சொல்லி அடித்த கில்லி..மீண்டும் திரும்பிய 1967-1977 வரலாறு! அண்ணா, எம்ஜிஆர் வரிசையில் தளபதியான விஜய்
சென்னை: சொன்னதை செய்திருக்கிறார் விஜய் தனது பிரச்சார பாடலிலும், தனது பிரச்சாரத்திலும் 1967, 1977-ல் நடந்த மாற்றம் இந்த 2026 இல் நிச்சயம் நடக்கும் என அடித்துச் சொன்னார் விஜய். ஆம், இப்போது அவர் சொன்னது நடந்திருக்கிறது. வாகை சூடும் வெற்றி வரலாறு திரும்பி இருக்கிறது. விஜய் சொன்ன 1967, 1977 ஆம் ஆண்டு தேர்தலில் என்ன நடந்தது? விஜயின் கனவு நனவானது எப்படி? என்பது குறித்து பார்க்கலாம்..
பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் 2026 தமிழக சட்டசபை தேர்தல் சென்றது. தனது முதல் தேர்தலில் மிகப்பெரிய திராவிட கட்சிகளை தோற்கடித்து தமிழகத்தின் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது தமிழக வெற்றிக்கழகம்.

அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா வரிசையில் திரைத்துறையில் இருந்து தமிழகத்தை ஆள வந்திருக்கும் அடுத்த முதல்வராகி இருக்கிறார் விஜய். 108 தொகுதிகளில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தனி பெரும்பான்மை இல்லாததால் கூட்டணி கட்சிகளை நம்பி ஆட்சியைப் பிடித்திருக்கிறார்.
தமிழக வெற்றிக்கழகம்
இருந்தபோதும் எம்ஜிஆர் கூட செய்யாத மாற்றம் இது. அடிப்படையில் ஒரு அரசியல்வாதியான எம்ஜிஆர், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் பயணித்து, எம்எல்ஏவாக இருந்து, அதற்குப் பிறகு தனிக்கட்சி தொடங்கி ஆட்சியைப் பிடித்தார். ஆனால் மக்கள் இயக்கத்தின் மூலம் மக்கள் பணி செய்து வந்த விஜய் அதனை கட்சியாக மாற்றி அதுவும் முதல் தேர்தலில், இரண்டே ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்தது அரிதான சாதனை என்கின்றனர். அந்த வகையில் எம்ஜிஆரை விட விஜயின் அரசியல் வெற்றி ஒரு படி மேல்தான் என்கின்றனர்.
விஜய்
தனது பிரச்சாரத்தின் போது செல்லும் இடமெல்லாம், 1967 - 1977-ல் நடந்த மாற்றம் 2026 சட்டசபை தேர்தலிலும் நடக்கும் என சொல்லி இருந்தார் விஜய். அவர் குறிப்பிட்ட இரண்டு ஆண்டுகளில் நடந்தது என்ன? விஜய் சொன்ன அந்த கனவு எப்படி நினைவானது என்பது குறித்து பார்க்கலாம்..
1967- 1977
1967 - 1977 ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் பொதுவான அம்சம் இருந்தது. நீண்ட காலமாக ஆட்சி செய்து வந்த வலுவான அரசியல் சக்திகளை தோற்கடித்து புதிய அரசியல் சக்திகள் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தன. அதைத்தான் தற்போது 2026 தேர்தலுடன் ஒப்பிட்டு பார்க்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். அதனால்தான் தனது பிரச்சாரங்களில் "1967, 1977 போல 2026லும் மாற்றம் வரும்" என்று தொடர்ந்து கூறி வந்தார் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்.
திமுக எழுச்சி
1967ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றையே மாற்றிய தேர்தலாக பார்க்கப்படுகிறது. அதுவரை தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி, திமுக முதல் முறையாக ஆட்சியைப் பிடித்தது. அந்த வெற்றியின் மூலம் அண்ணாதுரை முதலமைச்சராக பதவியேற்றார். ஆனால் அந்த வெற்றி ஒரே நாளில் கிடைத்ததல்ல. பல ஆண்டுகள் அரசியல் அனுபவமும், நீண்ட கால உழைப்பும் அதற்கு பின்னணியாக இருந்தன.
அறிஞர் அண்ணா
1909ஆம் ஆண்டு பிறந்த அண்ணாதுரை, 1935ஆம் ஆண்டு தனது 26வது வயதில் நீதி கட்சியில் இணைந்து அரசியல் பயணத்தை தொடங்கினார். பின்னர் திராவிடர் கழகத்தில் செயல்பட்ட அவர், 1949ஆம் ஆண்டு திமுகவை தொடங்கினார். அதன் பிறகு படிப்படியாக கட்சியை வளர்த்தார். 1957 தேர்தலில் முதல் முறையாக களமிறங்கிய திமுக, அப்போது 15 இடங்களில் வெற்றி பெற்றது. தொடர்ந்து 1962 தேர்தலில் மேலும் வலுவடைந்து 50 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றது. அந்த வளர்ச்சியின் உச்சமாக 1967 தேர்தலில் திமுக 137 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அப்போது அண்ணா 58 வயதில் முதலமைச்சராக உயர்ந்தார்.
எம்ஜிஆர்
அதேபோல 1977 தேர்தலும் தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. திமுகவில் இருந்து வெளியேறிய எம்.ஜி.ஆர்., 1972ஆம் ஆண்டு அதிமுகவை தொடங்கினார். ஐந்து ஆண்டுகள் கட்சியை கட்டமைத்து மக்களிடம் வலுவான ஆதரவை உருவாக்கினார். அதன் பலனாக 1977 தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றியை பெற்று ஆட்சியைப் பிடித்தது. எம்.ஜி.ஆர். முதலமைச்சராக பதவியேற்றார்.
அரசியல் வரலாறு
ஆனால் எம்.ஜி.ஆரும் அரசியலில் புதியவர்கள் அல்ல. காங்கிரஸ் கட்சியில் ஆரம்பித்த அவரது அரசியல் பயணம், பின்னர் திமுகவில் தொடர்ந்தது. 1953ஆம் ஆண்டு திமுகவில் சேர்ந்த அவர், 1962, 1967 மற்றும் 1971 தேர்தல்களில் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றிருந்தார். அதாவது பல ஆண்டுகள் அரசியல் அனுபவம் பெற்ற பின்னரே அவர் தனிக்கட்சி தொடங்கி ஆட்சியைப் பிடித்தார்.
விஜய் எழுச்சி
இந்த நிலையில் விஜயின் அரசியல் பயணம் முற்றிலும் வேறுபட்டதாக பார்க்கப்படுகிறது. மக்கள் இயக்கத்தின் மூலம் சமூக மற்றும் மக்கள் தொடர்பு பணிகளில் ஈடுபட்டு வந்த அவர், பின்னர் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கினார். அரசியலுக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கூட முழுமையாக ஆகாத நிலையில், முதல் தேர்தலிலேயே தமிழகத்தின் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருப்பது மிகப்பெரிய அரசியல் நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
2026 சட்டசபை தேர்தல்
அண்ணாவும் எம்.ஜி.ஆரும் நீண்ட கால அரசியல் அனுபவத்துடன் ஆட்சியை அடைந்தவர்கள். ஆனால் விஜய் மிகக் குறுகிய காலத்திலேயே மக்களின் ஆதரவை பெற்று அரசியல் மையத்துக்கு வந்திருப்பது தமிழக அரசியலில் புதிய மாற்றத்தின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது. அதனால்தான் 1967 மற்றும் 1977 தேர்தல்களுடன் 2026 தேர்தலை ஒப்பிட்டு பலரும் பேச தொடங்கியுள்ளனர்.














Click it and Unblock the Notifications