ஆளுநருக்கு அனுப்பிய கடிதத்தில் ஆதரவு எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கையை குறிப்பிடாத எடப்பாடி பழனிச்சாமி!

ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க கோரி ஆளுநருக்கு அனுப்பிய கடிதத்தில் மொத்தம் எத்தனை எம்.எல்.ஏக்கள் ஆதரவு என்பதை எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிடவில்லை.

By:
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு அனுப்பிய கடிதத்தில் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையை எடப்பாடி பழனிச்சாமி தெரிவிக்கவில்லை.

முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தம்மை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர் என கூறி சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இது தொடர்பாக ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து தமக்கு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு தர வேண்டும் எனவும் ஓ. பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேநேரத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலர் சசிகலாவும் ஆளுநரை சந்தித்து தமக்கே அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது; தம்மை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என மனு அளித்தார்.

சசிக்கு அழைப்பு இல்லை

ஆனால் உச்சநீதிமன்றத்தில் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு நிலுவையில் இருந்ததால் சசிகலாவை ஆளுநர் அழைக்கவில்லை. இதனால் காபந்து அரசின் முதல்வராக ஓ. பன்னீர்செல்வமே நீடித்து வந்தார்.

சிறை உறுதி

இந்த நிலையில் இன்று சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. அவருக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டுகால சிறை தண்டனையும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி தேர்வு

இதனால் சசிகலாவின் முதல்வர் கனவு தவிடு பொடியானது. பின்னர் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சட்டசபை குழு தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஆளுநருக்கு கடிதம்

இது தொடர்பாக ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ள எடப்பாடி பழனிச்சாமி, முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் ராஜினாமாவை தொடர்ந்து இன்று நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அதிமுக சட்டசபை குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்; ஆளுநர் அழைத்தால் ஆதரவு எம்.எல்.ஏக்கள் பட்டியலை அளிக்கிறேன் எனக் கூறியுள்ளார். அந்த கடிதத்தில் தமக்கு எத்தனை எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது என்பதை வெளிப்படையாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Aa section of the ADMK MLAs elected Edappadi K Palanisamy as the legislature leader at Golden Bay resort in Kuvathur.
Please Wait while comments are loading...