For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சோளகர் தொட்டி: நூல் விமர்சனம்

By Staff
Google Oneindia Tamil News

முதல் பக்கம்

நாவலிருந்து ஒரு பகுதி:

''எங்கேடா வீரப்பன்? சொல்லு ''

அவன் ஊ.. ஊ என்று கத்திக் கொண்டு அறை முழுவதும் ஓடித் தலைகீழாய்த் தொங்கிக் கொண்டிருந்த மாதி மீது இடித்துவிட்டுத்தடுமாறிக் கீழே விழும்போது அவன் காலோடு வழிந்த மலம் அறை முழுவதும் சிதறியது. அவன் மயக்கமுற்றுத் தரையில்சாய்ந்தான்.

அவன் உண்மையாகவே மயங்கி விட்டானா அல்லது நடிக்கின்றானா என அறிய போலீஸ்காரன் நூற்றுக்கணக்கான சிறு ஆணிகள்அடிக்கப்பட்ட ஒரு பட்டையான தோல் வாரினை, தண்ணீரில் நனைத்துக் கொண்டு வந்து கெம்பனின் முதுகில் ஓங்கியடித்தான்.ஆணிகள் அவனது உடலின் சதைகளைத் துளைத்து வெளியே இழுக்கப்படும்போது இரத்தம் அறையின் சுவர்களில் தெறித்தது.அவன் அய்யோ என்று கத்தி நெளிந்தான்.

''டேய் அறைக்குள்ளே பீயை இருந்திட்டையா? அதைத் தின்னுடா'' என்றான் அதிகாரி.

அதிகாரிக்கு அந்த அளவு கோபமூட்டக் கூடியவனாக கெம்பனிருந்ததால், நின்று கொண்டிருந்த போலீஸ் கெம்பனின் முடியைப்பிடித்து முகத்தைக் கடுமையாக்கிக் கொண்டு, ''தின்னுடா பீயை'' என்று மலம் சிதறிய பக்கம் அவனை இழுத்தான்.

கெம்பன் சிதறிய மலத்தைக் கையில் எடுத்து கண்களை மூடிக் கொண்டு வாயில் திணித்துக் கொண்டான். அவன் கண்ணில்மரணத்தின் பீதி தென்பட்டது. உடனே அவன் அறைக்கு வெளியே இழுத்துப்போகும்போது வாந்தியெடுக்கும் சப்தம் கேட்டது.கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டிருந்த மாதியை கீழே இறக்கி நிற்கச் சொன்னான். அவள் ஒட்டுத் துணியற்றவளாய் கூச்சத்தில்கைகளையும், கால்களையும் மாராப்பாக்கி நெளிந்தாள்.

''எங்கேடி உன் புருஷன்? '' என்றான் அதிகாரி.

''தெரியாதுங்க''

''இவளுக்கும் கரண்ட் கொடுங்க'' என்று உத்தரவிட்டான். அவள் அச்சத்தில் பின்னே நகரும்போது போலீஸ்காரன் மெக்கர்பெட்டியிலிருந்து மின் ஒயரை எடுத்து அவன் முன்னே வந்தான். பின்னே நகர்ந்தவள் சுவர் முட்டி நின்றாள். அவளது காதுகளில்இரண்டு கிளிப்புகளும் அவளின் மார்புக் காம்புகளில் இரண்டும், பிறப்பு உறுப்பில் ஒன்றும் மாட்டப்பட்டது. மாதி கையெடுத்துக்கும்பிட்டாள். பலனில்லை. போலீஸ்காரன் மெக்கர் பெட்டியின் கைப்பிடியை நான்கு சுற்று சுற்றினான். பின் அதன் கருப்பு நிறப்பொத்தானை அழுத்தினான்.

''அட சாமி'' என அவள் அறை முழுவதும் திக்கற்று ஓடினாள். மீண்டும் மெக்கர் பெட்டியின் சுழலும் கைப்பிடி சுற்றப்பட்டது.அவள் பள்ளத்தில் வீழ்வது போல் உணர்வு கொண்டாள். மீண்டும் சுற்றப்பட்டது. அவள் தன் உடலில் நரம்புகள் ஆங்காங்கேதலை முதல் பாதம் வரை வெடித்துச் சிதறச் செய்யுமளவு வலியையும் அதிர்வையும் அனுபவித்துத் தரையில் விழுந்தாள்.

''இவ பொண்ணை இழுத்தாங்கடா'' என்றான் அதிகாரி.

''சாமி, வேண்டாம்'' என்று அந்த வேதனையிலும் அதிகாரியின் கால்களைப் பிடித்துக் கொண்டு முனகினாள். அவன்பூட்ஸ்கால்களால் அவள் முகத்தில் ஒரு உதை விட்டான். மூக்கிலிருந்து ரத்தம் வழிய அவள் சுவரோரமாய்ப் போய் விழுந்தாள்.அவள் கண்கள் இருண்டன. பின், அவள் சித்தியின் அலறல் கேட்டுச் சிரமப்பட்டுக் கண் விழித்தாள். சித்தியும் நிர்வாணமாய்மெக்கர் பெட்டியிலிருந்து மின்சார அதிர்வு பாய்ந்து அலறினாள்.

''வேண்டாம்'' என மாதி எழுந்து நிற்க முயலும்போது, அவளைக் கீழே தள்ளி அவளது தலைமுடியை தரையுடன் காலில் வைத்துஅழுத்தி நின்று கொண்டான் கணேஷ் போலீஸ். ஏழாவது முறை மெக்கர் பெட்டியிலிருந்து மின்சாரம் பாய்ச்சப்படும்வரை சித்திமயங்காமலிருந்தாள்.

அதன்பின்பு, மாதியின் தலைமுடியிலிருந்து கால்களை எடுத்துக் கொண்டதும் அவள் எழுந்து சித்தியருகில் சென்றாள்.அப்போதுதான் அவள் நிர்வாணமாய்க் கிடப்பதை உணர்ந்து பக்கத்தில் கிடந்த அவளின் சீலையை எடுத்து உடலின் மீது போர்த்திசித்தியை தூக்கி மடியில் வைத்து அவளின் சீலை துணியை எடுத்து அவள் மீது போட்டாள். துணியைக் கட்டிக் கொள்ள அனுமதிகொடுத்தான் அதிகாரி. பின் ஒரு டம்ளர் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான் போலீஸ்காரன். மாதி சித்தியின் முகத்தில் தண்ணீர்தெளித்ததும் சிறிது நேரத்திற்குப் பின் கண்விழித்தாள். ஆனால் மறுநிமிடமே வாந்தி எடுத்தாள். முழுவதும் ரத்தம். அதிகாரிஇருவரையும் அடுத்த அறைக்குக் கொண்டு போகச் சொன்னான். துணிகளை ஒன்றிரண்டாய் சுருட்டி எழ முடியாமல் இருந்தசித்தியை, மாதி தாங்கிப் பிடித்துக் கொண்டு கொட்டடை என்ற இடது புறமாயிருந்த அறைக்கு அழைத்து வந்தாள். அந் நேரம்இருட்டாக இருந்தது. அங்கு ஆண்கள் ஒருபுறமும் பெண்கள் ஒருபுறமும் படுத்திருந்தனர். பெண்கள் படுத்திருந்த இடத்தில்சித்தியைப் படுக்க வைத்து மாதியும் படுத்தாள். எல்லோரும் தூங்குவது போல படுத்திருந்தார்களேத் தவிர, ஒருவரும்தூங்கவில்லை என்று அவள் அறிந்து கொண்டாள். கண்ணீர் வடித்தாள். சிவண்ணாவை நினைத்துக் கொண்டாள். திடீரெனஅழுகை வெடித்தது. கட்டுப்படுத்திக் கொண்டாள். அப்போது அவளுக்கு அடுத்து இரண்டாவதாகப் படுத்திருந்த சரசுவையும்,அவள் கணவன் தங்கமுத்துவையும் ஒர்க்ஷாப்பிற்குக் கூட்டிப் போனார்கள். இருவரின் அலறலும் வெகு நேரம் கேட்டது. பின்,இரண்டு பேரையும் துவண்ட நிலையில் அறையினுள் கொண்டு வந்து போட்டனர். அதன்பின், அப்பகுதியில் வாகனம் செல்லும்சத்தம் கேட்டது.

அதிகாரி போய் விட்டான் என்றாள் கண்களை மூடிக் கொண்டு மாதியின் பக்கத்தில் படுத்திருந்த பெண். அவள் அடிக்கடி தனதுதலையைச் சொறிந்து கொண்டாள். படுத்துக் கிடந்தவர்கள் உடம்பினைச் சொறிந்தும் நெளிந்தும் கிடந்தார்கள். வலியில்அவ்வப்போது அனத்தும் சப்தங்களும் கேட்டன. அப்போது காற்றில் துர்வாடையுடன் கவிச்சி நாற்றமெடுத்தது. சற்றுத் தள்ளிமூலையில் வலியில் முனகிக் கொண்டு கிடந்தான் ஒருவன்.

''உனக்குக் கஷ்டமாகத் தான் இருக்கும். கண்ணை மூடிப் படுத்துக்க. ராத்திரிக்கு எவனாவது வருவானுங்க'' என்றாள் பக்கத்தில்இருந்த பெண். அப்போது சித்தி வலிக்குது என்று அழுதாள். மாதி இறுக்கமாக அவளைக் கட்டிக் கொண்டாள். மாதிக்குதொட்டியின் நினைவு வந்தது. எப்போது அந்த தொட்டியில் அவள் குடிசைக்குப் போக முடியும் என்று நினைத்தான். அப்படியேபடுத்துக் கிடந்தாள்.

Bala Muruganஅப்போது அவர்களின் அறைக்கதவு திறக்கும் சப்தம் கேட்டது. கணேஷ் போலீஸ்காரன் வந்தான்.

''இன்னிக்கு வந்த பொம்பளைங்க வெளியே வாங்க'' என்று கூறிவிட்டு, மாதி, சித்தி, சரசு என்று பெயர் சொல்லி அழைத்தான்.

மூவரும் எழுந்து வெளியே வந்தனர். இருட்டில் வெளியே ஏழு ஆட்கள் நின்று கொண்டு சிகரெட் பிடித்துக் கொண்டு நின்றிருந்ததுதெரிந்தது.

''வா வெளியே'' என்றான்.

மாதி புரிந்து கொண்டாள். முரண்டு பிடித்தால் எதுவும் நடக்காது என்று முடிவு செய்து, ''நான் வரேன். என் மகள் சின்னப்பொண்ணு. அவளை விட்டுடுங்க'' என்று கும்பிட்டாள்.

வெளியே நின்றிருந்தவர்களில் மூன்று பேர் சித்தியின் கையைப் பிடித்து அறைக்குப் பின்புறமாயிருந்த மண் தடத்தில் அவளைஇருட்டில் கூட்டிச் சென்று மறைந்து விட்டார்கள்.

மற்ற இருவர் சரசுவையும் ஒருவன் மாதியையும் இழுத்துக் கொண்டு இருட்டில் மரத்தின் பக்கம் கூட்டிச் சென்றனர். மாதியைத்தரையில் கிடத்தி அவள் மீது விழுந்தான்.

சித்தி என்று கத்த நினைத்தாள். நொடிப் பொழுதில் வாழ்க்கையும் நம்பிக்கையும் செத்துப் பிணமாவதை எண்ணி அமைதியாகிவிட்டாள். சித்தியை நினைத்துக் கண்ணீர் விட்டாள். அதன்பின், இரண்டு நபர்கள் வந்து அவள் மீது விழுந்த எழுந்துபோய்விட்டார்கள். அவளுக்கு மேலே திறந்திருந்த வானத்தில் மின்னிய அவளுக்குப் பழக்கப்பட்ட ஒற்றை நட்சத்திரத்திடம்,''நான் பிணம்'' என்று சொல்லிக் கொண்டாள். அதன் பின், ''நீயும் கூடத் தான் மாதேஸ்வரா'' என்றாள்.

நடு சாமத்திற்குப் பின் அவள் கொட்டடையில் கொண்டு வந்து படுக்க வைக்கப்பட்டாள். பக்கத்தில் சித்தி இருக்கிறாளா எனஇருட்டில் கை வைத்துத் தேடிப் பார்த்தாள். அவளையறியாமல் ஓவென அழுகை வந்ததும் படுத்துக் கொண்டிருந்தவர்கள்விழித்துக் கொண்டார்கள். சற்று நேரத்திற்குப் பின் சித்தியைக் கைத்தாங்கலாய்க் கொண்டு வந்து அறையில் கிடத்திவிட்டுப்போனார்கள். அவள் கண்கள் மூடியிருந்தது. ஆனாலும் மூச்சிருந்தது. அவளது கன்னங்களைத் தட்டி, சித்தி என மீண்டும் மீண்டும்செய்தாள். அதன்பின்பு, மெல்ல ''அம்மா.. அய்யோ'' என்றாள் சித்தி.

கொஞ்சம் தண்ணீர் கொடுங்களேன் என்று கேட்டாள் மாதி. பக்கத்தில் படுத்திருந்த பெண் அறையில் படுத்துக் கிடந்தவர்களைத்தாண்டி மூலையில் பானையில் தண்ணீர் மோண்டு வந்து கொடுத்தாள். அதை சித்தி குடித்த பின், மாதி அவள் முகத்தைத் துடைத்துவிட்டாள். சித்தி படுத்துக் கொண்டாள். பக்கத்தில் இருந்தவள் சித்தியிடம், ''மனசைத் தைரியப்படுத்திக்குங்க. நான் இங்கே வந்துமூணு மாசமாச்சி. அதுக்கு முன்னாடி ஒரு மாசம் மேட்டூர் போலீஸ் முகாமிலே இருந்தேன். அங்கேயிருந்துதான் என்னையும் என்வீட்டுக்காரனையும் இங்கே கூட்டி வந்தாங்க. மேட்டூரிலே ஒரு மாசம் சித்தரவதை செய்து இங்கே அவனைக் கொண்டு வந்துபதினைஞ்சாம் நாள் விடியற்காலையிலே காட்டுக்குக் கூட்டிக் கொண்டு போய் சுட்டுக் கொன்னுட்டாங்க. இரண்டுநாளைக்கப்புறம் பேப்பரைக் காட்டினாங்க. எனக்குப் பத்து வயசில பையனிருக்கான். அவனை யாரு பார்த்துக்கவாங்க?சாப்பாட்டுக்கு என்ன செய்யறான்னு தெரியலை. இந்த ஒரு மாசமாத்தான் என்னை ராத்திரியிலே தொந்தரவு செய்யறதில்லே.அதுக்கு முன்னாடி வரைக்கும் இதே சித்திரவதையைத்தான் நானும் அனுபவிச்சேன். சில நாள்லே ஏழு பேரு, எட்டு பேரு கூடவருவானுங்க. நிற்கக்கூட முடியாம கிடந்திருக்கேன்.இந்த மாதேஸ்வரன் மலையிலே புருஷன் பெண்டாட்டி கூடத் தொடக்கூடாதும்பாங்க. கோயிலுக்குப் பின்னாடியே நமக்கு இந்த மாதிரி நடக்குது'' என்றாள்.

அப்போது அவள் பக்கத்தில் படுத்திருந்த மற்றொரு பெண் அவளை, ''ஏய், செல்வி பேசாம படு. பேச்சு சப்தம் கேட்டா மீண்டும்எவனாவது வந்திடுவான்'' என்று எச்சரித்தாள். செல்வி அமைதியானபோது, சரசுவின் விசும்பல் கேட்டது.

''சரசு என்ன ஆனது? அடித்தார்களா'' என்றான் தங்கமுத்து.

சில நிமிடங்களில் அவனும் நடந்திருக்கக் கூடியதை யூகித்து,

''நான் என்ன செய்யமுடியும்? இங்கே சாவதைத் தவிர'' என்று அவன் அழுகையுடன் சொன்னபோது, ''அழாதே, சத்தம்வேண்டாம்'' என்று பக்கத்திலிருந்த ஒருவன் கூறினான்.

அந்த இருண்ட அறையின் மூலையில் ஒரு சிறுவனின் அழுகைச் சத்தம் கேட்டது. அவனுக்கு ஏழு வயது இருக்கும். அவன்எழுந்து உட்கார்ந்து, ''உடம்பு வலிக்குதம்மா'' என்று அழுதான். அருகிலிருந்த அவனது தாய், ''படுத்துக்க சாமி'' என சிறுவனின்கைகால்களை அழுத்தி ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தாள்.

''இந்தக் குழந்தையை அடித்து கரண்டு வச்சி சித்தரவதை பண்ணறாங்க. இந்தப் பச்சை மண்ணு என்ன பாவம் செய்தது'' என்றுகண்களை மூடியபடி கிசுகிசுத்தாள் செல்வி. பின் அவளே தலையைச் சொறிந்து கொண்டு,

''இந்த பாழாய்ப் போன பேன் கடிகடின்னு கடிச்சி உயிரை எடுக்குது'' என்றாள்.

அப்போது உட்கார்ந்திருந்த சிறுவன் அழும் சத்தம் அதிகரிக்கவே வெளியேயிருந்து தடியால் கதவினை ஒரு போலீஸ்காரன்தட்டினான். அழுது கொண்டிருந்த சிறுவன் அழுகையை அடக்கிப் படுத்துக் கொண்டான். நிசப்தம் நிலவியது.

மலையின் பாரத்தை விட, கடுமையான அந்த இரவு அங்கு கரையாமல் கரைந்தது.

(சோளகர் தொட்டி: ச. பாலமுருகன், வனம் வெளியீடு, 17, பாவடி தெரு, பவானி- 638 301. தொலைபேசி: 94432 13501. பக்கம்240, விலை: ரூ.100)

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X