For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தனஞ்சய்-சில கேள்விகள்

By Staff
Google Oneindia Tamil News

தனஞ்சய் தூக்கிலேறியாயிற்று. இனிமேல் அவனைப்பற்றிப் பேசிப் பயனில்லை.
அவன் செய்ததாகச் சொல்லப்படும் குற்றத்தின் குரூரம் காரணமாக, நானும்
அவனுக்கு மரணதண்டனை கொடுத்ததில் தவறில்லை என்ற கருத்தையே
கொண்டிருந்தேன். ஆனால் 13ஆம் தேதி மாலை தற்செயலாக நான்
தொலைக்காட்சியில் பார்த்த ஒரு நிகழ்ச்சி என் எண்ண ஓட்டத்தை
மாற்றிவிட்டது.

Hang 13ஆம் தேதி இரவு. இன்னும் சற்று நேரத்தில் ஒலிம்பிக் துவக்கவிழா
வரவிருக்கிறது. அதிகம் தொலைக்காட்சியில் உலவாத நான் இருக்கிற சில
நிமிடங்களில் செய்தி பார்க்கலாமே என்று ஹெட்லைன்ஸ் டுடே கால்வாய்க்கு
மாற்றுகிறேன்.

அதில் Zakka Jacob, கரம் ஹவா போன்ற படங்களை எடுத்த ஹிந்திப் பட
இயக்குநர் எம்.எஸ். சத்யூ அவர்களுடன் தனஞ்சய்யின் மரணதண்டனை பற்றிப்
பேசிக்கொண்டிருந்தார். நான் அதைப் பார்க்கும் போதே தொடங்கி ஓரிரண்டு
நிமிடங்கள் ஆகியிருக்க வேண்டும். சத்யூ இந்த மரண தண்டனை தவறு என்று
விவாதித்துக்கொண்டிருந்தார். அதை மனித உரிமையாளர்கள் போலச்
சொல்லுகிறார் என்றுதான் நினைத்தேன். அவர் சொன்னார் "கொலையுண்ட அந்தப்
பள்ளிச் சிறுமியின் பெற்றோர்கள் வீட்டில் இல்லாதபோது ஒரு சிவப்பு நிற
மாருதி கார் வரும். அதில் வரும் நபர் அங்கே இருந்துவிட்டுப் போவது
வழக்கம். கொலை நடந்த தினத்தன்றும், அந்தக் கார் வந்திருக்கிறது. அதில்
வந்த நபர்தான் கடைசியாக அவளை உயிருடன் பார்த்தவர். அப்படியிருக்க,
தனஞ்சயைக் கொலையாளியாகக் கருதுவது தவறு".

நான் அதிர்ந்து போனேன். "நீங்கள் ஏன் இதை எடுத்துச் சொல்லவில்லை?"
என்று கேட்டார் ஜேகப். "எல்லாப் பத்திரிக்கைகளிலும் வெளிவந்ததே. நான்
இவ்வாறு தவறாக வழக்கு ஜோடிக்கப்பட்டு, இந்தியாவின் பல சிறைகளில்
தவறாக உள்ளே வைக்கப்பட்டிருக்கும் பாவப்பட்டவர்களின் கதைகளை ஒரு
தொடராக எடுக்கத் திட்டமிட்டேன். அது சம்பந்தமாகத்தான் தனஞ்சயைப்
பார்த்தேன்" என்று பதில் சொன்னார் சத்யூ.

மரண தண்டனைக்கு ஒருநாள் முன்னதாக ஜெயில் மருத்துவர் பார்த்தபோதுகூடத் தான்
குற்றவாளியில்லை என்று தனஞ்சய் சொன்னதாகச் செய்தி வந்தது. அந்த
நிலையில் அவன் ஏன் பொய் சொல்லவேண்டும்? தன்னைக் கடவுள் காப்பாற்றுவார்
என்று சொல்லி நம்பிக்கை இழக்காமல்தான் தனஞ்சய் கடைசிநாள் வரை
இருந்திருக்கிறான். கடைசி மனுவையும் குடியரசுத் தலைவர் நிராகரித்தபின்
தான் கொஞ்சம் மனத்தளர்ச்சி அடைந்திருக்கிறான். கொலையுண்ட சிறுமியின்
பெற்றோர் வெளியே பேசவே இல்லை. அவளது வழக்கறிஞரும், பள்ளி
ஆசிரியை மற்றும் மாணவிகளும்தான் பேட்டி கொடுத்தனர் இதுவரை. ஏன்?

Jail தனஞ்சய்யின் வயதான பெற்றோர் தம் மகனைத் தூக்கிலேற்றினால் தாமும்
தற்கொலை செய்துகொள்வோம் என்று கூறியிருக்கிறார்கள். அவன் வசித்த
தெருவில் இருக்கும் எல்லோருமே இந்தக் குடும்பத்துக்கு ஆதரவாகப்
பேசியிருக்கிறார்கள். தனஞ்சய் கற்பழிப்பும் கொலையும் செய்பவனாக
இருந்தால் தெருக்காரர்கள் கண்மூடித்தனமாக ஆதரிப்பார்களா?
இதையெல்லாம் சத்யூவின் வார்த்தைகளைக் கேட்டபின் நினைத்துப் பார்க்கிறேன்.
சத்யூவுக்குப் பொய்சொல்லவேண்டிய அவசியம் இல்லை. He looked very
perturbed.

"ஜனாதிபதி எல்லாவற்றையும் யோசித்துப் பார்த்துத்தானே கருணைமனுவை
நிராகரித்திருப்பார்?" என்ற கேள்விக்கு சத்யூவின் பதில் இன்னும் அதிர்ச்சி
தருவதாக இருந்தது. "அப்துல் கலாம் அழிவுக்கான ஆயுதங்களைச் செய்யும் ஒரு விஞ்ஞானிதானே..."
என்று அவர் தொடங்கினார். ஆனால் ஜேக்கப் அவரை மேற்கொண்டு பேசவிடாமல்
"நமது விவாதம் ஜனாதிபதியைப் பற்றியதல்ல..." என்று கூறிப் பேச்சை
மடைமாற்றிவிட்டார். அந்த விவாதத்தை முழுவதும் பார்க்கவேண்டுமென்று ஒரு
மணிநேரத்துக்கு மேல் திருப்பித் திருப்பி முயற்சித்தேன். சாதாரணமாக
எல்லாமே 20 நிமிடங்களுக்கு ஒருமுறை மறுசுழற்சியில் வரும். இதற்கு யாரோ
அந்தத் தகுதியில்லை என்று ஒதுக்கிவிட்டார்கள்.

ஜனாதிபதியின் முன் எல்லா விவரங்களும் வைக்கப்படவில்லை. அவரது
தீர்ப்பின் நகல் எங்களுக்கு வேண்டும் என்று தனஞ்சய்யின் சகோதரர் கேட்டது
இதனால்தானோ? வீட்டினருக்குத் தெரியாமல் காரில் வந்து அந்தப் பெண்ணைச்
சந்தித்த அந்த நபர் யார்? அதுகுறித்து ஏன் செய்தி ஊடகங்கள் பேசவே
இல்லை?

ஒரே குற்றத்துக்கு இரண்டுமுறை யாரையும் தண்டிக்கமுடியாது என்பது நியதி.
ஆனால் 14 ஆண்டுகள் சிறையில் இருப்பது என்பது ஒரு Life Sentence க்கு
இணையானது. அத்தனை நாட்கள் மரண தண்டனையைத் தாமதித்து, தனஞ்சயைச்
சிறையில் வைத்துவிட்டு, இப்போது மரணதண்டனையையும் நிறைவேற்றுவது இரண்டு
தண்டனைகள் கொடுப்பதற்குச் சமம் என்று டெல்லியில் ஒரு மனித உரிமைப்
போராளி கூறினார்.

ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும், ஒரே ஒரு நிரபராதி தண்டிக்கப்
படக்கூடாது என்று ஒரு கோட்பாடு உண்டு. இவற்றைப் பார்த்தபின் என்னால்
அவ்வளவு கோலாகலமான ஒலிம்பிக் துவக்கவிழாவை ரசிக்கமுடியவில்லை.
தூங்கி எழுந்தால் தனஞ்சய் உயிரோடு இல்லை.

எது சரி? எது தவறு?

- மதுரபாரதி([email protected])

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X