திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்!
சென்னை: கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதியில் இன்று வேட்பு மனு தாக்கலின் போது சுவாரஸ்ய நிகழ்வு நடந்துள்ளது. அதிமுக வேட்பாளர் சுதாகர், திமுக வேட்பாளரும், சிட்டிங் எம்.எல்.ஏவுமான கோவிந்தராஜனின் காலில் விழுந்து ஆசி பெற்றுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக டி.ஜே.கோவிந்தராஜன் களமிறங்குகிறார். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் டி.ஜே. கோவிந்தராஜன் சுமார் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் அங்கு மீண்டும் அவரே களமிறக்கப்பட்டுள்ளார்.

அதிமுக சார்பில் சுதாகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தவெக சார்பில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் விஜயகுமார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியில் இரா.ஸ்ரீதர் போட்டியிடுகிறார்.
கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதியில் போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் இன்று ஒரே நாளில் தங்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். வேட்பு மனு தாக்கலின்போது, திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் எதிரெதிரே சந்தித்துக் கொண்டனர்.
இருவரும் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். அப்போது, அதிமுக வேட்பாளர் சுதாகர், சட்டென திமுக வேட்பாளர் டி.ஜே.கோவிந்தராஜன் காலில் விழுந்து ஆசி பெற்றார். தேர்தல் களத்தில் எதிரெதிராக நின்று சமர் புரியும் இரு கட்சிகளின் வேட்பாளர்கள் அளவளாவிக் கொண்டது அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.












Click it and Unblock the Notifications