For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழில் நவீன கவிதைகள் 5

By Staff
Google Oneindia Tamil News

(இக் கட்டுரை ராயர் காபி கிளப் யாகூ குழுமத்தில் வெளியானது.[email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் இக் குழுமத்தில்அண்மையில் வெளியான கருத்து விவாதங்களை உங்களது மின்னஞ்சல் முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்)

இந்த வாழ்க்கை பலரை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. சிலர் நமக்குள் தங்கிவிடுகிறார்கள். பலர்காலப்பெருவெள்ளத்தில் நினைவிலிருந்து மெல்ல மெல்லக் கரைந்து போய்விடுகிறார்கள். எனக்கு சிலருடையமுகம் நினவில் இருக்கிறது. பெயர் மறந்துவிட்டது. சிலருடைய பெயர் நினைவில் இருக்கிறது, முகம் மறந்துவிட்டது.

சில சமயம் அதிகம் பழக்கமில்லாத ஆனால் நீண்ட நாட்களுக்கு முன்பே பரிச்சயமான நபர்களுடன் பேசநேர்கையில் அவருடைய பெயர் நினைவில் இல்லாமல், அவருக்கு திருமணமாகிவிட்டதா குழந்தை இருக்கிறதாஎன்பதும் மறந்துபோய் சம்பந்தமில்லாமல் பேசி சமாளித்து அசடு வழிந்த அனுபவமும் எனக்கு உண்டு.இதுபோலப் பெரும்பாலானவர்களுக்கு வாய்த்திருக்கக் கூடியதான அனுபவம் ஒன்றைக் கவிதையாக்குகிறார்பா.வெங்கடேசன்.

-----------------------

நிகழ்

கண் சுருக்கி உற்றுப் பார்த்து

எதிர்ப்பக்கம் கடந்து வந்தென்னைத்

தெரிகிறதா என்றான்.

தன்னைத் தெரியாமல்

மறந்து போனதற்காய்

கோபித்துக் குற்றம் சொன்னான்.

அப்போதெல்லாம் அவனென்றால்

உயிர் எனக்கென்றான்.

இரவில் கூடும்முன்

தவறாது மனைவியிடம் சொல்லவென்று

எங்கள் வகுப்பறைகளையெல்லாம்

நினைவு வைத்திருப்பதாகப் பெருமைப்பட்டான்.

இன்னும் பிடிபடவில்லையா நினைவு

எனக் கேட்டு

கவலையுடன் பிரிந்து போனான்

இந்தக் கணம் இனி ஒருபோதும்

மறவாதிருக்கச் செய்து.

- பா. வெங்கடேசன்.

நான் இப்போது இருக்கும் எட்மண்டன் நகருக்கு எட்டு மாதங்களுக்கு முன்பு வந்த புதிதில் என்னையும் என்மனைவியையும் என் அலுவலக இலங்கைத் தமிழ் நண்பர் இங்கே விநாயகர் கோவில் இருக்கிறதென்றுஅழைத்துப்போனார். அங்கே சென்றபின்னர் தான் எட்மண்டனில் எவ்வளவு தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதுபுரிந்தது. கோவிலில் அன்று விசேஷம். அங்கே வந்திருந்த பலருக்கு நண்பர் என்னை அறிமுகம் செய்து வைத்தார்.கண்பா என்று அழைக்கப்பட்ட, எட்மண்டன் தமிழ் சங்கத்தின் முக்கிய நபர் என்று அறிமுகம் செய்துவைக்கப்பட்ட, நபருடன் ஹலோ என்று கைகுலுக்கினேன். ஒரு நொடி உற்றுப் பார்த்துவிட்டு டே.. பாபு..என்னைத் தெரியலையா நான் தான் உன் கிளாஸ்மேட் கணபதி சுப்பிரமணியம். மதுரையில் ஸ்கூலில் ஒன்னாபடிச்சோமேஎன்றான்(ர்) அவன்(ர்).

கணபதி கனடாவில் கண்பா ஆனது மட்டுமல்லாமல் அடையாளமே தெரியவில்லை பதினேழு வருடஇடைவெளியில். அதன் பிறகு இன்று இனிய நண்பனாய் விளங்கிக் கொண்டிருக்கும் கண்பா பள்ளிக்கூடத்துஅடண்டென்ஸ் ரிஜிஸ்தரில் உள்ள பெயர்களை வரிசைக்கிரமமாக நினைவு வைத்திருப்பதுடன் வகுப்புத்தோழர்களைப் பற்றிப் பேசும்போது எனக்கென்னவோ எல்லாம் மங்கலாகவே நினைவுக்கு வருகிறது. கணபதியின்அன்றைய முகத்தை நினைவுப்படுத்திப் பார்க்கிறேன். அதுவும் தெளிவாய் நினைவுக்கு வர மறுக்கிறது. தவறாமல்திருநீறு வைத்துக்கொண்டு வருவான், மற்ற பாடங்களைக் காட்டிலும் கணக்கில் மட்டும் எப்போதும் சென்டம்எடுப்பான் என்பவை மட்டும் நினைவில் இருக்கின்றன. ஆனால் இனி நான் இங்கிருந்து இடம் மாறிப்போய்விட்டாலும் பதினேழு வருடங்களுக்குப்பின் அதுவும் கனடாவில் வந்து டே பாபு என்று உரிமையோடுஅழைத்த கணபதியின் இப்போதைய முகம் இனி மறக்காது என்றே தோன்றுகிறது.

இதைத்தான் வெங்கடேசனின் கவிதையில் உள்ள கடைசிவரிகளும் சொல்கின்றன.

--------------------

மதுரைக்காரரான பா.வெங்கடேசன் ஒசூரில் தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றுகிறார். எண்பதுகளில்கணையாழியில் கவிதைகள் எழுதியது இவரது எழுத்தின் ஆரம்பம் என்று நினைக்கிறேன். 92ல் இன்னும் சிலவீடுகள், 2001ல் எட்டிப் பார்க்கும் கடவுள் ஆகிய கவிதைத்தொகுப்புகள் வெளிவந்துள்ளன. சிறுகதைத் தொகுதிஒரிஜினல் நியூஸ்ரீல் சிறுகதைகள் 94ல் வந்தது. தற்போது புனைக்கதை எழுதுவதில் ஈடுபட்டிருக்கிறார்.காலச்சுவடு வெளியீடாக ராஜன் மகள் வந்துள்ளது. வேறு எதுவும் இவர் எழுதி வெளிவந்துள்ளதா என்பதுஎனக்கு தெரியவில்லை.

- எஸ்.பாபு([email protected])

இவரது முந்தைய படைப்பு:

தமிழில் நவீன கவிதைகள் 1

தமிழில் நவீன கவிதைகள் 2

தமிழில் நவீன கவிதைகள் 3

தமிழில் நவீன கவிதைகள் 4

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X