For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முகத்தில் தெளித்த சாரல்...

By Staff
Google Oneindia Tamil News

என் மேசை மீது ஒரு தகவல்.

""என் வீட்டின் முன் இருநூறு வருடங்களாக

இருந்து

எனக்குக் காற்றையும், நிழலையும்

வழிப்போக்கர்களுக்கு இளைப்பாறுதலையும் அளித்த

மழைமரம்

இயற்கை எய்தியது.

அதன் நினைவாக நடக்க இருக்கும்

இரங்கல் கூட்டத்திற்கு நீங்களும் வாருங்கள்.

எனக்கு வியப்பு தான் - மனிதர்களை மரங்களாக்குபவர்கள் மத்தியில்

இன்னமும் மரங்களையும் மனிதர்களாக நினைப்பவர்கள்

வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே என்று ...

மழை மரம் Raintree என்பதை

தூங்குமூஞ்சி மரம் என தமிழில் அழைக்கிறார்கள் --

தமிழர்களுக்குக் குற்றம் சொல்லும்

பாரம்பரியத்தின் வெளிப்பாடு .

வேடந்தாங்கலில் Night Heron என்பது

குருட்டுக் கொக்கு என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

எல்லா மரங்களுமே மழை மரங்கள் தான் -

மழையை வரவழைப்பதால்.

ஆயினும் மழைமரம் என்பது மழையிலிருந்து நனையாமல்

வெகுநேரம் அடைகாக்கும்.

இயற்கை, இயற்கை எய்துவது

இயற்கையால் நிகழ்வது இல்லை -

அது மனிதர்களால், மாந்தர்களால், மாக்களால் -

இரண்டு கவிதைகள் - இரண்டுமே ஹைகூ

"ஆழ்ந்த இலையுதிரில்

இந்தப் புழு

இன்னும் பட்டாம்பூச்சியாகவில்லை (BASHO)

"பழுத்த மஞ்சள் இலைகள்

மரத்திலிருந்து

உதிர்ந்த உணர்வுகள் (KOJI)

இலையுதிரைப் பற்றி இரண்டு ஹைகூக்களும் பேசுகின்றன-

ஒன்று இலையுதிர் என்பது மரணமாகக் கருதுகிறது.

மற்றொன்று இலையுதிர் மரம் பூக்களை அடைகாக்கும் பருவமாக நினைக்கிறது.

கிழக்கத்திய சிந்தனையுடன்

எழுதப்பட்ட ஹைகூ

புழு பட்டாம்பூச்சியாவதற்கு முன்

கூட்டுப்புழுவாகக் கிடப்பது போல்

வசந்தத்திற்கு முன் இலைகளையும், பூக்களையும்

சுருக்கிக் கொண்டு மரம் தவமிருப்பதாகக் கருதுகிறது.

மேற்கத்திய சிந்தனையுடன்

எழுதப்பட்ட ஹைகூ

இலைகள் மரம் உதிர்க்கின்ற உணர்வுகள்

என்று கருதுகிறது.

உயிரினும் மேம்பட்டது உணர்வு-

ஒவ்வொரு இலையும் மரம் உதிர்த்த உணர்வு எனின்

மரத்தின் இதயம் பலவீனமடையாதா?

இனி துளிர்ப்போமா? எனும் தயக்கம் இருக்காதா?

இது புழுதான் -

ஆனால் பட்டாம்பூச்சியாகப் போகும் புழு

வண்ண இறக்கைகளை இது ஒளித்து வைத்திருக்கிறது.-

உடலுக்குள் அவற்றை மறைத்து வைத்திருக்கிறது.

விதைக்கு முளைப்பதற்கு சில அவகாசம்

தேவைப்படுகிறது.

தன்னை ஆயத்தப்படுதிக் கொள்வதற்காக.

மேற்கின் வளர்ச்சி

தேவையற்றவற்றைக் கழற்றி விடுவதில் இருக்கிறது-

அது உள்ளுணர்வுடன் செய்யப்படுகிற பிரயத்தனம்.

கிழக்கின் முதிர்ச்சி

தேவையற்றவற்றை தானாக கழன்று கொள்வதில் இருக்கிறது.

இங்கே ...

மரம் உதிர்ப்பதில்லை

இலைகளாக உதிர்ந்துபோகின்றன ...

புதிய இலைகளுக்காக.

மேற்கு நினைக்கிறது ...

புதிய துளிர்கள் பழைய இலைகளை

நெட்டித் தள்ளிவிட்டு முளைப்பதாக.

ஹைகூ என்பது கவிதையல்ல - மனப்பாங்கு

கிழக்கிலும் மேற்கத்திய மனப்பாங்கு இருக்கலாம் -

மேற்கிலும் கிழக்கத்திய உள்ளம் உதிக்கலாம்

மரத்திற்கு இலைகளும்

பூக்களும் சிறகுகள்-

புழுவிற்குக் கூட்டுப்புழு இலையுதிர்.

வாழ்க்கை மிகுந்த நம்பிக்கையைச் சார்ந்தது

ஞானி எண்ணுகிறான்-

உதிர்ந்த இலைகளும்

உதிக்கின்ற துளிர்களும் வேறுவேறல்ல.

(தூறல் வரும்...)
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X