For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாழாகிவரும் பழவேற்காடு

By Staff
Google Oneindia Tamil News

புலிகாட் ஏரி என்று சொல்லப்படுகின்ற பழவேற்காடு ஏரி இந்தியாவின் உப்பு நீர் ஏரிகளில் இரண்டாவது பெரியதாகும். முதல் பெரிய உப்பு நீர் ஏரி சிலிகா ஏரிஎன்று அழைக்கப்படுகிறது. ஒரிசாவில் அது உள்ளது. பழவேற்காடு ஏரி தனித்தன்மைகொண்ட சூழல் அமைப்பக்கொண்டுள்ளது. பழவேற்காட்டின் சூழல்அமைப்பப் புரிந்துகொள்வதற்கு முன்னால், தமிழகக் கடற்கரையப் பற்றி சற்று பார்த்துவிடுவோம். தமிழ்நாட்டின் கடற்கரை 950 கி.மீட்டர் நீளம்கொண்டது. மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் கிழக்குத் தொடர்சி மலைகளில் இருந்து புறப்படும் ஆறுகளின் முகத்துவாரங்களும், உப்பங்கழிகளும்,ஆற்றங்கால்களும், சதுப்பு நிலங்களும், உப்புநீர் ஏரியையும் கொண்டதாக அது அமைந்திருக்கிறது. ஆற்றுநீர் கொண்டுவரும் வெள்ளத்தால் உருவானசதுப்புநிலங்களில் அலையாத்திக் காடுகள் உருவாகியுள்ளன. ஆனால், இன்றைய நிலையில் அலையாத்திக் காடுகள் முத்துப்பேட்டையிலும், பிச்சாவரத்திலும்மட்டுமே கணிசமாக உள்ளன. அவையும் கூட அழியும் நிலையில் உள்ளன.

அலையாத்திக் காடுகள், கடல் மற்றும் புயலின் தாக்குதல்களிலிருந்து நிலத்தைக் காப்பாற்றும் தன்மை கொண்டவை. பல கடல்வாழ் உயிரினங்களின்பிறப்பிடமாக இக்காடுகள் உள்ளன. இறால், நண்டு, பல்வகை மீனினங்கள், பறவைகளின் வாழிடமாக இக்காடுகள் உள்ளன. அதன்காரணமாகமீன்வளத்தின் பிரதான ஆதராமாக இக்காடுகள் உள்ளன. ஆனால், இவற்றைப் பயனற்ற காடுகள் என்று கருதி அழிக்கும் வேலை சென்ற நூற்றாண்டின்துவக்கத்திலிருந்து நடந்துவந்திருக்கிறது. இன்று அலையாத்திக் காடுகள் அரிய வகை ஆகிவிட்டன.

கடற்ரையின் பூகோள வடிவமைப்பு (geomorphology) கடற்கரையின் சூழலை நிர்ணயம் செய்யும் ஒன்றாகும். டெல்டாக்கள், ஆற்றங்கால்கள்(பழைய ஆறுகள்) (palaeochannels) போன்ற ஆறுகளை ஒட்டிய நிலத் தன்மையும், உப்பங்கழிகள், முகத்துவாரங்கள், கடல் மணற்பரப்புகள் போன்ற கடல்சார்ந்த நிலத்தன்மையும் கொண்டதாக தமிழகக் கடற்கரை உள்ளது. பருவமழைகளை ஒட்டியும், கடல் எழுச்சியைஒட்டியும் கடற்கரை மாற்றம் அடைவதைத் தொலை உணர்வுப் படங்கள் காட்டுகின்றன. கடற்கரையோர நீரோட்டங்கள் கடற்கரையின்தன்மையைப் பாதிப்பவையாக அமைகின்றன. கடற்கரையோர நீரோட்டங்கள், முகத்துவாரங்களில் மணலைக் கொண்டு சேர்த்து உப்புஏரிகளை ஏற்படுத்துகின்றன.

Sea currentகிழக்குக் கடற்கரையோர நீரோட்டம் 9 மாதங்கள் இடச்சுற்றாக இருக்கிறது. அதாவது ஏறக்குறைய தெற்கு நோக்கியதாக இருக்கிறது.வடகிழக்குபருவ மழையின் போது கடற்கரையோர நீரோட்டம் வலச்சுற்றாக மாறிவிடுகிறது. அதாவது நீரோட்டம் வடக்கு நோக்கியதாகஇருக்கிறது. இந்த நீரோட்டம் 3 மாதங்கள் நீடிக்கிறது. பழவேற்காடு இடச்சுற்று நீரோட்ட காலமாகிய 9 மாதங்களிலும் மணல் மேடுஉருவாக்கப்பட்டு முகத்துவாரம் அடைபட்டு உப்பு ஏரியாக மாறுகிறது. வடகிழக்குப் பருவ மழையின்போது ஏற்படும் வலச்சுற்று நீரோட்டம்முகத்துவாரத்தை அரித்து கடல்நீரும், ஏரி நீரும் கலக்கும் வாய்ப்பை உருவாக்குகிறது.

பழவேற்காடு ஏரியும், காட்டுப்பள்ளி, காளாஞ்சி, வயலூர் கிராமங்களை உள்ளடக்கிய காட்டுப்பள்ளித் தீவு, பக்கிங்காம் கால்வாய்,எண்ணூர் முகத்துவாரம் உள்ளிட்ட நீர்பரப்புகள் ஒன்றுக்கொன்று தொடர்ப்புள்ளவை. இவற்றில் ஒன்றின் மீது ஏற்படும் தாக்கம் மற்றதைப்பாதிக்கும்.

பழவேற்காடு ஏரி தமிழகத்திலும் ஆந்திராவிலுமாக அமைந்துள்ளது. கடற்கரையை ஒட்டி மணல் பரப்பால் பிரிக்கப்பட்ட சிறிய நீர்பகுதியாக இந்த உப்பு ஏரி உள்ளது. சுவர்ணமுகி, காளஞ்சி, ஆரணி ஆறு, ராயல் கால்வாய் ஆகிய நான்கு ஆறுகள் பழவேற்காடு ஏரியில்நன்னீரைக் கொண்டு வந்து சேர்க்கின்றன. கிழக்குக் கடற்கரையை ஒட்டிச் செல்லும் பக்கிங்காம் கால்வாய் பழவேற்காடு ஏரியின் தெற்குப்பகுதியைத் தொட்டுச் செல்கிறது. பக்கிங்காம் கால்வாய் அருகே ஒரு முகத்துவாரம் உள்ளது. ஏரிக்கும் கடலுக்கும் இடையே உள்ள மணல்பரப்பு கடல் மட்டத்தை விட 7 மீட்டர் உயரமானது. சென்னைப் பெருநகர எல்லையில் உள்ள பழவேற்காடு ஏரி பகுதியில் மணல் பரப்புகடலில் இருந்து 500 மீட்டர் வரை பரவியுள்ளது. பழவேற்காடு ஏரியின் பரப்பு 461 சதுர கிலோமீட்டர்கள். நீர் தேங்கும் பரப்பு 13000ஹெக்டேர்கள். இந்த ஏரியைச் சுற்றி 52 கிராமங்கள் அமைந்துள்ளன. ஏறக்குறைய ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த ஏரியின்கரைகளில் வாழ்கின்றனர். விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், மீனவர்கள், கைவினைஞர்கள், வியாபாரிகள் என்ற இந்த அனைதுத்ப்பிரிவு மக்களின் வாழ்க்கையும் ஏரியை நம்பியே உள்ளது.

பழவேற்காடு ஏரி எளிதில் பாதிப்பு ஏற்படக்கூடிய கடற்கரைச் சூழல் மண்டலமாகும். நன்னீர், உப்பு நீர் கலக்கும் சூழலும், 1.5 மீட்டர்ஆழமும் உள்ள இந்த நீர்ப்பரப்பு சிங்க இறால், சிப்பிகள் பலவகைப்பட்ட நண்டு இனங்கள், மீனினங்கள், கடல் ஆமைகள், பாம்புகள்,50க்கும் மேற்பட்ட நீர் பறவைகளின் வாழ்க்கையோடு தொடர்புள்ளது. கடல்வாழ் உயிரினங்கள் நீரேற்றத்தின் போது ஏரிக்குள் நுழைவதும்,இனப்பெருக்கம் செய்து வெளியேறுவதும் காலம் காலமாக நடந்துவரும் நிகழ்வாகும். இது அலையாத்திக் காடுகளின் பகுதியுமாகும். இந்தசூழலின் காரணமாக இது வளமான மீன்பிடி இடமாக இருந்து வந்திருக்கிறது. சிங்க இறால்களைப் பிடிப்பது இங்கே மிகவும் புகழ்பெற்றதொழிலாகும். கோடிக்கணக்கான ரூபாய்கள அன்னிய செலவானியாக பழவேற்காடு சம்பாதித்து நாட்டுக்கு வழங்கியிருக்கிறது.

கடற்கரையை ஒட்டி வாழும் மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கிறார்கள். ஏரியின் கரைகளில் வாழும் மீனவர்கள் ஏரியில் மீன்பிடிக்கிறார்கள்.காலங்காலமாக வந்த பாரம்பரிய மீன் பிடி உரிமை பகுதிகள் இவர்களுக்கு உண்டு.

சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ராம்சார் பகுதி என்று இந்தப் பகுதியை இயற்கை மற்றும் இயற்கை வள ஆதாரங்களைப்பாதுகாப்பதற்கான சர்வதேச இணையம் (The International Union for the Conservation of Nature and Natural Resources- IUCN)அறிவித்துள்ளது. இயற்கைக்கான சர்வதேச நிதியம் இதனை பாதுகாக்கப்பட்ட பகுதி என்று அறிவித்துள்ளது. அலைஇயக்கம் உள்ள கடல்,வளைகுடா, முகத்துவாரம், உப்பங்கழிகள், ஆறுகள் ஆகியவற்றின் உயர் அலைமட்டத்திலிருந்து 500 மீட்டர் வரை உள்ள நிலப்பரப்பும்,உயர் அலை மட்டத்திற்கும், தாழ்வலை மட்டத்திற்கும் இடப்பட்ட நிலப்பரப்பும் ஒழுங்குக்கு உட்பட்ட கடற்கரை பகுதி(1) என்று கடற்கரைஒழுங்கு அறிவிக்கை 1991 (Coastal Regulation Notification) அறிவித்துள்ளது. அப்பகுதி பாதுகாக்கப்பட வேண்டும் எந்தவிதமாறுதலுக்கும் உட்படுத்தப்படக்கூடாது என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிக்கையின்படி பழவேற்காடு ஏரி சூழல் அமைப்பும், அதாவதுஉப்பு ஏரி, எண்ணூர் முகத்துவாரம், பக்கிங்காம் கால்வாய் உட்பட்ட பகுதியும் CZR 1 பிரிவுக்குள் வருகின்றன. ஆனால் இந்த அறிவிப்புகள்மற்றும் பிரகடனங்கள் அனைத்தும் காற்றோடு போய்விட்டன. இவற்றை மீறுபவர்கள் வேறு யாரும் அல்ல. வளர்ச்சியைத்திட்டமிடுபவர்கள்தான்.

பழவேற்காட்டின் இன்றைய நிலை மிக மோசமாக இருக்கிறது. மணற்திட்டுகளில் சீமைக் கருவைதான் காணப்படுகிறது. அலையாத்திக்காட்டு மரவகைகள் மிகவும் அருகி முற்றூடாக இல்லை என்ற நிலைக்கு வந்துவிட்டன. வனத்துறையினர் பிச்சாவரத்தில் இருந்துஅலையாத்தி இனங்களைக் கொண்டுவந்து வளர்க்க முயற்சிசெய்கின்றனர். நீரின் அபரிமிதமான உப்புத் தன்மையின் காரணமாகஅலையாத்திக் காடுகள புனர்நிர்மாணம் செய்யும் பணி வெற்றிபெற வில்லை என்று தெரிவிக்கின்றனர்.

ஏரியில் மீன் பிடிக்கும் மீனவர்கள் மற்றொரு முக்கியமான இயற்கைப் பிரச்சனையைச் சுட்டிக் காட்டுகின்றனர். மழை குறைவின் காரணமாகஏரியின் நீர்வரத்து குறைந்து விட்டது. நதியின் முகத்துவாரத்தை மூடிவிடும் மண்ணை அகற்றிக்கொண்டு செல்லும் ஆற்றல் நீருக்கு இல்லை.மழைக்காலத்தில் முகத்துவாரத்தை அரித்துக்கொண்டு நீர் கடலுக்குச் சென்று பல ஆண்டுகள் ஆகின்றன என்கின்றனர் மீனவர்கள். சென்றஆண்டு மழைக் காலத்தில் ஏரியில் நீர் ஏறியவுடன் மீனவர்கள் திரண்டு சென்று முகத்துவாரத்தை வெட்டிவிட்டிருக்கின்றனர். வழக்கமாகவெகுநீண்ட தூரத்துக்கு மண்ணை அரித்துச் செல்லும் நீர் வெட்டி விட்ட பின்னரும் முகத்துவாரத்தின் வாயை சில பத்து அடிகளுக்கு மேல்திறக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் விரைவிலேயே முகத்துவாரம் அலைகொண்டுவந்த மண்ணால் மூடப்பட்டு விட்டது. தற்பொழுதுவழக்கமான முகத்துவாரத்துக்கு வெகு தொலைவில் சிறிய அளவுக்கு கடலுக்கும் ஏரிக்குமான இணைப்பு இருக்கிறது.

இந்த திறப்புதான் கடல் உயிரினங்கள் ஏரிக்கு ஏறிவருவதற்கான வாயாகும். கடலில் மீன் பிடிக்க வேண்டிய மீனவர்கள் நதியின்முகத்துவாரத்திலேயே வலையைக் கட்டி ஏறிவரும் மீன்களைப் பிடிக்கின்றனர். இது ஏரியில் மீன் உற்பத்தி பெருகுவதைத் தடுக்கிறது.தங்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கிறது என்று ஏரியில் மீன் பிடிக்கும் உள்நாட்டு மீனவர்கள் குமுறுகிறார்கள்.

உள்நாட்டு மீனவர்களுக்கும் கடல் மீனவர்களுக்கும் இடையில் கடும் சமூகப் பதட்டம் இருக்கிறது. மரபு ரீதியான மீன்பிடி உரிமகள்தற்பொழு தாக்குப் பிடிக்கவில்ல. இ தொடர்பான மோதல்களும், பேச்சுவார்த்தகளும் நடந்திருக்கின்றன. ஆனால், தீர்வு எவும் இவரக்கிடக்கவில்ல. இந்த நிலயில் கூடுதல் பிரச்சன பழவேற்காடு பகுதியில் புதிதாக குடியேறிய மீனவர்களின் வருகயாகும். ஸ்ரீஹரிகோட்டாவில்ராக்கெட் தளம் அமக்கப்பட்ட போ அங்கிருந்த மீனவர்கள் 1985ல் வெளியேற்றப்பட்டனர். வழக்கம் போல அவர்களுக்கு அளிக்கப்பட்டவாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. அவர்களும் இப்போது ஏரியில்தான் மீன்பிடித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல்பாரம்பரியமாக மீன்பிடித்து தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களைத் தவிரவும் விவசாய வேலைகள் உள்ளிட்ட வேலைகளைப் பார்த்துவந்தவர்களும் இப்போது மீன்பிடிக்கத் துவங்கிவிட்டனர். விவசாய வேலைகள் குறைந்துபோனதும், வருமானம் இன்மையும் உள்நாட்டுமக்களும் மீன்பிடித் தொழிலில் ஈடுபடக் காரணம். இவையனைத்தும் சேர்ந்து இப்பகுதியில் சமூக நிலைமை சூடானதாக இருக்கிறது.

இவையனைத்தையும் விடக் கூடுதலான பிரச்சனை மீன் வளம் குறைந்துபோனதாகும். மீன் வளத்தைப் பகிர்ந்துகொள்ள மீனவர்கள் ஒருமுறையை வகுத்துள்ளனர். பழவேற்காட்டின் வைஜெயந்திமாலா (MSSS நடத்தும் சுய உதவிக்குழுக்களின் கூட்டமைப்புத் தலைவர்) தனதுகுடும்பத்திற்கு 24 நாட்களுக்கு ஒரு முறைதான் பாடு (மீன்பிடிப்பு) கிடைக்கிறது என்கிறார். ஒரு நாள் தொழிலுக்குச் சென்றால் மீனவர்ஒருவர் இன்றைய நிலைமைக்கு 50 ரூபாய் முதல் 500 ரூபாய் வரச் சம்பாதிக்க முடியுமாம். இந்த வருமானத்தில் எப்படி குடும்பத்தைநடத்திச் செல்கிறார்கள்? இந்தியர்கள் உண்மையில் அதிசயங்களை நிகழ்த்துபவர்கள்தான்.

முகத்துவாரம் ஆண்டு முழுவதும் அடைபட்டுக் கிடப்பதுதான் மீன் வளக்குறைவுக்குக் காரணம் என்று கூறும் வைஜெயந்திமாலா,முகத்துவாரத்தில் தூர் அகற்றும் நிரந்தர அமைப்பொன்றை அரசுக் கட்டித் தரவேண்டும் என்று கோருகிறார். அது தொடர்பான ஒரு மகளிர்கூட்டம் ஒன்றை கூட்டியிருப்பதாகச் சொல்லும் அவர், இந்த அத்துவானக் காட்டில் பெரிய யந்திரங்கள் வராது என்று அரசு அதிகாரிகள்சொல்வதாகச் சொன்னார். மீனவர்களின் கோரிக்கையை ஏற்று கனரக யந்திரங்களைக் கொண்டுவர முடியாத பூகோள நிலையைக் காரணம்காட்டும் அதிகாரிகளும் அரசு யந்திரமும், காட்டுப்பள்ளி என்ற தீவுப்பகுதியிலும், பழவேற்காடு ஏரிப்பகுதியிலும் மேற்கொண்டுள்ள அதிநவீன நடவடிக்கைகளை அவர் அறிந்திருக்கவில்லை என்று தோன்றியது.

பழவேற்காடு சூழலைப் பாதுகாக்கப்பட்ட சூழல் என்று அறிவித்த அரசுதான் பழவேற்காடு சூழலுக்கு எதிரான வளர்ச்சிப் பணிகளைச்செய்து வருகிறது. சென்னை எண்ணூரில் இயங்கிவந்த அனல்மின்நிலயம் எண்ணூர் பகுதியை மாசுபடுத்தி வந்தது. அதன் சாம்பல் தூசு ஊர்முழுவதும் பரவியது. அந்த நிலைமை இன்று இல்லை. அனல்மின் நிலையங்களின் பெரிய பிரச்சனைகள் இரண்டு. ஒன்று, அதுவெளியேற்றும் குளிர் நீர். குளிர் நீர் என்று சொல்லும்போது தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது. மின் உலையைக்குளிர்விக்கப்பயன்படுத்தப்படும் நீரையே குளிர் நீர் (Coolant water) என்று குறிப்பிடுகிறார்கள். மற்ற பெரிய பிரச்சனை நிலக்கரிச் சாம்பல்.இந்த நிலக்கரிக் சாம்பல நீரில் கரைத்து வெளியேற்றிவிடுகிறார்கள். இவற்றின் காரணமாக கடற்கரைச் சூழல் மிகப்பெரும் அளவுக்குமாசுபட்டு வந்தது. உள்நாட்டு மீனவரான செல்வம் ஆலைகளால் என்ன மாற்றம் வந்திருக்கிறது என்பதைச் சொன்னார்.

அவரின் இளைமப் பருவத்தில் எண்ணூர் ஆலையொன்றில் வேலை கிடைத்திருக்கிறது. ஆனால், அவர் செல்லவிரும்பவில்லை. கடலில்வலை விரித்து வைத்துவிட்டு உட்கார்ந்திருந்தால் இறால் மீன் பட்டிருக்கிறது. நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாய் என்பது சாதாரணமாம்.கேவலப்பட்ட அடிமைத் தொழிலாளி வேலைக்குச் செல்ல அவர் தயாரில்லை. ஆனால், இன்று அவர் பாடுக்குச் செல்வதில்லை.நாளொன்றுக்கு 50 ரூபாய் கிடைப்பதே பெரிய பாடு. அவர் மட்டுமல்ல. தனது பிள்ளைகள் அனைவரையும் சென்னைக்கு வேலைக்குஅனுப்பிவிட்டார். மீன் பிடிப்பை நம்பினால் சமாதிதான் என்கிறார். செல்வம் காட்டுப்பள்ளி வரை படகில் அழைத்துச் சென்றார். பக்கிங்காம்கால்வாய் கருப்பாக நாறியது. பழவேற்காடு துவங்கி துள்ளும் மீன்களைக் கண்டு சென்ற எனக்கு அங்கே மீன்களின் இருப்புக்கானஅடையாளத்தைக் காணமுடியவில்லை. படகில் பயணம் செய்த தொலைவு முழுவதும் பக்கிங்காம் கால்வாயின் இருமருங்கிலும் இறால்பண்ணைகள் அமைக்கப் பட்டிருந்தன. இறால் பண்ணையாளர்கள் தமக்கென தனியாகக் கால்வாயைக் கூட வெட்டிக் கொண்டிருக்கிறார்கள்.CRZ1என்ற அரசின் அறிவிக்கை நடைமுறையில் இருப்பதற்கான சிறு வாய்ப்பு கூட கண்ணுக்குப் படவில்ல. சமீபத்திய வரவான சொறி மீன்ஆலகளும் இயங்கிக்கொண்டிருக்கின்றன. கடலுக்கும் ஏரிக்கும் இடப்பட்ட மணல் பரப்பிலும் அவை புதிதாக எழும்பிக்கொண்டிருக்கின்றன.இந்த சொறிமீன் கம்பெனிகள் ஜெல்லி மீனைப் பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. சலவை சோடாவையும், உப்பையும்பயன்படுத்தும் இந்த ஆலைகளில் அபரிமிதமான தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. கழிவு நீர் நேரடியாக ஏரியில் விடப்படுகிறது. கழிவுகள்கலந்த ஏரி நீர் சகதியாகக் கிடக்கிறது.

ஆனால், இவையெல்லாம் பெரிய ஆலைகள் ஏற்படுத்தும் பாதிப்புகளோடு ஒப்புடும்போது மிக அற்பமானவை என்று தோன்றுகிறது.வடசென்னை அனல்மின்நிலையம், எண்ணூர் துறைமுகம், பெட்ரோல் -இராசயன ஆலைகள் என்று பெரும் பட்டியலே பழவேற்காடுசூழலின் மீது கடும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. வடசென்னைஅனல்மின்நிலையமும், எண்ணூர் துறைமுகமும் CRZ1 பகுதியில்அமைந்துள்ளன. ஆனால், அனல் மின்நிலையம் 1991ல் CRZ1 அறிவிக்கப்படுவதற்கு முன்னர் அமைக்கப்பட்டது. ஆனால், எண்ணூர்துறைமுகம் இகீஙூ1 விதிகளுக்கு புறம்பாக அரசால் அமைக்கப்பட்டுள்ளது. பல்லுயிர்ச்சூழல் சிறப்புமிக்க காட்டுப்பள்ளி பஞ்சாயத்தில் திரவஇயற்கை வாயு ஆலையொன்று எண்ணூர் துறைமுகத்திற்கு அருகே அமைக்கப்படவுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம் அமைத்துள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தின் திறன் 630 மெகாவாட் ஆகும். எண்ணூர்முகத்துவாரத்திலிருந்து 44 லட்சம் லிட்டர் தண்ணீரை எடுக்கிறது. குளிர் (விக்க பயன்படுத்தத்தப்பட்ட) நீரை பக்கிங்காம் கால்வாயில்விடுகிறது. அதுமட்டுமல்லாமல் நிலக்கரிச் சாம்பலை திரவக் கழிவாக உப்பு ஏரிக்குள் (பழவேற்காடு சூழல் மண்டலம்) வெளியேதள்ளுகிறது.

அனல்மின்நிலையத்திலிருந்து வரும் கால்வாய் சில நூறு மீட்டர்கள் நீண்டு பின்னர் பக்கிங்காம் கால்வாயை அடைகிறது. அந்தக்கால்வாயை நெருங்கியவுடன் உஷ்ண அலை தாக்கியதாக 23.01.2003 தேதியிட்ட இந்து பத்திரிகை எழுதியது. தண்ணீர் சுத்தமானதாகவோஅல்லது குளிர்ச்சியானதாகவோ இல்லை. மேற்குப் பக்கத்து எல்லைச்சுவர் வெப்ப அலையைத் தாங்காமல் நொறுங்கிப் போய்விட்டதுஎன்று இந்து பத்திரிகையாளர் எழுதினார். மேலும் அவர் நேரடியாக மேற்கொண்ட கள ஆய்வின் தகவல்கள் அதிர்ச்சியூட்டுபவை.

மின்நிலையத்திலிருந்து வெளிவந்த நீரின் வெப்பநிலை 50 டிகிரி செண்டிகிரோடாக இருந்ததை அவர் அளந்தறிந்தார். அங்கிருந்து துவங்கிபக்கிங்காம் கால்வாயை தண்ணீர் அடையும் வரை தண்ணீரின் வெப்பநிலை 47 டிகிரி செண்டிகிரோடாக இருந்ததையும் அவர் நேரடியாகஅளந்தார். அனல் மின் நிலையத்திற்காக எடுக்கப்படும் தண்ணீரின் வெப்பத்திற்கும், வெளியேற்றப்படும் தண்ணீரின் வெப்பத்திற்கும்இடையில் 5 டிகிரி செண்டிகிரேடு மட்டுமே வித்தியாசம் இருக்கலாம் என்பது விதி. ஆனால் உள்ளெடுத்த நீரின் வெப்பநிலை 31 டிகிரிசெண்டிகிரேடு என்றும் வெளியேற்றப்படும் தண்ணீரின் வெப்பநிலை 35.8 டிகிரி செண்டிகிரேடு என்றும் பதிவு செய்து கணக்குக்காட்டியிருப்பதையும் அந்த பத்திரிகை எழுதியது.

கடல் வாழ் உயிரினங்கள் சாதாரண வெப்பநிலைக்கு மேல் சில டிகிரி வெப்பநிலையை மட்டுமே தாங்கும் தன்மை கொண்டவை என்றுகடல்உயிரின வல்லுனர்கள் சொல்கிறார்கள். அனல் மின்நிலையத்தின் மூன்று உற்பத்தி யந்திரங்களுக்குமாக ஒரு வினாடிக்கு 27,000 லிட்டர்தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. அப்படியானால் ஒரு நாளைக்குப் பயனாகும் தண்ணீரின் அளவு 2332.8 மில்லியன் லிட்டர் (ஒரு மில்லியன்என்பது பத்து லட்சம்) தண்ணீர் என்று கணக்காகிறது. அதாவது ஒரு பெரும் ஆறு உள்ளே சென்று வெளியே வருகிறது. அந்த அனல்ஆறுதான் பழவேற்காட்டின் உயிர்வளத்திற்கு எண்ணூர் முகத்துவாரத்தில் சமாதி கட்டுகிறது.

அனல் மின் நிலையத்தின் மற்றொரு அபாயம் நிலக்கரி சாம்பல் கழிவாகும். ஏரியின் அருகிலேயே சாம்பல் செயற்கைக் குளங்களில்தேக்கப்படுகிறது. இச்சாம்பலிலிருந்து ஆர்சனிக், வாடியம், தாலியம், பேரியம், துத்தநாகம், மேக்னீசியம் போன்ற விஷங்கள் நீர்நிலைகளில்கலக்கும் அபாயம் இருக்கிறது. அனல்மின் நிலையத்தில் எரிக்கப்படும் கரியின் மற்றொரு அபாயம் பாதரசமாகும். மத்தியப் பிரதேசத்தின்சிங்குரோலியின் பிரும்மாண்டமான அனல் மின் நிலையத்தின் அருகாமையில் உள்ளவர்கள் மத்தியில் செய்யப்பட்ட ஆய்வு பாதரச நஞ்சுஅளவுக்கு அதிகமாக இருந்ததைக் காட்டியது. ஆனால், தமிழகத்தில் அனல் மின்நிலையங்களின் பாதரச மாசு பற்றிய தகவலோ அல்லதுசிரத்தையோ இல்லை என்பது கவலைக்குரியது.

நிலக்கரிச் சாம்பலைச் சுவாசிப்பது நிரந்தரமான சுவாசமண்டல நோய்களுக்கு இட்டுச்செல்லும். தோல் வியாதிகள், ஆஸ்த்துமா,புற்றுநோயை உருவாக்கும். சாம்பலில் உள்ள சிலிகான் சிலிகோஸிஸ் என்ற நோயை ஏற்படுத்தும்.

311 ஹெக்டேர் பரப்புள்ள மூன்று குளங்களில் நிலக்கரிச் சாம்பல் கரைசல் விடப்படுகிறது. இந்தக் குளங்களில் சேர்க்கப்படும் சாம்பல்கரைசல் இறுதியில் காட்டுப்பள்ளி அருகே பழவேற்காடு சூழல் மண்டலத்தில் கொட்டப்படுகிறது. வறட்சியான காலங்களில் சாம்பல்எரிக்கும் ஏரிக்கரைத் தாவரங்களுக்கும் காற்றின் மூலம் பரவுகிறது. அனல் மின்நிலையத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளஅத்திப்பட்டு உப்பளங்கள் இந்தச் சாம்பலால் பாதிக்கப்பட்டு மூடப்பட்டுவிட்டன!

நீரில் கொட்டப்படும் சாம்பல் ஏரியின் ஆழத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல், நீரில் பாசியை உண்டாக்கியிருக்கிறது. ஏரியின் ஆழம்இப்போது பத்து மீட்டருக்கும் குறைவு என்று பழவேற்காடு பங்கு தந்தை குறிப்பிட்டார். இதன் காரணமாக பாதிக்கப்பட்ட லைட் ஹவுஸ்குப்பம் மீனவர்கள் ஆந்திரக் கடல்பகுதிக்கு மீன் பிடிக்கச் செல்கிறார்கள். இரண்டு மாநில மீனவர்களுக்கும் இடையில் மோதல் நடப்பதுஇப்போது தொடர் கதையாகிவிட்டது.

அனைத்துப் பாதிப்புகளும் சேர்ந்து பழவேற்காட்டின் மீன் வளத்தைப் பாதித்துவிட்டன. ஒரு முறை மீன் பிடித்தால் 2000 ரூபாய் சம்பாதித்தகோட்டைக்குப்பம் மீனவர்களுக்கு இப்போது ரூபாய் 200 தான் கிடைக்கிறது. பல மீனினங்கள் அழிந்துவிட்டன. பாசி பறண்டா, துளுவமீன், சேத்து அருள் போன்ற மீனினங்களின் வம்சமே அழிந்துவிட்டது என்றார் மீனவர் செல்வம். சில வகை வலைகளின் பயன்பாடேஅற்றுப் போய்விட்டது என்று அவர் அலுத்துக்கொண்டார்.

ஒரு ஹெக்டேருக்கு 200 கிலோ கடல் (உணவு) உயிரினங்கள் இருக்கும் என்ற மிகக் குறைவான மதிப்பீட்டை வைத்துப் பார்த்தால் 10,000டன் அளவுக்கு மீன் வளம் இருக்க வேண்டும். ஆனால், அதில் 5% மட்டுமே இப்போது இருக்கிறது என்று வல்லுனர்கள் சொல்கிறார்கள்.

Pulicat lake
இந்தப் பிரச்சனைகளை மேலும் சிக்கலாக்கும் வகையில் எண்ணூர் துறைமுகம் வந்திருக்கிறது. கடற்கரைச் சூழல் மண்டலம் பற்றிய கவலைசிறிதும் இல்லாமல் உருவாக்கப்பட்ட துறைமுகம் எண்ணூர் துறைமுகம். முதலில் சென்னை துறைமுகத்தின் நெருக்கடியைக் குறைப்பதற்காகநிலக்கரியைக் கையாள்வதற்கான சிறு துறைமுகம் (Satellite Port) என்றுதான் எண்ணூர் துறைமுகம் சொல்லப்பட்டது. அதற்கான மொத்தமூலதனம் வெறும் 100 கோடி என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், பின்னர் அது விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன் மொத்த மூலதனம் 900கோடி ரூபாய். இன்சாட் 1 பீ செயற்கைக்கோள் படங்கள் எண்ணூர் முகத்துவாரம் மணலால் மூடப்பட்டுள்ளதைக் காட்டியது. வடசென்னைதுறைமுகத்தின் மணல் அள்ளும் நடவடிக்கைகளே இந்த மணல் படிவுக்கான காரணம்.

16 மீட்டர் ஆழம் உள்ள நுழைவுக்கால்வாயை அமைக்க 13 மில்லியன் கன மீட்டர் மண் தோண்டப்பட்டிருக்க வேண்டும் என்றுமதிப்பிடப்படுகிறது. இதில் 3.17 மில்லியன் கன மீட்டர் மண்ணும் களிமண்ணும் கடலிலும், அருகாமையில் உள்ள கடல் சார்நீர்நிலைகளிலும் கொட்டப்பட்டது. இந்த பெருமளவு மண் தோண்டல் கடல் அரிப்புக்குக் காரணமாகியது. அதன் தாக்கத்தை 40 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள பழவேற்காடு அனுபவித்தது. பல வீடுகள் கடலால் விழுங்கப்பட்டன. பழவேற்காடு உப்பு ஏரியையும்கடலையும் பிரிப்பது மெல்லிய அகலம் கொண்ட மணல் திட்டுதான். அது கடும் அரிப்புக்கு ஆளானது. இந்த மணல் திட்டில் அமைந்துள்ளகோரக்குப்பம் 20,000 மீனவர்களின் வாழிடம். இவர்களின் குடியிருப்புகளை கடல் அரிப்புக் கடுமையாகப் பாதித்துள்ளது. ஊரின் நடுவில்இருந்த சமுதாயக் கிணறு இன்று 50 மீட்டர் கடலுக்குள் உள்ளது. இப்போது இந்தக் கிராமத்தின் அகலம் வெறும் 75 மீட்டராகச்சுருங்கிவிட்டது. சாத்தான் குப்பத்தின் 56 குடும்பங்கள் வீடுகளை மட்டுமல்ல அவர்களின் இரண்டு தெருக்களையே இழந்துவிட்டன. அந்தக்கிராமத்தின் 115 குடும்பங்கள் எடமணிக்குப்பத்திற்குக் குடிபெயரும்படி ஆனது. வைரவன் குப்பத்தின் 50 மீட்டர் பிரதான நிலம் கடலுக்குள்போய்விட்டது. துரைமலை நகர், நடுமாதாக்குப்பம், தெரசாக்குப்பம், காசிக்கோவில் ஆகியவற்றின் சில பகுதிகள் கடலுக்குள்போய்விட்டன. 1997ல் உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு விதிகளின்படி ஒரு பொது விசாரணை துறைமுகம் அமைக்கப்படுவதற்குமுன்னர் நடந்திருக்க வேண்டும். ஆனால் நடக்கவில்லை. 1992லேயே சுற்றுச்சூழல் அமைச்சரகத்திடமிருந்து தடையில்லை சான்றைப்பெற்றுவிட்டதாகச் சொல்கிறார்கள். இதற்கிடையில் அமைப்பு 6000 கோடி ரூபாயிலான பெட்ரோல் இராசயனத் தொழில் பேட்டைக்குத்திட்டமிட்டது. அதற்காக 2900 ஹெக்டேர் நிலம் மறுபடியும் தேவை. எண்ணூர் துறைமுகத்திற்கு கூடுதல் கப்பல் நிறுத்தும் வசதிக்காக 600ஹெக்டேர் நிலம் தேவை.

திட்டமிடப்பட்ட பெட்ரோல் இராசயன தொழில் வளாகம், காளாஞ்சி, காட்டுப்பள்ளி, சிந்தாமணிபுரம், காட்டுப்பள்ளிபாக்கம்,புழுதிவாக்கம், வயலார் கிராமங்கள உள்ளடக்கிய காட்டுப்பள்ளி பஞ்சாயத்தில் அமைக்கத் திட்டமிடப்பட்டது. இப்பஞ்சாயத்து ஒரு புறம்கடலாலும் மறுபுறம் பழவேற்காடு ஏரியாலும், பக்கிங்காம் கால்வாயலும் சூழப்பட்ட அரிய சூழல் கொண்ட நிலப்பரப்பு. ஏற்கனவேஅனல்மின்நிலையம் ஏற்படுத்திய பாதிப்பினால் கடற்கரையை ஒட்டிய 10 மீட்டருக்குள் மீனினங்கள் கிடைப்பதில்லை என்றுகாட்டுப்பள்ளிக் குப்பத்தின் மீனவர்கள் கூறுகின்றனர். இச்சூழலில் இன்னும் அதிகமான ஆலைகளை, அதுவும் இராசயனதொழிற்சாலைகளைக் கொண்டுவருவது மிகமோசமான விளைவை ஏற்படுத்துவதாக இருக்கும்.

ஆனால், பல காரணங்களினால், பெட்ரோல் -இராசயனத் தொழில் வளாகத் திட்டம் கைவிடப்பட்டது. ஆனால், இப்போது எண்ணூர் சிறப்புப்பொருளாதார மண்டலத்தை உருவாக்க மத்திய அரசு கொள்கை ஒப்புதல் கொடுத்துள்ளது. தமிழ்நாடு தொழில்துறை வளர்ச்சி நிறுவனம்எண்ணூர் துறைமுக நிறுவனத்துடனும், அடிக்கட்டுமான வளர்ச்சி நிதிநிறுவனத்துடனும் இணைந்து சிறப்புப் பொருளாதார மண்டலத்தைஉருவாக்கவிருக்கிறது. இதற்கான சிறப்பு நிறுவனம் உருவாக்கும் பொறுப்பை தமிழ்நாடு தொழில்துறை வளர்ச்சி நிறுவனத்துக்கு தமிழகஅரசு வழங்கியுள்ளது. சிறப்புப் பொருளாதார மண்டலம் என்று அறிவித்துவிட்ட பின்னர் சுற்றுச்சூழல் பாதிப்பு. மக்களுக்கு பாதிப்புஎன்றெல்லாம் யாரும் குரல் கொடுக்க முடியாது. சிறப்புப் பொருளாதார மண்டலத்தை உருவாக்க 2500 ஏக்கர் நிலம் தேவை. ஏற்கனவேதமிழ்நாடு தொழில்துறை வளர்ச்சி நிறுவனத்திடம் பெட்ரோல் இரசாயனத் தொழில் வளாகத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட 2800 ஏக்கர்நிலம் இருக்கிறது. மேலும் 2500 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த தமிழ்நாடு தொழில்துறை வளர்ச்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது.

எண்ணூர் துறைமுகம் இன்று இந்தியாவின் பெரிய துறைமுகங்களில் ஒன்றாக வளர்ச்சியடைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தனியொருகம்பெனியாக இயங்கும் முதல் இந்திய துறைமுகம். இந்த துறைமுகக் கம்பெனியின் இந்த ஆண்டு லாபம் 20 கோடி. இது இந்தகம்பெனியின் 90 கோடி விற்றுமுதலின் 22% ஆகும். வருமாண்டில் விற்றுமுதல் 130 கோடியைத்தொட திட்டமிடப்பட்டுள்ளது.இத்துறைமுகத்தின் தளங்கள் தனியார்களின் வசம் கொடுக்கப்படுவதை அடிப்படை உத்தியாகக் கொண்டது. BOT முறையில் (கட்டி,இயக்கி, கைமாற்றித் தருவது (Built-Operate-Trasnfer -BOT) என்ற அடிப்படையில் தனியார்களுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. ஹூண்டாய்உள்ளிட்ட கம்பெனிகளும், பல்வேறு வெளிநாட்டுக் கம்பெனிகளும் இங்கே கால்பதித்துள்ளனர், பதிக்கவிருக்கின்றனர்.

இயற்கை வாயு உட்பட பல்வேறு வகைப்பட்ட இராசயனங்கள் மற்றும் பண்டங்களைக் கையாளும் வகையில் துறைமுகம் வளர்ந்துவருகிறது. ஆனால், இந்த வளர்ச்சியின் விலை என்ன? இதுபோன்ற வளர்ச்சி ஏற்பட்டால்தான் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று வாதம்செய்வர்களுக்குச் சொல்வதற்கு ஒரு செய்தி இருக்கிறது. இந்த ஆண்டு மட்டும் 20 கோடி லாபம் சம்பாதித்துள்ள இத்துறைமுகக்கம்பெனியின் ஊழியர்களின் எண்ணிக்கை என்ன தெரியுமா? ஆயிரங்களில் இருக்கும் என்று நீங்கள் யோசிக்கத் துவங்கினால், உங்களுக்குஉலகம் தெரியவில்லை என்று அர்த்தம். நம்புங்கள்! ஊழியர்களின் எண்ணிக்கை வெறும் 20 மட்டுமே. இந்தச் சாதனையச்ை செய்வதற்காகஎத்தனை மீனவர்கள், விவசாயிகள் மற்றும் உயிரினச் சூழல் பாதிக்கப்பட்டது என்ற செய்தி நம் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. இதுஒருபுறமிருக்க மற்றொரு செய்தியோடு இந்தக் கட்டுரையை முடித்துக்கொள்வோம். எண்ணூர் துறைமுகத்தில் சரக்குகளை இறக்கும்கப்பல்களின் மாலுமிகள் பொழுதுபோக்க 18 துளைகள் உள்ள கோல்ப் மைதானத்தை அமைத்து வருகிறார்கள். ஒரு துளை என்பதற்கு 2.5ஏக்கர் நிலம் வேண்டும் என்று நண்பர் ஒருவர் சொன்னார். கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் நிலை கொண்டுவிட்ட உலகமயப்பொருளாதாரம் சூழலுக்கும் மக்களுக்கும் என்ன பாதிப்பு ஏற்படுத்தும் என்பதற்கும் அது யாருக்கு வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தித்தருகிறதுஎன்பதற்கும் பழவேற்காடு ஒரு உதாரணமாக உள்ளது.

- மதிவாணன்([email protected])

இவரது முந்தைய படைப்பு:

1. குமரி மாவட்டத்தில் அரிய வகை மணல் கொள்ளை
2. பாதரச விஷத்தின் பிடியில் கொடைக்கானல்
3. சங்கராச்சாரியார், வீரப்பன், ஜெயலட்சுமி....


படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X