரவேற்பு
இதனை தொடர்ந்து இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து தனி விமானத்தில் புறப்பட்டு கண்ணூருக்கு சென்றடைந்தார். அவரை விமான நிலையம் சென்று கேரள மாநில அமைச்சர்கள் வரவேற்பு கொடுத்தனர். இந்த விழாவில் பங்கேற்க வந்திருந்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியையும் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.

ஆங்கிலேயர் செய்யாததை பாஜக அரசு செய்கிறது
அந்த மாநாட்டில் மத்திய - மாநில உறவுகள் என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது மத்திய பாஜக அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்தார். "பாஜக அரசு வேற்றுமையில் ஒற்றுமை என்பதை அழித்து ஒற்றைத்தன்மையை நிலைநாட்ட நினைக்கிறது. ஆங்கிலேயர்கள் கூட இத்தனை அதிகாரம் மிக்க ஒற்றைத் தன்மையை கொண்டு வர முயற்சி செய்யவில்லை.

மக்களை வழிவாங்குகிறார்கள்
ஆங்கிலேய ஆட்சி செய்யாததை தற்போது மத்திய பாஜக அரசு செய்து வருகிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கல்வி, ஒரே மதம் என மாற்ற மத்திய பாஜக முயற்சி செய்து வருகிறது. இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்றால் மாநிலங்களை காக்க வேண்டும். மாநிலங்கள் இணைந்தால்தான் அது நாடு. மாநிலங்களை பழிவாங்குவதாக நினைத்து மக்களை பாஜக அரசு பழிவாங்கிக்கொண்டு இருக்கிறது.

ரூ.21,000 கோடி வரி பாக்கி
தங்களிடம் பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக எல்லாவற்றையும் பறித்துக் கொள்கிறது மத்திய அரசு. மாநிலங்களுக்கான நிதியை மத்திய அரசு வழங்குவதே இல்லை. தமிழ்நாட்டிற்கு மட்டும் மத்திய அரசிடம் இருந்து ரூ.21,000 கோடி நிதி வர வேண்டியுள்ளது. மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் கிடைக்க இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் அவசியம் திருத்தம் செய்திட வேண்டும்.

தலையாட்டி பொம்மைகள் அல்ல நாங்கள்
தேசிய அளவில் வெற்றியடைவதன் மூலமாக மட்டுமே இந்தியாவின் ஜனநாயகத்தையும் மதசார்பின்மையையும் இறையான்மையையும் பாதுகாக்க முடியும். மாநில முதலமைச்சர்கள் எல்லாம் தலையாட்டி பொம்மைகளாக இருக்க வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள். பினராயி விஜயனும் நானும் தலையாட்டி பொம்மைகளாக இருந்து இருந்தால் நம் ஆட்சிக்கு எந்த நெருக்கடியையும் தந்திருக்க மாட்டார்கள்." என்றார்.












Click it and Unblock the Notifications