For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெற்றோர் ஆசிரியர் கழகமும், கல்வியும்

By Staff
Google Oneindia Tamil News

ஆசிரியர்களே, பெற்றோர்களே
எங்களுக்காக அழுது புலம்பியது
போதும், உயிருடன் இருக்கும்
குழந்தைகளுக்காவது கருக்காமல்
கல்வி கொடுக்க உருப்படியாக எதையாவது
செய்யுங்கள் என்று கேட்பது போல்,

கும்பகோணப் பள்ளியில் கருகி சுருண்ட குழந்தைகள், பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு ஒரு கடிதம் எழுதியதாக ஒரு கற்பனைக்கடிதம் ஒரு ஆங்கில தினசரியில் வெளிவந்ததது. (இந்து 27, ஜூலை 2004). இதனைப் படிக்க நேர்ந்தவர்களின் கண்களிலே கண்ணீர்மட்டுமல்ல, மனசாட்சி உள்ளவர்களின் நெஞ்சங்களில் சுரீர் என்று கொடுக்கும் சாட்டையடியின் வேதனையும் சேர்ந்து வந்தது.

Students1964ல் உன்னத நோக்கத்துடனும் சட்ட அருகதையுடனும் பெற்றோர் ஆசிரியர் கழகங்களை, எல்லா பள்ளிகளிலும் விதிவிலக்கின்றிஅமைத்திட அரசு முடிவு செய்தது. இந்த அமைப்பு இயங்க ஒரு சிறிய தொகை (இன்று ரூ.25) வசூலிக்கவும் அரசு அனுமதியளித்தது.இதனை அரசு மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் கண்காணிக்கும் என்று அரசு முடிவு தெரிவித்தது.

ஆசிரியர் பெற்றோர் கழகத்தின் முதல் நோக்கம், பள்ளியை எல்லா வகையிலும் மேம்படுத்த உதவுவது. ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஒத்துழைப்பை உருவாக்குவது. இதன் மூலம் மாணவர்களின் சமூக, கலாசார, பொருளாதார, கல்வி துறைகளில் பங்களிப்பை மேம்படுத்தவும், மாணவர்களிடையே தலைமை தாங்கும் ஆற்றலை வளர்த்திடவும் உதவுவது. மாணவர்களே, இதழ்கள், இலக்கிய கூட்டங்கள், நூலக கூட்டங்கள் நடத்தவும் இந்த அமைப்பு உதவிடும். இவ்வாறு உன்னத நோக்கங்களை கொண்டதே இவ்வமைப்பு என்று அரசே அறிவிப்பில் கூறியது; இன்றும் கூறி வருகிறது.

இந்த உயர்ந்த நோக்கங்களை மனதில் கொண்டு இன்று பெற்றோர், ஆசிரியர் கழகம் நடத்தப்படுகிறதா? அவைகளை அரசுகண்காணிக்கிறதா? என்றால் இல்லை என்று அழுத்தம் திருத்தமாகக் கூறலாம். மாறாக இன்று விதிவிலக்கின்றி எல்லாப்பள்ளிகளிலும் இருக்கிற இந்த பெற்றோர் ஆசிரியர் கழகம் சுயநலக் கும்பலின் (கட்சி மாறிகள்) கையில் சிக்கியதால் பள்ளிக்குவரும் மாணவர்களின் பெற்றோர்களை சுரண்டும் கருவிகளாக ஆக்கப்பட்டு விட்டன. கண்காணிக்க வேண்டிய அரசின் கடைக்கண்பார்வையும் இந்த சுரண்டலுக்கு உண்டு என்பதையும் காண்கிறோம்.

காலப் போக்கில், உன்னத இலக்கு மறந்து போய், அரசே கொள்கையை மாற்றி கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்துக்கொண்டே போனது.இப்பொழுது பள்ளிகள், பெற்றோர் ஆசிரியர் நன்கொடை வசூல், கட்டண வசூல் ஆகியவற்றின் மூலம் நடத்தும்பள்ளிகளாக ஆக்கப்பட்டு விட்டன. அரசு பள்ளியானாலும், அரசு உதவி பெறும் பள்ளியானாலும் பெற்றோர் ஆசிரியர் கழகமூலம் நன்கொடை வசூலித்து நடத்தும் பள்ளிகளாயின. பாதி மனிதன், பாதி மிருகம் போல் இந்த அமைப்பு ஆகி கல்வியை விலை பேசும்கடைகளாயின.

இரண்டு ரகமான ஆசிரியர்கள், இரண்டு ரகமான பாடத்திட்டங்கள் விரும்புகிற கல்வி என்றால் கூடுதல் கட்டணம் என்ற நிலைவந்துவிட்டது. ஏன் இந்தக் கொடுமை? பணமில்லை! எனவே வேறு வழியில்லை என்று சொல்லாத நாளில்லை. ஏதோ பணம்என்பது மானுட சமூகம் உருவாக்கிய ஏற்பாடல்ல; கடவுள் தந்த வரம்போல அரசு கூறுகிறது. இதனை ஆஸ்தானஅறிவுலகமும் ஏற்றுக் கொள்கிறது.

பாரதி வாணி பூசைக்கு ஒரு கவிதை பாடினான். அதில்,

தேடுகல்வியிலாத தொரூரைத்
தீயினுக் கிரையாக்கி மடுத்தல் கேடு தீர்க்கும்

என்று கோபத்தோடு பாடித் தீர்த்தார். அப்படி கோபமாக பாடும் பொழுது கூட ஒன்றை தெளிவாகச் சொன்னார். தேடுகல்வி, அதாவது விஞ்ஞானத்தை தேடும் கல்வி, சமூகப் பொறுப்பை தேடும் கல்வி, பொருளாதார ஞானத்தை தேடும் கல்வி, பண்பாட்டை தேடும் கல்வி என்று தனித்தனியாக சொல்லாமல் இரண்டே சொற்களில் அறிவுக் கடலை புகுத்தி கவித்துமிக்க சொற்களாக தேடுகல்வி என்றார். அந்த தேடுகல்வியை உத்தரவாதம் செய்யத்தானே 1964ம் ஆண்டு உருவான பெற்றோர் ஆசிரியர் கழக நோக்கங்கள் கூறுகின்றன. ஆனால் நம்கண் முன்னே நடப்பதென்ன? கேடு தீர்க்கும் புகலிடமாக வேண்டிய கல்விச்சாலை கேடு விளைவிக்கும் இடமாகிவிட்டதே!

அரசின் நிதி ஒதுக்கா கொடுமையும், பெற்றோர் ஆசிரியர் கழகங்களின் ஈரமில்லா நெஞ்சங்களும் தேடுகல்வியை நாடி வந்த இளம் தளிர்களையல்லவா கரிக்கட்டையாக ஆக்கி விட்டன.

இதற்கு தீர்வு உண்டா? நீதி உண்டா பாரதிதாசன் கூறியது போல்,

கல்விநல்கா கசடறை தூக்கிலே ஏற்ற

ஆங்கோர் தூக்குமரம் உண்டாக்கலாமா?

கல்வியை நாடிவந்தவர்களை கருக்கிய கொடுமையாளர்களையும், கல்வி நல்கா ஆட்சியாளர்களையும் தூக்கிலே போட வேண்டுமென்றால் தூக்குமரக் காடல்லாவா கேட்க வேண்டி வரும். நாம் கேட்பது தூக்குமரமல்ல!

மத்திய அரசே,

குறைந்தபட்ச திட்டத்தில் கண்டபடி தேச மொத்த வருவாயில் 6 சதம் கல்விக்கு நிதி ஒதுக்கி, மாநிலங்களுக்கு வழங்கிடுக.

மாநில அரசே,

1.கல்வியை கடைச் சரக்காக்கிடும் எந்த முயற்சிலும் எந்த முயற்சியிலும் அரசு ஈடுபடாது என்று கொள்கை அறிவிப்பு செய்திடுக.

2.1964ம் ஆண்டு எந்த நோக்கத்திற்காக பெற்றோர் ஆசிரியர் கழகம் உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை நிறைவேற்றிடும் அமைப்பாக மாற்றிட நடவடிக்கை எடுத்திடுக. அந்த அமைப்பை கசடர்களின் கையிலிருந்து மீட்டு உண்மையான, பெற்றோர் ஆசிரியர் பங்கு பெறும் அமைப்பிடம் ஒப்படைத்திடுக.

3.மாநில அரசு உருவாக்கிய கல்விக் கட்டணங்கள், விதிகள், நியதிகளை கறாராக நடைமுறைப்படுத்திட ஏற்பாடு செய்திடுக!

4.வகுப்பறைகள் விதிகளில் குறிப்பிட்டபடி 7.3 மீட்டர் X 7.6 மீட்டர் அகல நீளத்தில் வகுப்பறைகள், சாய்மானம் உள்ள பெஞ்சுகள், விதியில் கண்டபடி சிறுநீர் கழிப்பறைகளையும் அமைத்திட ஏற்பாடு செய்யுங்கள். குடிநீர் வழங்கும் ஏற்பாட்டையும் அரசு எழுதி வைத்த விதிகளின்படி செய்யுங்கள்.

5.மொத்த கொள்கை அறிவிப்பாகவும், சட்ட வடிவத்திலும் இதுவரை அரசு கூறியவைகளை நடைமுறைப்படுத்துங்கள். நாங்கள் கேட்பது தூக்குமரங்கள் அல்ல. அரசுகளே உருவாக்கிய நியதிகளை அமுல்படுத்துங்கள்

பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள்!

சட்டத்தில் இருப்பதையும், கொள்கைகளாக அறிவித்ததையும் அரசுகள் நிறைவேற்றுகிறதா என்பதை கூர்ந்துகவனியுங்கள். நீங்கள் கவனிக்கிறீர்கள் என்று அவர்கள் உணர்ந்தால்தான் கெட்ட ஆட்சியாளர்கள்பயப்படுவார்கள். நல்ல ஆட்சியாளர்கள் துணிவு பெறுவார்கள். மொத்தத்தில் தேடுகல்வியை நாடி அனைவரும்செல்வர் .

(திரு வே.மீனாட்சி சுந்தரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயற்குழுஉறுப்பினராவார்)

இவரது முந்தைய படைப்பு:

1.சென்னை குடிநீரும் பட்ஜெட்டும்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X