பேபி அணை மரங்களை வெட்ட தமிழகத்துக்கு உரிமை- சட்டப்படி அனுமதி தந்தோம்: கேரளா அரசுக்கு வனத்துறை பதிலடி
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணையில் பேபி அணை பகுதியில் மரங்களை வெட்டுவதற்கு தமிழகத்துக்கு சட்டப்பூர்வமான உரிமை உள்ளது; உச்சநீதிமன்ற உத்தரவுப்படியே சட்டப்பூர்வமாக தமிழகத்துக்கு அனுமதி கொடுத்தோம் என்று கேரளா அரசுக்கு அம்மாநில வனத்துறை அதிகாரிகள் பதிலடி கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பேபி அணையில் 15 மரங்களை வெட்டுவதன் மூலம் அணையை வலுப்படுத்த முடியும் என்பது தமிழகத்தின் நிலைப்பாடு. இதனை ஏற்று கேரளா வனத்துறை அதிகாரிகளும் மரங்களை வெட்ட அனுமதி அளித்தனர்.
பேபி அணையில் மரங்கள்- கேரளா அடாவடித்தனம்-மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்ததால் அனுமதி திடீர் ரத்து!

முதல்வர் ஸ்டாலின் நன்றி
இதனையடுத்து கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை அனுப்பினார். அக்கடிதத்தில் முல்லைப் பெரியாறு அணையில் உள்ள பேபி அணைக்கு கீழே உள்ள 15 மரங்களை வெட்டுவதற்கு கேரள வனத் துறை அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து நீர்வளத் துறை அதிகாரிகள் மூலம் தகவல் கிடைத்துள்ளது. பேபி அணை மற்றும் மண் அணையை வலுப்படுத்த தமிழகத்தின் இந்த நீண்ட கால கோரிக்கை மிகவும் முக்கியமானது. மேலும் பேபி அணையை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க இந்த மரம் வெட்டுவதற்கான அனுமதி உதவும் என கூறியிருந்தார்.

அனுமதி ரத்து
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கையை தொடர்ந்து கேரளா வனத்துறை அமைச்சர் சசீந்தரன், தமிழகத்துக்கு எந்த அடிப்படையில் மரங்களை வெட்ட வனத்துறை அனுமதி கொடுத்தது? என்பது குறித்து விசாரிப்போம். இது தொடர்பாக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளோம் என்றார். பின்னர் தமிழகம் மரங்களை வெட்டுவதற்கு கேரளா வனத்துறை கொடுத்த அனுமதியையும் கேரளா அரசு திடீரென ரத்து செய்தது.

தமிழகத்துக்கு உரிமை உண்டு
இந்நிலையில் கேரளா வனத்துறை அதிகாரிகள், தமிழகத்துக்கு அனுமதி கொடுத்தது குறித்து அம்மாநில அரசுக்கு விளக்க கடிதம் அனுப்பி உள்ளனர். அதில், பேபி அணை பகுதியில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு தமிழ்நாடு அரசுக்கு சட்டப்பூர்வமாக உரிமை உண்டு. அதனால் தமிழகம் அனுமதி கோரியது. ஏற்கனவே உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவுகளின் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகளும் அனுமதி வழங்குவோம். இதில் சட்ட விரோதமானது எதுவும் இல்லை. இது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தியே அனுமதி கொடுத்தோம் என விளக்கம் தந்துள்ளனர்.

அதிகாரிகள் மீது நடவடிக்கை?
கேரளா அரசைப் பொறுத்தவரையில் தமிழகம், மரங்களை வெட்டினால் பேபி அணை வலுவாக இருக்கிறது என வாதிடும். இது அணை பலவீனமாகவே இருக்கிறது என்கிற தங்களது வாதத்தை தகர்க்கும் என அஞ்சுகிரது. ஆனால் கேரளா வனத்துறை அதிகாரிகளோ, உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளைப் பின்பற்றியே அனுமதி கொடுத்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளனர். இந்த அதிகாரிகல் மீது கேரளா அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது எதிர்பார்ப்புக்குரியதாக உள்ளது.