For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முகத்தில் தெளித்த சாரல்...

By Staff
Google Oneindia Tamil News

கண்ணாடிக்கு ஒரு குணம் இருக்கிறது -

- கவர்ந்திழுக்கும் குணம்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்படைய வைக்காத தன்மை -

கண்ணாடியைக் கண்டவுடன்

ஒருமுறை முகத்தைப் பார்க்கத் தூண்டும்.

நமக்கு எப்போதும் ஒரு ஆதங்கம் -

நம்மை இந்தக் கண்ணாடியாவது

அழகாகக் காட்டாதா?

அதனால் வீட்டிலிருந்து வெளியே வருவோம் -

அப்போதுதான் முகத்தைத் திருத்திக் கொண்டு

இருந்தாலும் வாகனத்திலிருக்கும்

கண்ணாடியில் முகம் பார்ப்போம்.

சிலரிடம் எப்போதுமே கண்ணாடி இருக்கும்.

தன்னைப் பற்றியே எப்போதும்

அடுத்தவர்களிடம் பேசிக்கொண்டிருப்பவர்களிடம்

எப்படி தாழ்வு மனப்பான்மை

ஏராளமாக இருக்கிறதோ

அப்படியே அடிக்கடி கண்ணாடியைப் பார்ர்பவர்களிடமும்.

முகத்தை அடிக்கடி மாற்ற முயற்சிப்பவர்களுக்கும்

நம்பிக்கை இருப்பது இல்லை.

சிலர் அறை முழுவதும் கண்ணாடியைப்

பதித்து வைத்திருப்பார்கள் -

தன் உருவம் எல்லா இடத்திலும்

பிரதிபலிப்பதில்தான் எத்தனை ஆர்வம்

மனிதனுக்கு.

தான் பிரதிபலிக்கும் ஆசை தான்

மனிதன் புகைப்படத்தைக் கண்டறியத் தூண்டியது.

சிலர் இல்லங்களில் அவர்கள் புகைப்படங்களாகத் தொங்கும் -

நின்றும், நடந்தும், உட்கார்ந்தும்

வேடமிட்டும் -

""நீ என் வீட்டிற்குள் வந்திருக்கிறாய் -

இங்கு நான்தான் எல்லாம்""

என்று மிரட்டுகின்ற தோரணையில் அவை-

தன்னை அடுத்தவர்கள் மீது

வலுக்கட்டாயமாகத் திணிக்கும் முயற்சிகளாய்

அவை நீளும்.

மனிதன்தான் எல்லாவற்றிலும் பிரதிபலிப்பதில்

மகிழ்சி அடைகிறான்.

தன் குழந்தைகளிடம் -

தன் வாசகர்களிடம் -

தன் கீழ் பணிபுரிகிறவர்களிடம் -

தன் தொண்டர்களிடம் -

ஆசை ஒன்று தான் -

அளவுகளின் அடர்த்தி வேண்டுமானால் மாறுபடலாம்.

Basho எழுதிய கவிதை

""கண்ணாடியின் பின்புறம்

அழகான பூத்த ப்ளம் மரம்

பார்க்கப்படாத வசந்தம்""

(On the back of the mirror

A spring unseen

A flowering plum tree)

இந்தக் கவிதை பல்வேறு தளங்களைக் கொண்டது.

நாம் கண்ணாடியின் பின்புறத்தைப்

பற்றி ஒரு போதும் கவலைப்பட்டதில்லை.

பல நேரங்களில் அதைப் பார்ப்பதுமில்லை.

யாருமே பார்க்காத பகுதிகளை

யாரும் அழகாக உருவாக்குவதில்லை.

நன்றாக உருவாக்குவது வேறு -

அழகுணர்வுடன் உருவாக்குவது வேறு -

உறுதியாக உருவாக்குவது வேறு -

உளப்பூர்வமாக உண்டாக்குவது வேறு. ( Manufacture is different from creation)

இந்தக் கண்ணாடி அபூர்வமானது

இதைச் செய்த கலைஞன்

கவித்துவம் வாய்ந்தவன்-

அடுத்தவர்கள் பார்க்காவிட்டாலும்

தனது திருப்திக்காக அழகாக செய்திருக்கிறான்.

வசந்தத்தில் பூத்த பிளம் மரத்தை

வரைந்து வைத்திருக்கிறான்.

கண்ணாடி வாங்குவது

முன்புறத்திற்காகத்தான் -

வாங்கும் போது கூட பின்பக்கத்தைப் பார்த்திருப்பானா

என்பது சந்தேகம் -

ஒவ்வொரு மனிதனும் கண்ணாடியாயிருக்கிறான்.

யாருக்கும் தெரியாத அவனுடைய

பின்புறம் ஒன்று இருக்கிறது -

முன்புறத்தைக் காட்டிலும் அது அழகானதாக இருக்கலாம்.

Basho சொல்கிறார்-

இந்தக் கண்ணாடி நம் முகத்தை மட்டும் காட்டுகிறது.

நம் முகம் எப்போதும் இலையுதிர்தான் -

உதிர்ந்த ரோமங்கள், வயதைக் காட்டும் சுருக்கங்கள் -

பின்புறம் பாருங்கள்

அது வசந்தத்தைக் காட்டுகிறது.

கண்ணாடியின் பின்புறத்தை எப்போது நேசிக்கப் போகிறோம்.

(தூறல் வரும்...)
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X