ஏன் ஜான் டெர்னஸ்? ஆப்பிள் CEOவாக நியமிக்கப்பட என்ன காரணம்? யார் இவர்?
உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், தனது தலைமையில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது. நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) டிம் குக் செப்டம்பர் 2026-ல் பதவியை விட்டு விலக உள்ளார்.
இருப்பினும் அவர் நிறுவனத்தை முழுமையாக விட்டு வெளியேறவில்லை. டிம் குக் எக்ஸிக்யூட்டிவ் சேர்மேன் என்ற பொறுப்புக்கு மாறுகிறார். புதிய CEO-வாக ஜான் டெர்னஸ் செப்டம்பர் 1 முதல் பொறுப்பேற்கிறார். இந்த மாற்றம் நீண்டகால திட்டமிட்ட நிர்வாக திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

ஜான் டெர்னஸ் யார்?
ஜான் டெர்னஸ் புதிய முகம் இல்லை, ஆப்பிள் நிறுவன ஊழியர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும், நிர்வாக குழுவிற்கும் மிகவும் பரிச்சயப்பட்ட ஒரு முகம். 2001-ம் ஆண்டு நிறுவனத்தில் இணைந்த அவர், சுமார் 25 ஆண்டுகளாக ஆப்பிளில் பணியாற்றி வருகிறார்.
ப்ராடெக்ட் டிசைன் குழுவில் தொடங்கி, 2013-ல் வைஸ் பிரசிடெண்ட் பதவிக்கு உயர்ந்தார். 2021-ல் ஹார்ட்வேர் இன்ஜினியரிங் பிரிவின் சீனியர் வைஸ் பிரசிடெண்ட் ஆனார். இப்போது அவர் 50 வயதில் நிறுவனத்தின் CEO பொறுப்பை ஏற்க உள்ளார்.
ஆப்பிளில் டெர்னஸின் பங்கு
டெர்னஸ் ஒரு மேனேஜர் மட்டுமல்ல, ஒரு பில்டர் கூட. ஆப்பிளின் முக்கிய தயாரிப்புகளாக ஐபோன், மேக், ஐபேட், ஆப்பிள் வாட்ச், ஏர்பாட்ஸ் உள்ளிட்ட ஆப்பிளின் அனைத்து முக்கிய தயாரிப்புகளின் உருவாக்கத்திலும் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
Vision Pro ஹெட்செட் போன்ற புதிய தயாரிப்புகளின் வளர்ச்சியிலும் அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இன்டெல் ப்ராசஸர்களிலிருந்து ஆப்பிளின் சொந்த சிலிகான் சிப்களுக்கு மாற்றியதில் ஜான் டெர்னஸ் தலைமை முக்கியமானது. இந்த மாற்றம் தான் ஆப்பிளின் செயல்திறன் மற்றும் பேட்டரி ஆயுளை பெரிதும் மேம்படுத்தியது.

ஏன் டெர்னஸை தேர்வு செய்தது ஆப்பிள்?
ஆப்பிள் இந்த முடிவை எடுத்ததற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன. முதலாவதாக, டெர்னஸ் ஆப்பிளின் தயாரிப்புகளை முழுமையாக அறிந்தவர். இரண்டாவதாக, அவர் ஏற்கனவே நிறுவனத்தின் மிக முக்கியமான இன்னோவேஷன்களில் வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளார். மூன்றாவதாக, அவர் ஆப்பிளின் அடிப்படை கொள்கைகளான எளிமை, தரம் மற்றும் சிறந்த புதுமையை தீவிரமாக பின்பற்றுபவர். மேலும் ஆப்பிளின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு இன்னோவேஷன் மிகவும் முக்கியம், இதேநேரத்தில் வர்த்தகம் - வருமானமும் முக்கியம் என்பதால் ஜான் டெர்னஸ் இதற்கு சரியான தேர்வாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜான் டெர்னஸ் - 'Product-First' Leader
ஜான் டெர்னஸ் ஆப்பிளின் உண்மையான DNA-வை பிரதிபலிக்கிறார். அவருக்கு தொழில்நுட்பம் மட்டும் முக்கியமல்ல, சிறந்த ப்ராடெக்ட்களை உருவாக்குவதுதான் முக்கியம். "தொழில்நுட்பம் இலக்கு அல்ல, சிறந்த தயாரிப்புகள்தான் இலக்கு" என்பது அவரது எளிய தத்துவம்.
இது ஸ்டீவ் ஜாப்ஸ் தொடங்கி டிம் குக் தொடர்ந்த ஆப்பிளின் பார்வையுடன் பொருந்துகிறது. அதனால்தான் ஆப்பிள் அவரை அடுத்த CEO-வாக தேர்வு செய்தது.
ஜான் டெர்னஸ் அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையில் 1997ஆம் ஆண்டு பி.எஸ். பட்டம் பெற்றவர். பட்டம் பெற்ற கையோடு Virtual Research Inc. என்ற நிறுவனத்தில் இன்ஜினியராக 4 ஆண்டுகள் பணியாற்றினார். இதன் பின்பு அவர் பணியில் சேர்ந்த இடம் தான் ஆப்பிள் 2001-ம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.












Click it and Unblock the Notifications