சினிமாவை மிஞ்சிய பரபரப்பு.. நொடிக்கு நொடி ‘ட்விஸ்ட்’.. நள்ளிரவில் திருப்பத்தூரில் நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: சினிமாவை விஞ்சும் ட்விஸ்ட்கள் நேற்று வாக்கு எண்ணிக்கையின்போது திருப்பத்தூர் சட்டசபை தொகுதியில் அரங்கேறியுள்ளன. வெறும் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கேஆர் பெரியகருப்பனை வீழ்த்தியுள்ளார் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி. இந்தத் தொகுதி முடிவுதான் தமிழ்நாட்டிலேயே கட்டக் கடைசியாக நள்ளிரவில் அறிவிக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில், திமுக சார்பில் அமைச்சர் கேஆர் பெரியகருப்பன், பாஜக சார்பில் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் திருமாறன், தவெக சார்பில் சீனிவாச சேதுபதி, நாம் தமிழ் கட்சி சார்பில் ரம்யா மோகன், சசிகலா கட்சி சார்பில் உமாதேவி ஆகியோர் போட்டியிட்டனர். மேலும், 10 சுயேட்சைகளும் இந்த தேர்தலில் போட்டியிட்டனர்.

Cinema-Like Twist in Tirupattur TVK Wins by Just One Vote at Midnight

திருப்பத்தூர் தொகுதி திமுகவின் கோட்டையாக இருந்து வந்த தொகுதி. 8 முறை இங்கு திமுக வெற்றி பெற்றுள்ளது. திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2006ஆம் ஆண்டு முதல் திமுக சார்பில் பெரியகருப்பன் போட்டியிட்டு தொடர் வெற்றியைப் பெற்று வந்தார். இந்நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் 5வது முறையாக அவரே களம் இறங்கினார். இதனால், எதிர்பார்ப்பு மிகுந்த தொகுதியாக திருப்பத்தூர் இருந்தது.

3வது ரவுண்டு முடிவில்

தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்ட நிலையில், தவெக - திமுக இடையே குறைவான வாக்கு வித்தியாசத்தில் இழுபறி நிலவி வந்தது. வாக்கு எண்ணிக்கையில் முதல் 3 சுற்றுகள் வரை திமுக வேட்பாளரான அமைச்சர் பெரியகருப்பன் 10,533 வாக்குகள் பெற்றிருந்தார். தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி 8,861 வாக்குகளுடன் 2-வது இடத்திலும், பாஜக வேட்பாளர் திருமாறன் 4,175 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் இருந்தனர்.

10வது ரவுண்டில்

10வது சுற்று முடிவில் திமுக வேட்பாளரான அமைச்சர் பெரியகருப்பன் 34,420 வாக்குகள் பெற்றிருந்தார். தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி 29,518வாக்குகளுடன் 2-வது இடத்திலும், பாஜக வேட்பாளர் திருமாறன் 12,496 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் இருந்தனர்.

20வது ரவுண்டில்

20 சுற்றுகள் வரை தொடர்ச்சியாக கேஆர் பெரியகருப்பன் சுமார் 4000 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருந்து வந்தார். 20வது சுற்று முடிவில், திமுக வேட்பாளர் பெரியகருப்பன் 62,055 வாக்குகள் பெற்றிருந்தார். தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி 59,148 வாக்குகளுடன் 2-வது இடத்திலும், பாஜக வேட்பாளர் திருமாறன் 22,656 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் இருந்தனர்.

26வது ரவுண்டில் நடந்த மாற்றம்

25வது ரவுண்டு வரை தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார் பெரியகருப்பன். இடையிடையே சில ரவுண்டுகளில் தவெக வேட்பாளரின் வாக்குகள் ஏறினாலும், வித்தியாசம் நீடித்து வந்து கொண்டிருந்தது. 26வது ரவுண்டு தொடங்கியதும், திமுக வேட்பாளரை விட 199 வாக்குகள் அதிகம் பெற்றார். அடுத்தடுத்த சுற்றுகளில் லீடிங் ஏறியது.

30வது சுற்று ட்விஸ்ட்

கடைசி 4 வாக்குப்பதிவு எந்திரங்களை எண்ணியபோது உச்சகட்ட பரபரப்பு இருந்தது. அதில் முதல் பெட்டியை எண்ணி முடித்தபோது பெரியகருப்பன் 127 வாக்குகள் முன்னிலையில் இருந்தார். மற்றொரு பெட்டியை எண்ணும்போது தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி 157 வாக்குகள் முன்னிலை பெற்றார். 3-வது பெட்டியை எண்ணி முடிக்கும்போது அமைச்சர் பெரியகருப்பன் 30 வாக்குகள் முன்னிலையில் இருந்தார்.

கடைசிப் பெட்டியை எண்ணும்போது அந்த வாக்கு எந்திரத்தில் திடீரெனக் கோளாறு ஏற்பட்டதால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டு உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டது. பின்னர் மீண்டும் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், அமைச்சர் பெரியகருப்பன் 83,374 வாக்குகளும், தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி 83,375 வாக்குகளும் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பெரியகருப்பனைவிட தவெக வேட்பாளர் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

செல்லாத ஓட்டு?

இதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மீண்டும் அனைத்து வாக்குகளையும் எண்ண வேண்டும் என்று திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் அதிகாரிகள் அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்தனர். தபால் வாக்குகளில் செல்லாதவை மட்டும் மீண்டும் பரிசீலிக்கப்பட்டன. செல்லாத வாக்குகள் என வைக்கப்பட்டவை மறு ஆய்விலும் செல்லாதவை என்றே உறுதி செய்யப்பட்டன.

இதையடுத்து, ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் பெரியகருப்பனின் தோல்வி உறுதி செய்யப்பட்டது. இப்படியாக, சினிமாவை மிஞ்சும் பரபரப்புடன் நடந்த வாக்கு எண்ணிக்கை, நள்ளிரவில் கிளைமாக்ஸை எட்டியது.

வெறும் 1 ஓட்டில் தவெக வேட்பாளர் வெற்றியைக் கைப்பற்றியதால் திமுகவினர் அதிர்ச்சியில் உறைந்தனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, மானாமதுரை, காரைக்குடி, திருப்பத்தூர் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளையும் தவெக கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+