ஆஹா.. மக்களே ரெடியா.! மாற போகுது கிளைமேட்.. தமிழகத்தில் நல்ல மழை காத்திருக்கு! வானிலை மையம் அலர்ட்
சென்னை: கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கணிசமாக நல்ல மழை பெய்து வரும் நிலையில், வரும் நாட்களிலும் இந்த மழை தொடரும் என்றே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாகச் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும் நல்ல மழை இருக்கும் என்றே வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பருவமழை ஆரம்பித்தது முதலே நல்ல மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாகக் கோவை, நீலகிரி உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது.

மாலை மற்றும் இரவு நேரங்களில் சென்னையிலும் கூட அவ்வப்போது நல்ல மழை தொடர்ந்து பெய்தே வருகிறது. இதற்கிடையே வரும் நாட்களிலும் மழை தொடரும் என்றே வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று ஜூலை 22ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூலை 23 முதல் 27 வரையிலான நாட்களில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை கிளைமேட்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 - 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 - 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோர பகுதிகளில் வரும் ஜூலை 25 வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோர பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகளில் நாளை ஜூலை 22ம் தேதி மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல், வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தெற்கு- மத்திய கிழக்கு- வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல்: அரபிக்கடல் பகுதிகளில் நாளை ஜூலை 22 முதல் 25 வரை மத்திய தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய, தென்கிழக்கு அரபிக்கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். கர்நாடக கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications