பேசாம ஸ்டாலினும் எடப்பாடியும் சேர்ந்து ரஜினியை CM ஆக்கி விட்டா என்ன?
தமிழ்நாட்டு அரசியல் களம் கடந்த 48 மணி நேரமாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பரபரப்பும், ஊகங்களும் நிறைந்துள்ளது. ஒருபக்கம் தவெக-வின் கூட்டணி உறுதியாகவில்லை, திமுக - அதிமுக கட்சிகள் அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் தலைமையில் கூட்டங்களை நடத்தி வருகிறது. இன்னொரு பக்கம் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தவெக-வை பெரும்பான்மை காட்டாமல் ஆட்சி அமைக்க அழைக்க முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை இன்னும் உறுதியாகாத சூழல் தொடர்கிறது.

இந்த நிலையில் திமுக மற்றும் அதிமுக ரகசியமாக இணைந்து தவெகவை ஆட்சியமைக்க தடை செய்ய முயற்சிப்பதாக தவெக கொள்கைப் பரப்புச் செயலாளர் கே.ஜி.அருண்ராஜ் வெளிப்படையாக செய்தியாளர்கள் மத்தியில் குற்றம் சாட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினிகாந்த் "நடுநிலை" முதல்வரா?
அரசியல் வட்டாரங்களில் பேசப்படும் முக்கிய கோட்பாடு என்னவெனில், திமுகவும் அதிமுகவும் தனித்தனியாக ஆட்சி அமைக்க முடியாத சூழலில், "நடுநிலை நிர்வாகம்" என்ற மாடலை பரிசீலிக்கலாம் என்பதுதான்.
இந்த அரசியல் சூழலில், நடிகர் ரஜினிகாந்தை ஒரு "நடுநிலை" முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி, அதாவது ரஜினிகாந்த் போன்ற அரசியல் சார்பற்ற, ஆனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் மரியாதை பெற்ற நபரை முதலமைச்சராக முன்வைத்து, திமுக மற்றும் அதிமுக இணைந்து ஆட்சியமைக்க திட்டம் தீட்டப்படுகிறதா என்ற யூகங்கள் தற்போது எழுந்துள்ளன.
ரஜினிகாந்த் இரு கட்சிகளாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நடுநிலையான பிரமுகர் என்று கருதப்படுவதால், அவரை ஒரு தற்காலிக நிலையான தலைவராக நியமித்து, அமைச்சரவையை பகிர்ந்துகொள்ளும் அல்லது அதிமுக ஆட்சியிலும், திமுக வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் அரசு மாதிரியை உருவாக்கலாம்.
இதன் மூலம் அரசியல் புதுமுகமான விஜய்யை ஆட்சிக்கு வருவதை தடுத்து, தற்போதைய ஆட்சி அமைப்பை பாதுகாக்க முடியும். இந்த சந்தேகத்திற்கு தீனி போட்டது நடிகர் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு.
ரஜினி - ஸ்டாலின் சந்திப்பு பின்னணி
இந்த ஊகங்கள் அனைத்தும் ரஜினிகாந்த் மற்றும் மு.க.ஸ்டாலின் இடையே நடைபெற்ற சந்திப்புக்குப் பிறகு தான் தீவிரமடைந்துள்ளன. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் ஸ்டாலினை அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சந்தித்து பேசினார். "வெற்றி காலத்தில் மட்டுமல்ல, இக்கட்டான சூழலிலும் உங்களுடன் இருப்பேன்" என்று ரஜினிகாந்த் ஆறுதல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானதாக இருந்தாலும், தற்போதைய அரசியல் சூழலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

48 மணி நேரத்தில் நடந்த சம்பவங்கள் கிளப்பிய சந்தேகம்
கடந்த 48 மணி நேர அரசியல் நிகழ்வுகள் தமிழகத்தில் புதிய அரசியல் சமன்பாடு உருவாகிறதா என்ற கேள்வியை வலுப்படுத்தியுள்ளன. முதலில் ரஜினிகாந்த் - ஸ்டாலின் சந்திப்பு நடந்தது. அதன்பின் திமுக - அதிமுக இணைப்பு குறித்த வதந்திகள் வேகமெடுத்தன. தொடர்ந்து ரஜினிகாந்த் மற்றும் அமைச்சர் எ.வ.வேலு சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் பெற்றது.
அதே நேரத்தில், ஸ்டாலின் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி வருத்தம் தெரிவித்தது, "அதிசயம் நடக்கலாம்" என அதிமுக முன்னாள் அமைச்சர் அன்பழகன் கூறியது, "அதிமுக ஆதரவு அளித்தால் ஏற்றுக்கொள்வோம்" என காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தெரிவித்தது போன்ற கருத்துகள் அரசியல் சூழலை மேலும் சூடுபிடிக்க வைத்துள்ளன.
ரஜினி மீண்டும் அரசியலுக்கா?
ரஜினிகாந்த் ஏற்கனவே அரசியலுக்கு வரமாட்டேன் என்று அறிவித்திருந்தாலும், தற்போதைய அரசியல் குழப்பம் அவரது பெயரை மீண்டும் அரசியல் மையத்தில் கொண்டு வந்துள்ளது. குறிப்பாக, ரஜினிக்கும் விஜய்க்கும் இடையே "ஜெயிலர்" ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசப்பட்ட "காக்கா - கழுகு" கதைக்கு பிறகு இருவருக்கும் மத்தியில் பெரிய அளவிலான உரசல் இருந்து வந்தது.
இதனால், "தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை தடுக்க ரஜினி ஒரு சமரச முகமாக கொண்டு வரப்படுகிறாரா?" என்ற கேள்வி எழுகிறது.
ஸ்டாலினின் அதிரடி உத்தரவுகள்
இந்த அரசியல் பரபரப்புக்கு மத்தியில் மு.க.ஸ்டாலின் திமுக கட்சியினருக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். சென்னை அறிவாலயத்தில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில், கட்சியினர் அனைவரும் சென்னையை விட்டு வெளியேறாமல் அங்கேயே தங்கி இருக்க வேண்டும் என்று தெளிவாக உத்தரவிட்டார். அரசியல் சூழல் மாறியுள்ளதால், அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு தயாராக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும், அரசியல் மற்றும் நிர்வாக சூழலை ஆய்வு செய்து "நிலையான ஆட்சி" அமைப்பதற்கான முழு அதிகாரம் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளது. திராவிட இயக்கக் கொள்கைகளுக்கு எதிரான சக்திகள் வளர்வதை தடுக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
காங்கிரஸ் மீது கண்டனம்
கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கையும் கடுமையாக கண்டிக்கப்பட்டது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் இருந்து விலகிய காங்கிரஸை விமர்சித்தது. கூட்டணியின் உழைப்பால் பெறப்பட்ட வெற்றியை ஆபத்தில் தள்ளியதாகவும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டது.
அதிமுக அதிரடிகள்
புதுச்சேரியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் (Resort) அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இந்த ரகசிய ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த அதிரடி என்ன?
தற்போது எந்தக் கட்சியும் கூட்டணி குறித்த தகவல்களை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை. இருப்பினும், தமிழக அரசியல் சூழல் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் புதிய திருப்பத்தை எடுத்து வருகிறது.
தவெகவின் வெற்றி, திமுக-அதிமுக இடையே உருவாகும் சாத்தியக் கூறுகள், ரஜினிகாந்தின் பங்கு ஆகியவை அடுத்த சில நாட்களில் முக்கிய திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
















Click it and Unblock the Notifications