For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆர்.கே. நகர் இடைத் தேர்தல்: நடந்தேறிய மற்றுமோர் கேலிக்கூத்து!

By R Mani
Google Oneindia Tamil News

-ஆர். மணி

மற்றுமோர் கேலிக்கூத்து தமிழகத்தில் நடந்து முடிந்திருக்கிறது. சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தல்தான் அது.

தமிழ் நாட்டில் கடந்த 12 ஆண்டுகளாகவே இடைத் தேர்தல்கள் என்பவை வெறும் கேலிக் கூத்துகள்தான் என்பது உலகறிந்த உண்மை.

2003 ம் ஆண்டு அன்றைய ஜெயலலிதா ஆட்சியில் திருநெல்வேலியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் துவங்கி, 2005 பிப்ரவரியில் கும்மிடிபூண்டி, காஞ்சிபுரம் வரை விரிந்த இடைத்தேர்தல் அவலங்கள் 2006 2011 திமுக ஆட்சிக் காலத்தில் ஆழமாகவும், அகலமாகவும் வேரூன்றின.

One more election mockery staged!

2009 ஜனவரியில் மதுரை திருமங்கலம் இடைத் தேர்தல்களில் ஒரு ஒட்டுக்கு 2000 ரூபாய் கொடுத்து, ‘திருமங்கலம் ஃபார்முலா' என்றே ஆக்ஸ்ஃபோர்டு அகராதியில் இடம் பெறும் அளவுக்கு புகழ் பெற்றுவிட்டது. திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற 11 இடைத் தேர்தல்களிலும், திமுக வும் அதன் கூட்டணி கட்சிகளும் மட்டுமே வென்றன. பென்னாகரத்தில் அஇஅதிமுக வே டெபாசிட் இழந்தது. 2011 சட்ட மன்ற பொதுத் தேர்தல்களுக்கு பத்து மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு இடைத்தேர்தலில் கூட திமுக அமோக வெற்றிப் பெற்றது.

ஆனால் 2011 மே மாதம் பொதுத் தேர்தலில் தோற்றது. 2011 மே மாதம் ஆட்சிக்கு வந்த அஇஅதிமுக இதுவரையில் தற்போதைய ஆர்கே நகர் இடைத் தேர்தலையும் சேர்த்து மொத்தம் ஆறு இடைத்தேர்தல்களில் வெற்றிப் பெற்றுள்ளது. அதே திருமங்கலம் ஃபார்முலாதான் வெற்றிக்கான சூத்திரம். பணப் பட்டுவாடா கலையில் திமுக வை விட, அஇஅதிமுக நன்கு தேர்ச்சி பெற்று நிகரற்றுத் திகழ்கிறது.

எந்தெந்த பகுதிகளில் எந்த மாதிரியெல்லாம் பணத்தைப் பட்டுவாடா செய்ய வேண்டும் என்பதில் அஇஅதிமுக தொண்டர்கள்தான் இப்போது நிபுணர்கள். தேர்தல் அதிகாரிகள் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு தேடினாலும் கிடைக்காத அளவுக்கு 'மைக்ரோ லெவலில்' நடக்கிறது இந்த பட்டுவாடா.

இடைத் தேர்தல் அறிவிக்கப் பட்டவுடனேயே அந்த தொகுதியின் வரைபடம் நன்றாக அலசி ஆராயப் பட்டு பணப் பட்டுவாடாவுக்கான வரைவுத் திட்டம் வகுக்கப் படுகிறது. பின்னர் அது கன கச்சிதமாகவும் செயல்படுத்தப்படுகிறது.

இன்னொன்று, வாக்காளர்களே, 'எங்க ஏரியாவுக்கு இன்னும் வரலியே' என்று பணத்தை எதிர்பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டதுதான். புதுக்கோட்டை இடைத் தேர்தலில் தங்கள் பகுதியில் பணப் பட்டுவாடா நடக்கவில்லை என்று கூறி வாக்காளர்கள் ஒரு நாற்சந்தியில் சாலை மறியலில் ஈடுபட்டதற்கு நானே சாட்சி. உள்ளூர் தாசில்தாரும், காவல்துறை உதவி ஆய்வாளரும் அவர்களிடம் சமாதானம் செய்து பணப்பட்டுவாடா மறுநாள் நடக்கும் என்று உத்திரவாதம் அளித்த பிறகுதான் மறியல் வாபஸ் ஆனது. இப்படியொரு அற்புதமான ஜனநாயகக் காட்சியை வேறெந்த மாநிலத்திலாவது காண முடியுமா என்று தெரியவில்லை.

One more election mockery staged!

திமுக, அதிமுக இரண்டு தரப்பும் மாறி மாறி பணப் பட்டுவாடாவை செய்கின்றனர். ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் அஇஅதிமுக வுக்கு போட்டியாக (இணையாக என்று சொல்ல முடியாது) திமுக வும் பணம் கொடுத்தது. ‘பொன்னை வைக்கிற இடத்தில் பூ வை வைப்பது போலத் தான்' இது என்று என்னிடம் ஒரு திமுக தொண்டர் கூறினார். அஇஅதிமுக ஒரு ஒட்டுக்க 2,000 ரூபாய் கொடுத்த போது திமுக வினர் ஒரு ஒட்டுக்கு 1,000 ரூபாய் கொடுத்தனர்.

ஆனால் ஆர் கே நகர் தொகுதியில் பணத்தை விட கள்ள ஒட்டுகள்தான் ஜெயலலிதா இந்த அளவுக்கு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெற உதவியது என பரவலாகவே நம்பப்படுகிறது. புடவை, வேட்டி மற்றும் சிற் சில இடங்களில் பரிசுப் பொருட்களை கொடுத்ததை தவிர பணம் பெரிய அளவில் விளாயாடவில்லை.

காரணம் பெயரைக் கெடுத்துக் கொள்ள ஜெயலலிதா விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் அஇஅதிமுக வினர் இந்த முறை கடைபிடித்த வியூகம் மாறுபட்டது, ஆபத்தானது. 27 ம் தேதி பகல் 11 மணியளவிலேயே வாக்குப் பதிவு மந்தமாக இருப்பதைக் கண்டு கொண்ட ஜெ தரப்பு, இப்படியே போனால் அம்மா குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றிப் பெறுவார் என்பதை உணர்ந்து கள்ள ஒட்டுக்களை சரமாரி யாக போட முடிவு செய்தது.

சென்னை மாநகரின் பல கவுன்சிலர்கள் - அவர்கள் ஆர் கே நகர் தொகுதியில் வாக்காளர்கள் இல்லை - கள்ள ஒட்டுக்களை ஏகத்துக்கும் போடுவதற்கு தலைமை தாங்கியிருக்கிறார்கள். சென்னை மாநகரின் அஇஅதிமுக கவுன்சிலர்களின் கைகளை பார்த்தாலே கள்ள ஒட்டுக்களின் வீச்சை நாம் நன்றாக புரிந்து கொள்ள முடியும். இதற்கு சரியான உதாரணம், 181 வது பூத்தில் விழுந்த வாக்குகள். மொத்த வாக்குகளே 300 க்கும் சற்று கூடுதல்தான் இங்கு. ஆனால் இந்த வாக்குச் சாவடியில் ஏறத்தாழ 400 வாக்குகளுக்கும் கூடுதலாக பதிவாகியிருக்கின்றன. அதனால்தான் மறு வாக்குப் பதிவுக்கு தேர்தல் ஆணையமே உத்தரவிட்டது. ஆதாரங்களுடன் ஏராளமான புகார்கள் கொடுத்தும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது தலைமை செயலகத்தில் செய்தி ஒளிபரப்புத் துறையில் உயர் பதவியில் இருக்கும் ஒரு அதிகாரி ஜெயலலிதா வேட்பு மனுத் தாக்கல் செய்ய வரும்போது உடன் வந்தார். சேலத்தில் பணியிலிருக்கும் ஒரு உதவி போலீஸ் கமிஷனர், அஇஅதிமுக கரை வேட்டிக் கட்டிக் கொண்டு வெளிப்படையாகவே ஜெ வுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். இவை எல்லாமே ஆதாரங்களுடன் தேர்தல் கமிஷனுக்கு புகார்களாக எடுத்துச் செல்லப்பட்டும் கமிஷன் கண்டுகொள்ளவே இல்லை.

கள்ள ஒட்டுக்களின் வீச்சு தேர்தல் கமிஷனுக்குத் தெரிந்தும், வாய் மூடி மெளனம் சாதிக்கிறது. கடந்த 12 ஆண்டுகளில் ஒட்டுக்குப் பணம் கொடுப்பது ஒரு தனி கலையாகவே இங்கு வளர்ந்து விட்டதென்றால், அதற்கிணையான ஆபத்தாக கள்ள ஒட்டுப் போடுவதும் தொடர்கிறது. லேட்டஸ்ட் சாட்சிதான் ஆர் கே நகர் தொகுதி இடைத் தேர்தல். இதன் அடுத்த கட்டம் வாக்குச் சாவடிகளை கைப்பற்றுவதாக இருக்கலாம். அடுத்த தேர்தலில் அதை நோக்கி ஆளும் அஇஅதிமுக முன்றேறினாலும் ஆச்சரியமில்லை.

இதில் வேதனையான, கேவலமான விஷயம், கண் முன்னால் நடந்த இந்த விஷயங்கள் குறித்து எழுதாமல், தொலைக் காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள் கள்ள மெளனம் சாதிப்பதுதான். 2006 - 2011 திமுக ஆட்சிக் காலத்தில் வானளவு எகிறி குதித்த ஊடகங்கள் ஜெ ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற இடைத் தேர்தல் அவலங்கள் குறித்து பாரா முகமாய் இருப்பதை என்னவென்பது!

கடந்த 12 ஆண்டுகால அவல நாடகத்தில் மற்றுமோர் கேலிக் கூத்து நடந்தேறியிருக்கிறது. இந்தியாவுக்கே முன்னோடியாய் தமிழகம் இதில் விளங்கிக் கொண்டிருப்பது ஒவ்வோர் தமிழனும் 'பெருமை கொள்ள' வேண்டிய விஷயம்தான்.

கடந்த ஐந்தாண்டுகளில் ஒய்வு பெற்ற ஒவ்வோர் இந்திய தலைமை தேர்தல் ஆணையரும் தமிழகத் தேர்தல்களில் பணப் பட்டுவாடாவை தங்களால் தடுக்க முடியவில்லை என்று வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டுள்ள நிலையில் ஆர் கே நகர் இடைத் தேர்தல் இதில் சிகரம் தொட்டிருக்கிறது... வரும் சட்டமன்ற பொதுத் தேர்தலில் இன்னும் எத்தனை சிகரங்களை தொடப் போகிறோமோ!

(கட்டுரையாளர் ஆர் மணி, அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகத் துறையில் அரசியல் செய்தியாளராக நெடிய அனுபவம் மிக்கவர். பல தேர்தல் களங்களில் நேரடி அனுபவம் பெற்றவர்.)

English summary
There was one more election mockery was staged in Tamil Nadu. It was none other than RK Nagar by poll where TN CM Jayalalithaa contested and won with historic margin. How it was happened? Go through the article.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X