For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பத்தாண்டுக்குப் பின் திரைக்கு வந்து.. பட்டையைக் கிளப்பிய மாஸ் படம்.. அரங்கு குலுங்கும் காட்சிகளுடன்!

Google Oneindia Tamil News

- பா. கிருஷ்ணன்

மீண்டும் வந்துவிட்டேன்: திமுகவைக் கதாநாயகனாகக் கொண்டு திமுக புரொடக்ஷன்ஸ் தயாரித்த இந்தப் படம் பத்தாண்டு கழித்து நல்ல வெற்றி பெற்றுள்ளது.

கதையில் வருவோர் அனைவருமே படம் வெற்றி பெற நன்றாகச் செய்திருக்கிறார்கள். இப்படத்தின் திரைக்கதை தந்தையை இழந்த மகன் கடும் உழைப்பில் மேலே வருவதாக அமைக்கப்பட்டுள்ளது. இதே போன்ற கதை 2016 படத்தில் இருந்தாலும், அம்மா படம் மகத்தான வெற்றி பெற்றதால் இதன் வாய்ப்பு நழுவிப் போனது. பின்னர் 2019ல் மக்களவை படம் மிகப் பெரிய வெற்றியைக் கண்டது. இப்போதும் மகத்தான வெற்றி. இந்தப் படம் கொங்கு மண்டல திரையரங்குகள் நீங்கலாக அனைத்து தியேட்டர்களிலும் சக்கை போடு போடுகிறது. சென்னையில் 1977க்குப் பிறகு அனைத்து திரையரங்குகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது.

Writer PaaKi Article on Tamilnadu Assembly Election Result

கதாநாயகி காங்கிரஸுக்கும் கதாநாயகன் திமுகவுக்கும் இடையில் எத்தனை இடம் என்ற வசனக் காட்சிகளில் கதாநாயகி உணர்ச்சி பொங்க அழுதது உருகச் செய்தது. இந்தப் படத்தின் கதையில் இருவரும் பிரிவார்களோ என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் என்றாலும் கதை சுமுகமாக நகர்ந்தது. கதாநாயகியின் நடிப்பு மோசமில்லை. துணை நடிகர் விடுதலைச் சிறுத்தை பானையை வைத்தே எதிரிகளை அடித்து துவம்சம் செய்யும் காட்சி கைதட்டலைப் பெறுகிறது. துணை நடிகர் இந்த முறையும் சோடை போகவில்லை. முந்தைய சில படங்களில் திமுகவுடன் வில்லனாக வந்து மோதிய மதிமுக இந்த முறை கதாநாயகனின் உற்ற தோழனாக வந்து உருக்கமாக நடித்து ரசிக்க வைத்திருக்கிறார். துணை நடிகர்களான இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆகியவற்றின் நடிப்பு வழக்கம்போல்தான்.

கதாநாயகன் திமுக பாடும் "ஸ்டாலின்தான் வராரு, விடியல்தான் தர்றாரு" பாடல் சூப்பர் ஹிட்.

அம்மா, அம்மா, அம்மா! : இப்படத்திற்கு இரட்டைக் கதாநாயகர்களை வைத்து கதை எழுதப்பட்டிருக்கிறது. படத்தின் முதல் காட்சியின் டைட்டில் சாங், "வெற்றி நடை போடும் தமிழகமே.." பாடல் நன்றாக இருந்தாலும், காட்சியை யாரும் ரசிக்கவில்லை. அதற்கு நிறைய செலவு செய்திருக்கிறார்கள்.

படம் முழுக்க நிறைய காட்சிகளில் கதாநாயகன் வருகிறார். துணைக் கதாநாயகன் தன் ஊரில்தான் தோன்றுகிறார். இந்தப் படத்தின் வடநாட்டுக் கதாநாயகி பாஜக பாடும் "தாமரை மலர்ந்தே தீரும்" பாடல் பழைய மெட்டில் அமைந்துள்ளது. சிலர் மட்டுமே ரசிக்கிறார்கள். கதாநாயகி பாஜக இருபதே காட்சிகளில் வந்தாலும் கதாநாயகன் கேரக்டரை ஆதிக்கம் செலுத்துவதாக பார்த்த பெரும்பாலோர் கூறுகிறார்கள். கதாநாயகி நான்கே காட்சியில்தான் நன்றாக நடித்திருக்கிறார். கதாநாயகன், "நான் அடிமை இல்லை" என்ற வசனத்தில் பஞ்ச் இருந்தாலும் ரசிக்கும்படி இல்லை. வசனகர்த்தா திறமை வெளிப்படவில்லை.

படத்தில் கதை நகரத் தொடங்கியபோது வருவாரா இல்லையா என்று எதிர்பார்க்கப்பட்ட துணை நடிகர் பாமக அழுதுகொண்டே பாடும் "10.5 சதவீத உள்ஒதுக்கீடு" என்ற பாட்டைச் சிலர் ரசித்தாலும் பலர் எரிச்சலாக இருக்கிறது என்கிறார்கள். ஆனால், "கொடுத்ததே போதும்" என்று அவர் கூறியதும் கதாநாயகன் திருப்தி பெருமூச்சு விடுவது நன்றாக இருக்கிறது. "அம்மா, அம்மா, அம்மா" படம் 68 திரையரங்குகளில் ஓடுகிறது. குறிப்பாக, கோவை, ஈரோடு போன்ற கொங்கு மண்டலத்தில் திரையரங்குகளில் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் பட்டாளம் அலைமோதுகிறது. இது அம்மாவின் அரசு அம்மாவின் அரசு என்று எல்லா காட்சியிலும் கதாநாயகன் கூறுகிறார். அது எடுபடவில்லை.

நான்தான் விவசாயி : ஒரே கதாநாயகனை வைத்து எழுதப்பட்ட கதை. படத்தின் ஒரே புதுமை பாதி ஆண் பாதி பெண் என்று எழுதப்பட்ட புதிய திரைக்கதை. அது கூட 2019 மக்களவை படத்தில் வந்திருக்கிறது. அதைத் தவிர வேறு ஏதுமில்லை. வசனங்கள் அனல் தெரிக்கின்றன. பல பாடல்கள் பழையதாக இருந்தாலும் ரசிக்க வைக்கின்றன. சில சமயம் கதாநாயகனா, வில்லனா, காமெடியனா என்று தெரியவில்லை என படம் பார்த்த விமர்சகர்கள் கூறுகிறார்கள். இந்தப் படத்தின் கதாநாயகன் துணை நடிகர்கள், கதாநாயகி, வில்லன் என்று யாருமே இல்லாமல் தனித்தே கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர். வசூலில் 7 சதவீதம் என்றாலும் ஒரு தியேட்டரிலும் ஓடவில்லை என்பது வியப்பு. பல இடங்களில் மூன்றாவது காட்சியோடு நிற்கிறது.

அவார்டு ஃபிலிம் போலவோ என்னவோ!: இந்தப் படத்திலும் கதாநாயகன் மட்டுமே இருப்பார் என்று எதிர்பார்த்தாலும், இடையில் இந்திய ஜனநாயகக் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி என்று இரு துணை பாத்திரங்கள் தலா 60 காட்சிகளில் தோன்றுகின்றனர். ஆனால், வந்ததும் போனதும் தெரியவேயில்லை. கதாநாயகன் கையில் டார்ச் ஏந்தியபடி பல காட்சிகளில் நன்றாகத் தோன்றுவது பல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. பேசுகிற வசனம்தான் பல சமயம் புரியவில்லை. கோவை தெற்கில் கிளைமாக்ஸ் காட்சி விறுவிறுப்பாக இருக்கிறது. சண்டையில் தலைவன் வெற்றி பெற்றுக்கொண்டே வருகிறார். ஆனால், கடைசியில் கடைசியில் திருப்பம். தோல்வியில் முடிகிறது. இது சோகத்தைப் பிழிகிறது. இந்தப் படம் ஏதோ அறிவுஜீவிகளின் கலைப் படம் போலத் தெரிகிறது. எந்தத் தியேட்டரிலும் ஓடவில்லை. அவார்டு ஃபிலிம் போலவோ என்னவோ !

தியாகத் தலைவி சின்னம்மா: "அம்மா அம்மா, அம்மா" படக்குழுவிலிருந்து வெளியே வந்தவர்கள் தொடங்கி, "அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம்" என்ற கதாநாயகனை வைத்து எழுதப்பட்ட திரைக்கதை. 2019 மக்களவை படத்தில் இடம்பெற்ற தேமுதிக இந்தப் படத்தில் துணை நடிகராக வருகிறார். கேப்டன் இல்லாமல் துணை நடிகர் சோபிக்கவில்லை. அமமுக படக்குழுவினர் நான்கு ஆண்டுக்கு முன் தயாரித்த "ஆர்கே நகர்" குறும்படம் வெற்றி பெற்றது பல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், இது வரை வெற்றிப் படத்தைத் தயாரிக்கவில்லை. தியேட்டரில் கூட்டமே காற்றாடுகிறது.

கதாநாயகனின் கேரக்டர் கோவில்பட்டியை நோக்கி ஆரம்பத்தில் வேகமாக ஓடுகிற காட்சி எதிர்பார்ப்பு தந்தது. ஆனால், சிறிது நேரத்தில் கோவில்பட்டியை விட்டே அவர் ஓடும் காட்சியை பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது

இந்தப் படத்தின் மூலக் கதையின் ஆசிரியர் கடைசி நேரத்தில் ஒதுங்கிக் கொண்டது கூட கதையின் பலவீனத்துக்குக் காரணமாக இருக்குமோ என்று திரை விமர்சகர்கள் கூறுகிறார்கள். மற்றபடி சொல்வதற்கு ஏதுமில்லை.

இந்தப் படங்களைத் தவிர வேறு சில படங்கள் வந்தாலும் அவையெல்லாம் டப்பாவில் போய்விட்டன.

English summary
Writer PaaKi's Article on Tamilnadu Assembly Election Result.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X