• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கருப்பு ஞாயிறு எழுப்பும் பெரிய பெரிய கேள்விகள்

By Staff
|

தமிழகம் துயரத்தில் மூழ்கியுள்ளது. தென்கிழக்காசியாவில் நிகழ்ந்த பூகம்ப அதிர்ச்சியால் தூண்டப்பட்ட பேரலை நிகழ்வு (Tsunami) தமிழகக்கடற்கரையோரங்களில் பேரழிவை நிகழ்த்தியுள்ளது. மனித இதயம் கொண்ட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள். பூகம்பஅதிர்வைத் தொடர்ந்து கடல் அலை நுழைந்த பின்னர் ஒவ்வொரு மணித் துளிக்கும் உறைய வைக்கும் செய்திகள் வந்துகொண்டேஇருந்தன. இன்று காலை 4 மணி வரையில் தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன் கிடந்தேன். பொறியில் மாட்டிக்கொண்ட எலி ஒன்று தன்இனம் அழிவதைக் கண்டும் ஒன்றும் செய்யமுடியாத நிலையில் தவிப்பது போல தவித்துக்கொண்டிருந்தேன். மனிதனின் அறிவுமுன்னேற்றம் வியக்கத்தான் வைக்கிறது. சிஎன்என் துவங்கி உள்ளூர் சன் செய்திகள் வரை தொலைதூர செய்திகளை விஞ்ஞானநுணுக்கத்துடன் விவரித்துக்கொண்டிருந்தனர். சரிதான். ஆனால் இந்த விஞ்ஞான நுணுக்கம் வரப்போவதை எடுத்துரைக்க வில்லைஎன்பதுதான் கவலைக்குரிய செய்தி.

Watet enters into coastal villageகடலடியில் ஏற்படும் திடீர் நிலவியல் மாற்றத்தால் தூக்கியடிக்கப்படுகின்ற கடல் நீர் (சில ஆயிரக்கணக்கான அல்லது நூற்றுக்கணக்கானசதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள நீர் சில மீட்டர்களுக்கு தூக்கப்படுவதால்) எழும் நீர் தூண் அலையாகப் பெருகி கரையைத்தாக்குவதையே சுனாமி என்கின்றனர். இதுபோன்ற நிகழ்வுகள் அரிதுதான். ஆனால் மனித குலம் அதனைப் பற்றி போதுமான செய்திகளைஅறிந்திருக்கிறது. இவ்வாறு எழும் தொடர் அலைகளின் ஆற்றல் பல டன் எடையுள்ள பாறைகளைக் கூட தூக்கியெறிந்துவிடும் ஆற்றல்கொண்டது. அதுபோன்ற நிகழ்வுதான் நாம் சந்தித்தது.

இவ்வாறு எழும் அலை வெகுவேகமாகப் பயணம் செய்யும். ஆனபோதும், அந்தமானில் ஏற்பட்ட கடலடி அதிர்ச்சியால் தூண்டப்பட்டஅலை தமிழகக் கடற்கரையை அடைய கணிசமான நேரம் எடுத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், அவ்வாறு அலை வருவதை எந்ததொலைநோக்கு சாட்டிலைட்டும் நமக்குச் சொல்லவில்லை.

சன் செய்தியில் பேட்டியளித்த வானிலை ஆராய்ச்சி அதிகாரி திரு.ராவ் சிரித்த முகத்துடன் நிறைய செய்திகளைச் சொன்னார். அவர் ஒருவிஞ்ஞானி. அனைத்தும் அவருக்குத் தகவல்கள்தான். அலைகள் தொட முடியாத உயரத்தில் இருந்த அவர், அதிர்ச்சி ஏற்பட்டால் சுனாமிவருவது ஆர்டர் கொடுத்தால் டீ வருவது போன்ற ஒரு சாதரண நிகழ்வு என்பதை விளக்கினார். அப்படியானால், இதுபோன்றமகானுபாவர்கள் அந்தமானில் ஏற்பட்ட அதிர்ச்சிக்குப் பின் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? பல்விளக்கி குளித்து, மனைவியின்கையில் காப்பி சாப்பிட்டுக்கொண்டிருந்தார்களா?

தொலைக்காட்சியில் விரிந்த மரணப் படங்களில் பல பெண்கள், குழந்தைகள், முதியவர்கள்... ஆனால் அனைவரும் ஏழைகள். அனைத்துசோகங்களும் இந்த எளிய பிரிவினரைத்தான் குறிவைத்துத் தாக்குகின்றன. உயிர் பிழைத்து அடுத்து வரும் நாட்களுக்கான சுமைகளைச்சுமந்தபடி விரைந்த அந்த ஏழ்மைக் கூட்டத்திலும் பெண்கள்தான் சுமைகளைச் சுமந்தபடி.

ஊழிக்கூத்து நடந்து பல மணி நேரம் ஆன பின்பும் அரசு யந்திரம் அசைந்தமாதிரி தெரியவில்லை. சீர்ழ்காழியின் கடற்கரைப் பகுதியில்ஒடிக்கொண்டிருந்த எம்எல் கட்சியின் மாநிலச் செயலாளர், ஆர்.டி.ஓ. போன்ற அதிகாரிகளை இயங்கவைக்க அனைத்தையும்செய்துகொண்டிருப்பதாக செல்பேசியில் பேசிய என்னிடம் சொன்னார். கன்னியாகுமரியின் மிடாலம் கிராமத்து பங்கு தந்தைஅலைபாயும் மக்களிடையே நின்றுகொண்டு அலறிக்கொண்டிருந்தார். சிதம்பரத்தின் நடனம் ஜீ பெரிய அளவுக்கு ரிலீப் செய்யனும்என்ன செய்வது? என்று கேள்விகளை அடுக்கினார்.

The scene in Poompugarமந்திரிகளை அனுப்பியிருப்பதாக தமிழக முதலமைச்சரின் செய்தியை தொலைக்காட்சி சொன்னது. தயாநிதி மாறனும், மணி சங்கரஅயய்யரும் விரைந்து வந்தனர். மக்களைக் கண்டனர். மத்திய அரசு அனைத்தையும் செய்யும் என்று மன்மோகன் சொன்னார். பிரதமரைச்சந்திக்கும்படி கருணாநிதி தனது வாரிசுக்கு அறிவுரை சொன்னார். செய்திகள்.. செய்திகள்.. ஆனால், இந்த அனைத்துக்கும் அப்பால்மனிதர்களைத் தாக்கிய சோகத்துக்கு பதிலளிக்க இன்னும் பல நாட்கள் ஆகும் என்று தோன்றுகிறது. இன்று காலை இந்தக் கட்டுரையைஎழுதும்போது கூட பல பகுதிகளில் அரசு யந்திரம் விழித்தெழவில்லை என்பதை எனக்குக் கிடைக்கும் செய்திகள் சொல்கின்றன.

மரணத்தின் எண்ணிக்கை என்ன என்பதை இப்போது சொல்ல முடியாது. அடுத்து வரும் நாட்கள் எண்ணிக்கையைக் கூட்டிச் செல்லும்.தமிழகத்தின் மீனவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்திற்கும் அதிகம். இதில் 1% மீனவர்கள் கடலுக்குள் சென்றிருப்பார்களா? அவர்கள் என்னஆனார்கள்? இப்படி நாம் யோசிக்காத கோணங்களில் செய்திகள் நம்மைத் தாக்கவிருக்கின்றன.

இன்றைய செய்திகளில் எந்தத் தடயமும் காணாத ஒரு செய்தி நேற்றைய தொலைக்காட்சி செய்தியில் வந்தது.

கல்பாக்கத்தில் இறந்தவர்களில் 16 பேர் விஞ்ஞானிகள். மற்றவர்கள் மீனவர்கள். மீனவர்கள் உய்யாலிக்குப்பத்தை சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும். ஆனால், கல்பாக்கம் குடியிருப்பில் எந்த மரணமும் இல்லை. அப்படியானால், இறந்த விஞ்ஞானிகள் அணு உலை மற்றும்ஆய்வக வளாகத்தில் இறந்திருக்க வேண்டும். ஆனாலும், அணுக்கதிர் வீச்சு ஏற்படுத்தும் வாய்ப்புள்ள கல்பாக்கம் பாதுகாப்பாகஇருக்கிறதாம். செய்தியாகச் சொன்னார்கள். எதனை மறைக்கிறார்கள்?

முன்னதாகக் கிடைத்த செய்தியொன்று எண்ணூர் அனல் மின் நிலையம் நீரால் சூழப்பட்டது என்று சொன்னது. இப்போது என்ன நிலைமைஎன்று தெரியவில்லை.

இப்போது கொஞ்சம் நிதானமாகப் பேசுவோம்.

தமிழகக் கடற்ரையோரம் அதிவேகமான வளர்ச்சியும் மக்கள் தொகை நெருக்கமும் கொண்டதாக இருக்கிறது. ஏறக்குறைய 60% தமிழகமக்கள் கடற்கரையோரத்திலிருந்து 100 கி.மீட்டர் தூரத்திற்குள் வசிக்கின்றனர். சென்னை, பாண்டிச்சேரி போன்ற தலைநகர்களும்,மகாபாலிபுரம், வேளாங்கண்ணி போன்ற சுற்றுலாத் தளங்களும் கடற்கரையோரத்தில் உள்ளன. தமிழகக் கடற்கரையின் பெரும்பகுதிநதிகளின் முகத்துவாரம் மற்றும் சமவெளிகளைக் கொண்டது. கடலலைகளை எதிர்த்து நிற்கும் மணல் மேடுகளும், சதுப்பு நிலக்காடுகளும்பண்டைய செய்திகள் ஆகிவிட்டன.

இந்நிலையில் தமிழகக் கடற்கரை தொடர்ச்சியான வளர்ச்சி நடவடிக்கைகளைச் சந்தித்து வருகிறது. ஸ்ரீஹரிகோட்டா, எண்ணூர்துறைமுகம், வரவிருக்கின்ற ஏற்றுமதி வளாகம், எண்ணூர் அனல் மின்நிலையம், சென்னை துறைமுகம், கல்பாக்க அணு மின் நிலையம்,கிழக்குக் கடற்கரை சாலையால் தூண்டப்பட்ட வளர்ச்சி நடவடிக்கைகள், தனியார் அனல் மின்நிலையம், கடற்கரையோர இரால்பண்ணைகள், சுற்றுலாத் தளங்கள், வரவிருக்கின்ற ஜிர்கான் ஸ்பான்ஞ் தொழிலகம் (தூத்துக்குடி), தூத்துக்குடியில் ஸ்டெரிலைட் உள்ளிட்டஆலைகள், கூடங்குளம் அணு மின்நிலையம், கன்னியாகுமரியின் அருமணல் ஆலை என்று இன்னும் பல வளர்ச்சி நடவடிக்கைகளின்தளமாகக் கடற்கரை உள்ளது. இப்போது, கடல் படுகையில் குழி தோண்டி கப்பல் விடும் திட்டத்தையும் கொண்டே.... வந்தே.... தீருவேன்என்று வேறு ஒற்றைக் காலில் நிற்கின்றனர்.

இவையெல்லாம் தமிழர்கள், ஏழைத் தமிழர்களின் வாழ்க்கைக்கு உதவுமாம். சொல்கிறார்கள். நல்லதுதான். ஆனால். இந்த வளர்ச்சிநடவடிக்கைகள் இயற்கையில் பேராற்றலைக் கணக்கில் கொண்டு செய்யப்படுகின்றனவா? இல்லை என்பதை கல்பாக்கத்த்தின்விஞ்ஞானிகள் மரணம் சொல்கிறது. அணு மின் நிலையம் பற்றி கேள்வி எழுப்பினால் மீட்பு நடவடிக்கைகளில் வித்தை செய்வோம் என்றுவாய்ப்பந்தல் போடுகிறார்கள். ஆனால், இன்று நம் கண்முன் நடப்பது என்ன? இந்தியப் பேரரசின், தமிழக தனிப்பெரும் அரசியின்நிர்வாக யந்திரம் இன்னும் ஏழைகளின் கண்ணீரைத் துடைக்க நீண்டு முடிக்கவில்லை! காலை 6.30க்கு ஏற்பட்ட கடலடி நில அதிர்ச்சிசுனாமியை உருவாக்கி 9.30க்கு தாக்கும் வரையும் கூட இந்தியப் பேரரசின் விஞ்ஞான உலகம் கண் விழிக்க வில்லை. ஒரு எச்சரிக்கைசமிக்ஞையைக் கூட வெளியிடவில்லை!

இந்திய அரசு உயரலை மட்டத்திலிருந்து 500 மீட்டர் வரை எந்த வளர்ச்சி நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என்று விதி செய்தது.அந்த விதியை இன்று வரை மீறிக்கொண்டிருப்பது யார்? அந்த விதியை மீறுபவர்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பது யார்? அதேஇந்திய அரசுதான்.

கடலரிப்புக்குக் ஆளாகக்கூடிய கல்பாக்கத்தில் அணு உலையை அமைத்தது யார்? பழவேற்காட்டின் சில நூறு மீட்டர் கடல்-நிலஇடைப்பரப்பில் இராசயன ஏற்றுமதி வளாகம் கட்டப்போவது யார்? கூடங்குளத்தில் எளிதில் நொறுங்கும் கட்டடங்களில் அணு உலைஅமைக்கப்போவது யார்? கொந்தளிக்கும் கடலின் நடுவே கடல் அடியில் கோடு கிழித்து அதில் கப்பல் விடப்போவது யார்? சுனாமிஎன்றதொரு விபரத்தையே அறியாத இந்திய அரசுதான். அரசியல்வாதிகள்தான். விஞ்ஞானிகள்தான்.

உண்மையில் அவர்கள் அறியாதவர்களா? இல்லை... இல்லவே இல்லை. மிக நன்றாக அறிந்தவர்கள். ஆனால், அவர்களின் நோக்கம்மக்களின் நல்வாழ்வில் இல்லை. வளர்ச்சி நடவடிக்கைளில் இடப்படும் மூலதனம், அது விரைந்து கொடுக்கும் லாபம்... அந்தப் போக்கில்கிடைக்கும் லஞ்சப்பணம் என்று அலையும் மனித குல விரோதிகள் இவர்கள். இந்த உண்மையைத்தான் சுனாமி நம் முகத்தில் அறைந்துசொல்லிச் சென்றிருக்கிறது.

சுனாமியின் தாக்கத்தால் உறைந்துபோன மனித மனங்கள் இந்தக் கேள்விகளை எழுப்பட்டும். எலிப்பொந்தில் நீர் நுழைய இறந்து மிதக்கும்எலிகள் போலாகியிருக்கும் மக்களிடம் இந்தக் கேள்விகளைக் கொண்டு செல்லட்டும்.

- மதிவாணன்(mathivanan_c@yahoo.com)

இவரது முந்தைய படைப்பு:

1. குமரி மாவட்டத்தில் அரிய வகை மணல் கொள்ளை

2. பாதரச விஷத்தின் பிடியில் கொடைக்கானல்

3. சங்கராச்சாரியார், வீரப்பன், ஜெயலட்சுமி....

4. பாழாகிவரும் பழவேற்காடு

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ak.khan@greynium.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும். 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X