கனமழையிலும் கண் துஞ்சாத முதல்வர் ஸ்டாலின்.. அறிவாலய ‘War Room’.. திமுகவினருக்கு பறந்த முக்கிய ஆர்டர்
சென்னை: தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மழை பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இரவு முழுவதும் விழிப்புடன் பணியாற்ற திமுகவினருக்கு அறிவுறுத்தி உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் வார் ரூமுக்கு சிறப்பு தொலைபேசி எண்ணையும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அதை அடுத்து நேற்று முதல் அந்த பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் நேற்று இரவில் இருந்து பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்த நிலையில் சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது.
குறிப்பாக வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பல பகுதிகளில் சாலைகளில் அதிக அளவு தண்ணீர் தேங்கியால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். சில இடங்களில் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து மக்கள் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். அதே நேரத்தில் தமிழக அரசு சார்பில் மலையை சமாளிக்க ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் பலத்த சேதம் தவிர்க்கப்பட்டது.
மேலும் நேற்று இரவில் இருந்து தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விடிய விடிய பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அது மட்டுமில்லாமல் நிவாரண முகாம்களில் தங்கி உள்ள மக்களிடம் உணவு குடிநீர் வசதி உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்ததோடு உடனடியாக நிவாரண உதவி வழங்க உத்தரவிட்டார்.
இந்நிலையில், தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மழை பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இரவு முழுவதும் விழிப்புடன் பணியாற்ற திமுகவினருக்கு அறிவுறுத்தி உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,” திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள 'War Room’-ஐப் பார்வையிட்டு, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட - பகுதி - வட்டச் செயலாளர்கள், கவுன்சிலர்கள் ஆகியோரைத் தொடர்புகொண்டு, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முகாம்களுக்கு அழைத்துச் செல்வதோடு, அவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளைச் செய்துகொடுத்து, நிவாரணப் பணிகளில் அரசு இயந்திரத்துக்குத் துணை நிற்குமாறு கேட்டுக் கொண்டேன்.
இரவு முழுதும் விழிப்புடன் பணியாற்றி, கோரிக்கைகளை ஒருங்கிணைத்து, பொதுமக்களுக்கு உதவிடுமாறு கழக நிர்வாகிகளை அறிவுறுத்தியுள்ளேன். அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள War Room எண்: 08069446900” என கூறியுள்ளார்.
அவரது மற்றொரு பதிவில்,”வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்துப் பல்வேறு மாவட்ட ஆட்சியர்களிடம் ஆலோசித்தேன். நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களிடம் அவர்களுக்கான உணவு - தங்குமிட வசதிகள் போன்றவை குறித்துக் கேட்டறிந்தேன். கனமழை நிற்கும் வரையில், அதிகாரிகள் விழிப்புடன் செயலாற்றி, பொதுமக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்திடுமாறு உத்தரவிட்டுள்ளேன்.” என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications