For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை- சேலம் 8 வழிச்சாலை- உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது- திட்டத்தையே கைவிடுக: தினகரன்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை-சேலம் 8 வழிச் சாலை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது; இந்த திட்டத்தையே அதிமுக அரசு கைவிட வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

TTV Dhinakaran urges to withdraw Chennai-Salme 8 way lane Project

சேலம் - சென்னை 8 வழிச்சாலை தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றியே தீருவேன் என்று ஒற்றைக்காலில் நிற்கும் முதலமைச்சர் பழனிசாமிக்கும், சட்டப்பேரவையிலேயே '8 வழிச்சாலையை எதிர்க்கவில்லை' என்று பேசிய எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் வேண்டுமானால் இத்தீர்ப்பு மகிழ்ச்சி தரலாம்.

ஆனால், மக்களின் உணர்வுகளுக்கும், கண்ணீருக்கும் நீதி கிடைக்காமல் போயிருப்பது வேதனை அளிக்கிறது. இப்போது ஊருக்கு ஊர் போய் 'நானும் விவசாயிதான்' என்று சொல்லி, பச்சைத்துண்டு போட்டு 'போஸ்' (POSE) கொடுத்துக்கொண்டிருக்கும் இதே முதலமைச்சர் பழனிசாமிதான் அரை ஏக்கர், ஒரு ஏக்கர் வைத்திருக்கும் ஏழை மக்களின் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களைப் பிடுங்கி இத்திட்டத்தை எப்படியாவது செயல்படுத்த வேண்டுமென்று துடித்தார்.

இதற்காக சேலம்,திருவண்ணாமலை,காஞ்சிபுரம், தருமபுரி,கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களிலுள்ள ஆயிரக்கணக்கான வீடுகள், தென்னந்தோப்புகள், வாழைத்தோப்புகள், பாக்குமரங்கள்,கிணறுகள், குளங்கள், சிறு தொழிற்சாலைகள்,கோயில்கள், பள்ளிக்கூடங்கள், கால்நடைப்பண்ணைகள், வனப்பகுதிகளை அழித்து, மலைகளை உடைக்கத் திட்டம் போட்டார்.

காலங்காலமாக உள்ள தங்களின் வாழ்வாதாராம் பறிபோவதைக் கண்டு பதறி கண்ணீர் விட்டு,போராடிய விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள்,சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் மீது அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டார்கள். காவல்துறையை வைத்து அவர்களை அடித்து, துன்புறுத்தி சிறையில் தள்ளினார்கள்.

கடந்த நாடாளுமன்றத்தேர்தல் நேரத்தில் 'மக்களின் மனநிலை அறிந்து செயல்படுவோம்' என்று சொன்ன முதலமைச்சர் பழனிசாமி, தேர்தல் முடிந்தவுடன் தன் வழக்கமான சுயரூபத்தைக் காட்டினார். 'சாலை இல்லாவிட்டால் எப்படி போவது?' என்று எதிர்கேள்வி கேட்டு, 8 வழிச்சாலையைக் கொண்டுவருவதற்காக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடுக்குச் சென்றார்.

'ஏற்கனவே இருக்கிற சாலைகளை 8 வழிகளாக மாற்றினால் அதில் வாகனங்கள் போகாதா? அதைக் கொண்டு தொழில் வளம் பெருகாதா?

இவ்வளவு பெரிய சீரழிவை நடத்தி புது சாலை போட்டால்தான் சென்னையில் இருந்து சேலத்திற்கு விரைந்து போக முடியுமா?

பசுமையை அழித்துவிட்டு பசுமைவழிச்சாலை போடும் திட்டம் எதற்காக? யாருக்காக?'

போன்ற கேள்விகளுக்கு முதலமைச்சரிடம் இருந்து இதுவரை பதில் இல்லை.

ஏனெனில், பழனிசாமிக்கு எப்போதும் மக்களின் மீது அக்கறை இருந்ததில்லை. சுயலாபம் மட்டுமே ஒரே நோக்கம். அதற்காக அந்தந்த நேரத்தில் மக்களை எப்படியாவது ஏமாற்ற வேண்டும் என்பதே அவரது எண்ணம்.

இத்தனைக்கும் பிறகு துளியாவது மனச்சாட்சி இருந்தால், 8 வழிச்சாலைத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு பழனிசாமி அரசு முனையக் கூடாது. விவசாயிகளிடம் இருந்து அடித்துப் பிடுங்கிய இடங்களை எல்லாம் எந்த தாமதமும் இன்றி பாதிக்கப்பட்டவர்களின் பெயருக்கு உடனடியாக மாற்றிக் கொடுத்திட வேண்டும்.

அப்படி செய்யாமல், மக்களின் உணர்வுகளைக் காலில் போட்டு மிதித்துவிட்டு 8 வழிச்சாலை போடுவதற்கு நினைத்தால் மக்கள் மன்றத்தில் அதற்குரிய தீர்ப்பு கிடைத்தே தீரும்.

இவ்வாறு டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

English summary
AMMK General Secretary TTV Dhinakaran has urged to the State Govt to withdraw the Chennai-Salme 8 way lane Project.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X