உலகில் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு நாடாக இலங்கை இருந்துவிட முடியாது: ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க உறுதி
கொழும்பு: இலங்கைக்கு சர்வதேச ஒத்துழைப்பு அவசியமாகும்; உலக நாடுகள் மத்தியில் எத்தகைய அதிகாரப்பிளவுகள் இருந்தாலும் நாங்கள் உலகில் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு நாடாக அமைந்துவிட முடியாது. உலகத்துடன் கூட்டாக ஒருங்கிணைந்து பயணிக்கவேண்டும் என்று இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க கருத்து தெரிவித்துள்ளார்.
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அனுர குமார திசநாயக்க ஆற்றிய முதல் உரை: நமது நாட்டின் ஜனநாயகத்தின் மிக முக்கியமான பண்பு மக்களால் தம்மை ஆள்வதற்கான ஆட்சியாளரை தேர்வு செய்து கொள்வதே என்பதுதான். தோ்தலின்போது வாக்குகளை அளித்தல் மற்றும் ஆட்சியாளரை தேர்வு செய்து கொள்வதால் மட்டுமே ஜனநாயகம் முற்றுப்பெறாது. ஜனநாயகத்தின் ஓர் அடிப்படை அம்சமாக மட்டுமே அமைந்த போதிலும் நாட்டில் ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்காக கட்டமைப்புக்களின் பலம் பொருந்திய தன்மை அதைப்போலவே சட்டங்களின் பலம்வாய்ந்த தன்மை அவசியம்.

இலங்கையின் ஜனநாயகத்திற்காக உச்சளவிலான அர்ப்பணிப்பினை எனது பதவிக்காலத்தில் வெளிக்காட்டுவேன். அதைப்போலவே எமது நாட்டில் தேர்தலில், அதிகாரப் பரிமாற்றம் என்பதும் ஜனநாயக ரீதியாக மட்டுமே நிகழ்ந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே, மக்களின் ஆணையை ஏற்றுக்கொண்டதற்காக நன்றி தெரிவிக்கிறோம்.
எங்களுக்கு முன் இருப்பது சவால்கள் நிறைந்த ஒரு நாடுதான் என்பதை நாங்கள் மிகவும் ஆழமாக புரிந்து கொண்டிருக்கிறோம். எமது அரசியலில் இதைவிட பரிசுத்தமாக்கப்படவேண்டிய, மக்கள் மிகப் பெரிய அளவில் எதிர்பார்க்கின்ற சாதகமான அரசியல் கலாசாரத்தின் தேவை நிலவுகிறது.
எமது நாட்டின் அரசியல்வாதி மற்றும் அரசியல் பற்றி மக்களிடம் எதிர்மறையான பாதகமான ஓர் கருத்து நிலவுகிறது. ஆகையால் அரசியல் பற்றியும் அரசியல்வாதி பற்றியும் மக்களின் நன்மதிப்பையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துவதற்காக பணியாற்ற வேண்டும்.
இந்த ஆழமான நெருக்கடியானது வெறுமனே ஓர் அரசாங்கம் அல்லது அரசியல் கட்சி அல்லது ஒரு தனிநபரால் மட்டுமே கடந்து செல்லக்கூடிய நிலையில் இருப்பதாக நாங்கள் நம்பவில்லை.
ஏனென்றால் இதற்கு முன்னரும் நான் ஒரு மாயாஜால வித்தைக்காரன் அல்ல என்றே கூறியிருக்கிறேன். நான் இந்த நாட்டில் பிறந்த ஒரு சாதாரண குடிமகன். ஆற்றல்கள் இருக்கின்றன. ஆற்றாமைகளும் இருக்கின்றன. நாம் அறிந்த விஷயங்களும் இருக்கின்றன. அறியாத விஷயங்களும் இருக்கின்றன. என்னுடைய முதன்மைப்பணி இந்த நாட்டை நெறிப்படுத்துவதாகும். இந்த நெருக்கடியை நிறைவு செய்யும் போது உங்கள் அனைவரது ஒத்துழைப்பினையும் எதிர்பார்க்கிறேன்.
நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் என்னிடம் ஒரு தலையாய பொறுப்பு இருப்பதாக நான் நம்புவதோடு இந்த சவாலை வென்றெடுப்பதற்காக எல்லாச் சந்தர்ப்பங்களிலும் செயலாற்றுவதற்காக என்னிடம் கையளிக்கப்பட்டுள்ள பொறுப்பினை நான் முறைப்படி ஈடேற்றுவேன் என்பதை இந்த சமூகத்திற்கு நிரூபித்துக் காட்டுவேன்.
எமது நாட்டுக்கு சர்வதேச ஒத்துழைப்பு அவசியமாகும். உலக நாடுகள் மத்தியில் எத்தகைய அதிகாரப்பிளவுகள் இருந்தாலும் நாங்கள் உலகில் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு நாடாக அமைந்துவிட முடியாது. உலகத்துடன் கூட்டாக ஒருங்கிணைந்து பயணிக்கவேண்டும். அதற்கு அவசியமான தீர்மானங்களை மேற்கொள்வதில் நாங்கள் ஒருபோதுமே தயங்கமாட்டோம்.
எமது நாட்டின் ஜனநாயகத்தினால் நான் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறேன். அவ்வாறு தேர்வு செய்துகொள்வதற்காக மக்கள் எனக்கு வாக்களித்திருக்கிறார்கள். எனக்கு அளிக்கப்படாத வாக்குகளும் இருக்கின்றன. எனவே எமது வெற்றியின் உள்ளடக்கம் மற்றும் அளவு பற்றி எமக்கு சிறந்த புரிந்துணர்வு இருக்கின்றது.
எமக்கு ஒத்துழைப்பு நல்காத, எம்மை நம்பாத பிரஜைகளின் ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்வதும் அவர்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதும் எனது ஆட்சிக்காலத்தில் எனக்கு கையளிக்கப்பட்டுள்ள பொறுப்பாக அமைகின்றது. அந்த பணியை சரிவர ஈடேற்ற முடியுமென்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இவ்வாறு அனுர குமார திசநாயக்க உரையாற்றினார்.












Click it and Unblock the Notifications