For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிளவை உருவாக்கும் ஆரிய சக்திகளிடம் எச்சரிக்கையாக இருக்க அதிமுகவுக்கு வீரமணி அட்வைஸ் !

பிளவை உருவாக்கும் ஆரிய சக்திகளிடம் அதிமுகவினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கு வீரமணி கூறியுள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: திராவிட இயக்கங்களுக்கு தாங்கள்தான் மாற்று என்ற பாஜகவினரின் 'கரிசனம்' அதிமுகவின் மீது கரைபுரண்டு ஓடத் தொடங்கிவிட்டது. எனவே அதிமுகவினருக்கு எச்சரிக்கை தேவை. இது நாடகமே என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

அறிஞர் அண்ணா கூறிய, ''சிண்டு முடிந்திடுவோய் போற்றி'' என்ற அனுபவ மொழிப்படி, அ.தி.மு.க.வின் எம்.எல்.ஏ.,க்கள், முக்கிய பொறுப்பாளர்களிடையே பிளவை வலிந்து உண்டாக்கி, இடையே புகுந்து, நூல் பிளந்து பார்க்கும் முயற்சியில் ஈடுபடத் துவங்கிவிட்டனர்.

K.Veeramani allegation on BJP

சுமூகமாகவே புதிய அமைச்சரவை - அரசியல் சட்டக் கடமைப்படி பதவியேற்று விட்டது - .பன்னீர்செல்வம் முதலமைச்சராகக் கொண்டு; பழைய அமைச்சர்கள் மீண்டும் அமைச்சர்களாகி விட்டனர். அவர்கள் மூலமோ அல்லது ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க் கள் மூலமோ எந்த அதிருப்திக் குரலும் கிளம்பாத நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவி இன்னமும் நிரப்பப்படாத சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, பல்வேறு கலகங்களை உருவாக்கிட, கட்டுக் கோப்பான அக்கட்சியினை ஜாதி அடிப்படையில் பிரித்தாள தங்களது பேனாக்கள்மூலம் 'துவஜா ரோகணம்' செய்யத் தொடங்கிவிட்டனர்.

பார்ப்பனத் தலைமையிலான ஆட்சி வரும் வாய்ப்பு இப்படிப் பறிபோய்விட்டதே என்பதால், ஜெயலலிதாவின் நிழலாக இறுதிவரை இருந்து, மெய்க்காப்பாளராக, சேவகியாக, சிறந்த பாசம் காட்டிய தங்கையாகவே வாழ்ந்து, அந்த அம்மையாரின் கஷ்டங்கள், சிறைவாசங்களில் பங்கேற்ற சசிகலாவைப் பற்றி தேவையில்லாமல் பெரும் ஆய்வே நடத்தி, அரசியல் ஆவர்த்தனம் செய்கிறார்கள்.

முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்து துக்கம் 7 நாள் என்பதுகூட தீராத நிலையில், துயரத்தில் உழலும் அவர்களிடையே குட்டையைக் குழப்ப தூண்டிலைத் தூக்கிப் புறப்பட்டு விட்டார்கள். அக்கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்களுக்கு இல்லாத கவலையும், அக்கறையும் இந்த அக்கிரகார அறிவுஜீவிகளுக்கு ஏன்? விஷயம் புரிந்தவர்களுக்குக் கண்டிப்பாகவே விளங்கும்.

இன்னொரு பக்கம் தங்கள் பக்கம் சாய்த்துக்கொள்ள - திராவிட இயக்கங்களுக்கு தாங்கள்தான் மாற்று என்ற பா.ஜ.க.வினரின் 'கரிசனம்' - அ.தி.மு.க.வின்மீது கரைபுரண்டு ஓடத் தொடங்கிவிட்டது. இரண்டு கட்சிகளின் லட்சியங்களும் ஒன்றுதானாம்; வெங்கய்யா நாயுடு கண்டுபிடித்து, கசிந்துருகி கண்ணீர் மல்கக் கூறுகின்றார்.

காவிரி நதி நீர் ஆணையத்தை சட்டப்படி அமைக்க கடைசி நேரத்தில் மறுத்த பிரதமர் மோடி, அ.தி.மு.க. எம்.பி.,க்களைக்கூட சந்திக்க மறுத்த பிரதமர் மோடி ''நான் தொலைப்பேசியில் கூப்பிடு தூரத்தில்தான் இருக்கிறேன்'' என்று முதலமைச்சர் ஓ.பி.எஸ்.சிடம் கூறுகிறாரே, எப்படி?

இப்படி அரசியல் களத்தில் 'என்னா வினோதம் பாரு; எவ்வளவு ஜோக் பாரு, பாரு, பாரு' என்று பாடும் பரவசக் காட்சிகள் மறுபுறம். இவைகளையெல்லாம் பார்க்கும்போது, அந்தக் காலத்தில் திராவிடர் கழக கூட்டங்களில் கூறப்பட்ட ஒரு துக்க வீட்டு ஒப்பாரிக் கதைதான் நம் நினைவிற்கு வருகிறது.
முக்கியமான ஒருவர் மறைந்துவிட்டார். துக்க வீட் டிற்குப் பலரும் சென்று அவருடைய உறவுகளிடம் துக்கம் விசாரித்து ஆறுதல் கூறினர்.

இரண்டு சகோதரிகள் வந்தார்கள். மறைந்தவரின் உடலுக்கு அருகில் மறைந்தவரின் உறவுக்காரரைக் கட்டிப் பிடித்து ஒப்பாரி சொல்லி அழத் தொடங்கினர்.

அதில் தங்கை ஒருவர் ஒப்பாரியில்,

'பந்தலிலே பாவக்காய்,

பந்தலிலே பாவக்காய்

தொங்குதடி எக்காடி

தொங்குதடி எக்காடி!'

என்று ஜாடை காட்டிப் பாடினாள்.

அதைப் புரிந்த மூத்த அக்காள், ஒப்பாரியிலேயே குறிப்புக் காட்டினாள்.

'போகும் போது பாத்துக்கலாம்,

போகும்போது பறித்துக்கலாம்!' என்று. இவ்வளவு துக்கத்திலும் வீட்டுக்கார அம்மா அதைக் கண்காணித்து, அவ்விருவருக்கும் ஒப்பாரியிலேயே பதில் சொல்லும் வகையில் பாடினார். 'அய்யோ, அது விதைக்கல்லோ விட்டிருக்கு, விதைக்கல்லோ விட்டிருக்கு!' என்று. அக்கதைதான் இப்போது நம் நினைவிற்கு வருகிறது.

எனவே, அதிமுகவின் சகோதரர்களே, சிண்டு முடிந்திடுவோரை, உங்கள்மீது திடீர் அனுதாபம், அளவற்ற ஆதரவு தருவது போல் நாடகம் போடுவோரை விழிப்போடு புரிந்துகொள்ளுங்கள். கட்சியின் கட்டுக்கோப்பை - கட்டுப்பாட்டை மறவாதீர். சிறுசிறு ஓட்டைகளைத் தேடி அலைந்து அவற்றைப் பெரிதாக்குகின்றனர். எனவே எச்சரிக்கை தேவை. இவ்வாறு வீரமணி கூறியுள்ளார்.

English summary
Dravidar Kazhagam president K.Veeramani allegation on BJP
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X