எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்க பார்த்தியா? பாலக்காடு டூ மும்பை..ரூ.8.55 லட்சம் போச்சே! அலறிய பெண்
திருவனந்தபுரம்: கேரளாவில் இளம்பெண் ஒருவர் பேஸ்புக் மூலம் பழகி ஆசை வலையில் சிக்கி சுமார் ரூ.8.55 லட்சத்தை இழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் புடுசெரி பகுதியை சேர்ந்தவர் இளம்பெண் ரேவதி(பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இவருக்கும் மும்பை கோலிவாடா ஜிடிபி நகர் ஜிகே பேசின் மார்க் காலணியை சேர்ந்த திபேஷ் சந்தோஷ் மசானி எனும் இளைஞருக்கும் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டிருக்கிறது. முதலில் திபேஷ்தான் ப்ரண்ட் ரெக்வஸ்ட் கொடுத்திருக்கிறார். ஆனால் அதனை ரேவதி ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் மெசேஜ் மூலம் தொடர்ந்து பேசி பேசி தனது ரெக்வஸ்ட்டை ஏற்க வைத்திருக்கிறார் திபேஷ்.
தொடக்கம் முதல் தான் ஒரு பெரிய பணக்காரர் என்றும், வாழ்க்கையின் பல விஷயங்களை இளைமையிலேயே அனுபவித்து விட்டதாகவும் எனவே வாழ்க்கையை வெறுத்துவிட்டதாகவும் பேசி வந்துள்ளார். இப்படியே பேசி வருகையில் ஒருநாள் ரேவதியை நிச்சயம் நேரில் சந்திப்பதாக திபேஷ் வாக்கு கொடுத்திருக்கிறார். அதேபோல தான் வரும்போது விலையுயர்ந்த பரிசை வாங்கி வருவதாகவும் கூறியுள்ளார். இப்படியே நாட்கள் சென்றிருக்கின்றன.

பரிசு
இந்நிலையில் அடுத்த ஒரு மாதத்தில் ரேவதியை சந்திக்க வருவதாக ரேவதியிடம் திபேஷ் வாக்கு கொடுத்திருக்கிறார். ஆனால் தான் வருவதற்குள் தன்னுடைய பரிசு பொருள் ஒன்று முன்கூட்டியே வந்து சேர்ந்திருக்கும் எனவும் கூறியுள்ளார். ஆனால் அது வெளிநாட்டிலிருந்து வருவதாகவும் எனவே சுங்கவரி கொடுத்துதான் வாங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனை கேட்ட ரேவதிக்கு லைட்டாக சந்தேகம் எழுந்திருக்கிறது. சுங்கவரி தான் எதற்காக கொடுக்க வேண்டும் என்று கேள்வியெழுப்பியுள்ளார். அதற்கு திபேஷ், "இது கோடி ரூபாய் மதிப்பிலான பொருள் எனவே நிச்சயம் சுங்கவரி செலுத்த வேண்டும். அப்போதுதான் பரிசு கைக்கு கிடைக்கும்" என்று கூறியுள்ளார்.

சுங்கவரி
இதனை நம்பிய ரேவதி முதற்கட்டமாக ரூ.2 லட்சத்தை கட்டியுள்ளார். பின்னர் 4 தவணையாக ரூ. 8.55 லட்சத்தை கட்டியுள்ளார். ஆனால் இதையெல்லாம் கட்டிய பின்னரும் இவருக்கு பரிசு கிடைக்கவில்லை. மறுபுறம் திபேஷ் கொஞ்சம் கொஞ்சமாக இவரிடம் பேசுவதை குறைத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பணம் குறித்து ரேவதி கறாராக கேட்டிருக்கிறார். அன்று ஏதேதோ சொல்லி சமாளித்த திபேஷ் அடுத்த நாளிலிருந்து தலைமறைவாகியுள்ளார். அவரது எண் நிரந்தரமாக ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டது. மேலும் அவருடைய பேஸ்புக் கணக்கும் முடக்கப்பட்டிருக்கிறது.

புகார்
இதனையடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் விழித்த ரேவதி உடனடியாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் தனிப்படை ஒன்று திபேஷை தேடி சென்றது. ஆனால் அவர் கொடுத்த முகவரியும் போலியானது என்பது அப்போதுதான் தெரியவந்தது. பின்னர் சைபர் செல் உதவியுடன் அவரை தேடும் பணிகள் தொடங்கியது. ஆனால் செல்போன் தொடர்ந்து ஸ்விட்ச் ஆஃப் செய்து வைக்கப்பட்டிருந்ததால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது இவருடைய செல்போனிலிருந்து சிக்னல் கிடைத்திருக்கிறது. இதனையடுத்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு விரைந்த காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.

விசாரணை
தற்போது இவரிடம் மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஆர்.விஸ்வநாத் உத்தரவின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர் மீது மேலும் சில வழக்குகள் நிலுவையில் இருக்கலாம் என்றும் காவல் துறையினர் கூறியுள்ளனர். அதுபோல பேஸ்புக்கில் இது போன்று வேறு யாரேனும் ஏமாந்து இருந்தால் உடனடியாக தங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம் எனவும் காவல்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர். பேஸ்புக் மூலம் பழகி ரூ.8.5 லட்சத்தை இளம்பெண் ஒருவர் இழந்திருப்பது கேரளாவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications