For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முகத்தில் தெளித்த சாரல்...

By Staff
Google Oneindia Tamil News

"மலையுச்சிக்குச் செல்லும் பாதையை

அறிய விரும்பினால் நீ கேட்க வேண்டும்

அங்கு போய்த் திரும்பி வந்த மனிதனையே" -

ஸென் சூருவுடைய ஹைகூ இது.


மலையுச்சிக்குச் சென்று திரும்புவது கடினம்.

செல்வதைக் காட்டிலும் திரும்புவது சிரமம்.

செல்வதைக் காட்டிலும்

திரும்பி வருவதில் ஆபத்துகள் அதிகம்.


செல்வது என்ன நடக்குமோ என்கிற எதிர்பார்ப்பில் அமைவது

அதில் சுவாரசியம் இருக்கும்.

பயம் இருக்கும்.

ஆனால் பயம் கூட யூகமும் ஆர்வமும் கலந்ததாக இருக்கும்.


திரும்பி வரும்போது சலிப்பு ஏற்படும்.

சென்ற பாதையிலேயே திரும்புவது

புதியனவற்றைத் தேடும் உள்ளத்திற்கு எப்போதுமே

தளர்ச்சியைத் தரும்.


மலையுச்சிக்குச் செல்பவனும் சிகரமாகி விடுகிறான்-

மலையோடு ஐக்கியமாகி உயரத்தில் நின்று விடுகிறான்.


உயர்ந்த சிகரத்தில் மனிதன் ஏறி நிற்கும் போது

அவன் உயரம் சிகரத்தைக் காட்டிலும் அதிகமாக

இருப்பதனாலேயே அவன்

கீழே வரத் தயங்குகிறான்.


நடனமாடுபவனே நடனமாவது போல -

ஒளியின் வேகத்திற்குச் செல்பவனே ஒளியாவது போல்

விழிப்புணர்வின் உச்சத்திற்குச் சென்றவர்கள்

விழிப்புணர்வாக மாறிவிடுகிறார்கள்.


மலையுச்சிக்குச் சென்றவர்கள்

ஒரு போதும் பாதையைச் சொல்வதில்லை -

அனுபவத்தைக் கூறுவதில்லை -


அனுபவத்தைச் சொல்லும்போதே அது நீர்த்துப் போகிறது -

அனுபவத்தைக் கேட்பதே போதும்

என்று பலர் இளைப்பாற ஆரம்பித்து விடுகிறார்கள்.


அடர்ந்த காடுகளையும்,

உச்சியிலிருந்து ஓடிவரும் அருவியையும்,

பூத்துக் குலுங்கும் மரங்களையும்,

கிளைகளின் மீது அமர்ந்து பாடும் பறவைகளையும்

ஊர்ந்து வரூம் தென்றலையும்

நேசிக்கக் கற்றவர்களுக்குத் தேவை

வார்த்தைகளல்ல; வாழ்க்கை

விளக்கங்களல்ல; அனுபவம்

சொற்களல்ல; சுகம்


விழிப்புணர்வின் உச்சத்திலிருப்பவர்களுக்கு

சொற்களின் வியர்த்தம் புலப்படும் -

சொற்களளவிற்கு இறங்குவதற்கு அவர்களுக்கு

ஒரு போதும் சம்மதமில்லை.

சொற்களே கடவுளாகும் சொற்ப உலகம்

அவர்களுக்குப் பரிச்சயம்.

மலையுச்சிக்குச் செல்லும் பாதையை

அறிய ஒரே வழி

நாமே மலையேறத் தொடங்குதல்தான்.


உண்மையான மலையுச்சியை அடைந்தவன்

திரும்பி வர ஆசைப்படுவதில்லை.

பாதி வழியில் திரும்பி வந்தவர்கள்

ஏற முடியாமல் ஓடி வந்தவர்கள்தான்

மலையுச்சிக்கான பாதையை

வரைபடம் தயாரித்து விற்று வருகிறார்கள்.


சிகரத்தைத் தொடும்போதே

அதில் பாறையாகிவிடும் பக்குவமும் வந்தபிறகு

ஏறிவிட்டேன் பார்! என்று

தோள் நிமிர்த்தி உலகுக்குக் காட்ட என்ன இருக்கிறது?


மலையுச்சிக்குச் சென்றவர்கள்

அங்கேயே காத்திருக்கிறார்கள் -

மற்றவர்கள் ஏறி வர வேண்டுமென்பதற்காக -

அவர்கள் திரும்பி வரவேயில்லை என்றால்

எப்படிக் கேட்பது வழியை?

அவர்கள் திரும்பி வராமலிருப்பதுதான்

அவர்கள் தரும் தகவல்.

நாம் தேடிச்செல்ல திராணியுடனிருப்பதே

பாதையை அறியும் வழி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X