For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடலில் ஒரு துளி

By Staff
Google Oneindia Tamil News

2. மறக்கமுடியாத சூரியோதயம்

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கன்னியாகுமரியின் பக்கமாக பயணம் சென்று திரும்பி வந்த நண்பர் சொத்தைவிளை என்னும் இடத்தில் உள்ள கடற்கரையைப்பற்றிமிகவும் உற்சாகமுடன் சொன்னார். அந்த இடத்தில் தான் கண்ட சூரியோதயம் ஒரு கவிதையைப் படிப்பதைப்போல இருந்ததாகவும் குறிப்பிட்டார். அப்போதேமனத்தில் ஒரு திட்டம் விழுந்துவிட்டது. நாகர்கோயில், திருவனந்தபுரம், கன்னியாகுமரி என என்றைக்குக் கிளம்பினாலும் அந்த சொத்தைவிளைக்கடற்கரையில் காலார நடந்துவிட்டுத்தான் திரும்பவேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டேன். பல நேரங்களில் என் அதிகாலை நடையை சொத்தைவிளைக்கடற்கரை நடையாகக் கற்பனைசெய்து மகிழ்ந்ததுண்டு. அந்த அழகான மணல்விரிந்த கடற்கரையும் தென்னந்தோப்பும் இனிய காலையும் சின்னச்சின்னசித்திரங்களாக மலர்ந்துமலர்ந்து நெஞ்சை நிரப்பிவிடும்.

Sunrise
பல தருணங்களில் மதுரைவரைக்கும் செல்லநேர்ந்த பயணங்களை ஏதோ சின்னச்சின்னக் காரணங்களால் சொத்தைவிளைவரை நீட்டிக்க இயலாமல் போய்விட்டது.ஒவ்வோர் ஆண்டும் என் குறிப்புப் புத்தகத்தை மாற்றும்போது, மேற்கொள்ளவேண்டிய பயணங்களில் முதலாவது இடமாக அந்த ஊரின் பெயர் நிரந்தரமாகஇடம்பிடித்தபடி இருந்தது. ஒருமுறை அந்தப் பட்டியலை தற்செயலாகப் பார்க்க நேர்ந்த என் மகன் "என்னப்பா இது, சின்னப்புள்ளைங்க மாதிரி ஒன்னு ரெண்டுமூணுன்னு நெம்பர் போட்டு ஊரு பேருங்கள எழுதி வச்சிருக்கீங்க" என்று சிரித்துவிட்டான்.

அவன் சிரித்து முடியட்டும் என்று அவன் முகத்தையே பேசாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். அதற்குள் அவனது அட்டகாசச் சிரிப்பைக் கேட்டு அமுதாவும்"என்ன? என்ன?" என்று கேள்வியோடும் நமுட்டுச் சிரிப்போடும் ஓடிவந்துவிட்டாள். ஊரின் பெயர்களைக்கொண்ட அந்தப் பட்டியலை அவளிடமும் அவன்காட்டிவிட்டான். "என்னங்க இது உப்பு புளி மொளகான்னு பலசரக்கு கடை லிஸ்ட் மாதிரி ஊரு பேருங்களை எழுதி வச்சிருக்கீங்க? இதவேற வேல மெனக்கிட்டுவருஷாவருஷம் ஒரு டைரியிலேருந்து இன்னொரு டைரிக்கு மாத்திமாத்தி எழுதுவிங்களா?" என்று ஆச்சரியத்தை அடக்க இயலாமல் கேட்டாள்.

"பள்ளிக்கூடத்துல ஒரு கேள்விக்கு சரியா பதில் எழுதலன்னா மேடம் என்ன செய்வாங்க?" என்று என்னைக் கேள்வி கேட்ட மகனிடம் நான் ஒருகேள்வியை முன்வைத்தேன்.

"இம்பொஸிஷன் எழுதச் சொல்வாங்க?"

"அப்படின்னா?"

"எழுதத் தெரியாத ஒவ்வொரு பதிலயும் அஞ்சஞ்சி தரம் எழுத வைப்பாங்க. அதான் இம்பொஸிஷன்."

"எதுக்கு அப்படி எழுதணும்?"

"எழுத எழுத தெரியாத பதில்கூட தெரிஞ்சதாயிடும்."

"இந்த ஊருங்க லிஸ்ட் கூட ஒருவகையில எனக்கு நானே கொடுத்துக்கற இம்போஸிஷன்தான்டா." நான் அவனைப் பார்த்து மெதுவாகப் புன்னகைத்தேன்.

"அப்படின்னா?"

"ஒரு வருஷத்துக்குள்ள இந்த இந்த வேலைங்களையெல்லாம் செய்யணும்னு திட்டம் போடறன். ஒரு சில திட்டங்களை செய்ய முடியுது. ஒருசில திட்டங்களை செய்ய முடியலை.செய்ய முடியாத திட்டங்களை வருஷ முடிவுல அடுத்த வருஷத்துலயாவது செஞ்சிடணும்ன்னு தீர்மானிச்சி பட்டியல் போட்டு வச்சிருக்கேன். அதைப்பாக்கும்போதெல்லாம் சீக்கிரம் செஞ்சிடணும்னு ஒரு வேகம் வரும். ஞாபகத்திலேருந்து நழுவிடக் கூடாதில்லையா? அதுக்குத்தான் அந்தப் பட்டியல்."

என் பட்டியலுக்கான ஆதார நோக்கத்தை அறிந்து கொண்டதில் அவன் முகம் திருப்தியைப் புலப்படுத்தியது. மறுபடியும் அந்தப் பட்டியலைப் பார்த்துக்கொண்டான்.

"இது என்னப்பா எகிப்துலாம் எழுதியிருக்கீங்க?"

"அங்கதானடா பிரமிட் இருக்குது."

"சீனா?"

"பெருஞ்சுவர் இருக்கிற இடமாச்சே"

"நயாகரா?"

"உலகத்துலயே பெரிய நீர்வீழ்ச்சி."

"ஐயோ, அதெல்லாம் தெரியுதுப்பா, அந்த ஊரு பேருங்களையெல்லாம் எதுக்கு இந்த நோட்டுல எழுதிவச்சிருக்கிங்க?"

"அதெல்லாம் பாக்கவேண்டிய இடங்கடா."

"அப்பா, விளையாடறதுக்கும் ஒரு அளவு இருக்கு. அதெல்லாம் எந்த நாட்டுல இருக்குது? என்னமோ சென்னை, பாண்டிச்சேரிக்கு போய்வரமாதிரி திட்டம்போடறீங்க?"

"உலகத்துல எந்த மூலையில இருந்தாலும் சரிடா, ஒருநாள் அதை போயி பாத்துடணும்."

என் வார்த்தைகளில் தெரிந்த உறுதி அவனை மேற்கொண்டு பேசவிடாமல் செய்தது. தொடர்ந்து அந்தப் பட்டியலைப் பார்த்தான்.

"இது என்ன ரஷ்யா?"

"அதுதாண்டா, நம்ம அன்னா கரினினா தல்ஸ்தோய் பிறந்த இடம்"

மேற்கொண்டு அவன் அப்பட்டியலைப் பார்க்காமல் திருப்பிக்கொடுத்தான். "முதல்ல நெம்பர் ஒன்னுன்னு பேர்போட்டு சொத்தைவிளையோ அத்தைவிளையோஎன்னமோ எழுதியிருக்கிங்களே, அங்க போயி திரும்பற வேலைய பாருங்க. அப்புறமா அமெரிக்கா, ரஷ்யா, எகிப்துன்னு பறக்கலாம்."

அவன் சிரிக்கவில்லை. ஆனால் அவன் உதடுகளில் ஒரு பெரிய சிரிப்பு ஒளிந்திருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

"ஏன்டா, என்னால அங்கலாம் போகமுடியாதுன்னு நெனைச்சிகிட்டியா?"

"மொதல்ல பாஸ்போர்ட் எடுங்கப்பா. போவறதபத்தி அப்பறமா யோசிக்கலாம்."

"என்னால முடியாதுன்னு ஒனக்கு தோணுதா?"

"அப்பா, மொதல்ல சொத்தைவிளைக்கு போவற வழிய பாருங்க. மத்ததை அப்பறமா பாத்துக்கலாம்."

சொல்லிக்கொண்டே கிரிக்கெட் பேட்டையும் பந்தையும் எடுத்துக்கொண்டு அவசரமாக வெளியேறிவிட்டான். அந்த நடை என் ஆவலை மேலும்அதிகப்படுத்தியது. வந்த வேகத்துக்கு எல்லா வேலைகளையும் ஒருகணம் ஒதுக்கிவைத்துவிட்டு வண்டியேறிவிடவேண்டும் என்று வேகம் வந்தது. போகவும்வரவும் எப்படியும் மூன்று நாளாவது விடுப்பிருந்தால்தான் முடியும். ஏராளமாக விடுப்பிருந்தாலும் எடுக்கமுடியாத சூழல். அலுவகத்தில் வேலைச்சுமை.நாள்தோறும் ஏதாவது புதிய புதிய பிராஜெக்டுகள். அறிக்கைகள். செலவுக்கணக்கு. பவர்பாயின்ட் பிரஸன்டேஷன்கள். மாதாந்திர கூட்டங்கள்.குறிப்புகள். கடிதங்கள். எண்ணங்களைச் செயல்படுத்தமுடியாத அளவுக்கு எல்லாமே பாரமாக அழுத்திக்கொண்டிருந்தன.

ஒவ்வொரு மாதமும் திட்டமிடுவதும் தள்ளிப்போவதுமாகவே இருந்தது. எதிர்பாராத விதமாக கிறிஸ்துமஸை ஒட்டி இரண்டு நாள்கள் விடுப்பு அமைந்ததும்நானும் நண்பரொருவரும் கிளம்பிவிட்டோம். உண்மையாகவே பிரயாணச்சீட்டு வாங்கியாகிவிட்டது என்று நண்பர் தொலைபேசியில் சொன்னபோதுஅமுதாவால் நம்பமுடியவே இல்லை. "நெஜமாவே தனியா கெளம்பிட்டிங்களா?" என்று கேட்டாள். "ஆமாம், இந்த தரம் நான் போயி தனியா பாத்துட்டுவரேன். அடுத்த வருஷம் உங்களயெல்லாம் அழைச்சிகிட்டு போறேன்" என்றேன்.

இரவுப் பயணம். ஓடிக்கொண்டிருந்த பேருந்தின் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்தபடி தூக்கமின்றி உட்கார்ந்திருந்தேன். வழக்கமாக எந்த ஊருக்குக்கிளம்பினாலும் குடும்பத்தோடு கிளம்புவதுதான் வழக்கம். அமுதாவும் மயனும் இல்லாமல் நான் பார்த்த இடங்கள் குறைவு. அவர்களும் அருகில்இருந்தால்தான் மனம் நிறைந்தமாதிரி இருக்கும். பத்தாவது வகுப்பைத் தாண்டிய பிறகு மயனுக்கு தினமும் ஏதாவது தேர்வுகள் அல்லது தனிப்பாடப் பயிற்சிஎன்று ஒன்றுமாற்றி ஒன்றாக வேலை முளைத்துவிடுவதால் சமீபத்திய பயணங்களில் அவர்களை இணைத்துக்கொள்ள இயலவில்லை.

வெளியே முழுநிலா. மரங்கள்மீதும் தார்ச்சாலைமீதும் குன்றுகள்மீதும் அதன் அமுதம் பாய்ந்தபடி இருந்தது. குளுமையான காற்று. கூடவே ஓடிவரும் நிலவின்அழகில் மனம் பறிகொடுத்தபடி இருக்கையில் சாய்ந்திருந்தேன். எப்போது உறங்கினேன் என்றே தெரியவில்லை. விடிந்து நாகர்கோயில் சேர்ந்ததும்தான்விழிப்பு வந்தது. வெளியே நல்ல வெளிச்சம். எங்கும் இளம்தூறல். ஜன்னலைத் திறந்தபோது சாரலடித்தது.

நானும் நண்பரும் இறங்கி விடுதியொன்றில் அறையெடுத்து தங்கினோம். அன்று பகல்முழுக்க எங்களுக்கு வேலை இருந்தது. சூரிய அஸ்தமனத்தையும்பெளர்ணமிநிலவின் எழுச்சியையும் காண சாயங்காலமாக கன்னியாகுமரியின் பக்கம் சென்றுவரலாம் என்று திட்டமிட்டிருந்தாலும் முடியவில்லை. இரவு விடுதிக்குத்திரும்பும்போதே வாடகை வாகனத்துக்குப் பேசி முடிவுசெய்தோம். காலையில் ஐந்தே காலுக்கெல்லாம் எழுந்து கால்மணிநேரத்துக்கெல்லாம்தயாராகிவிடவேண்டும் என்றும் ஐந்தரைக்கு வாகனம் வந்துவிடவேண்டும் என்றும் பேசிக்கொண்டோம்.

இரவெல்லாம் ஒரே சிந்தனை. பல நாள்களாகப் பார்க்க ஆசைப்பட்டு தள்ளித்தள்ளிப்போன கடற்கரைக்கு வெகு அருகிலேயே நான் உறங்குகிறேன் என்பதுஒருவித பரவசத்தைக் கொடுத்தது. திசையும் வழியும் அறிந்தால் ஒருமுறை இரவிலேகூட சென்று பார்த்துவரலாம் என்று ஆவலெழுந்தது. கோவாவிலும்எர்ணாகுளத்திலும் மட்டுமே இரவு நெடுநேரம்வரை கடலைப் பார்த்தபடி உட்கார்ந்திருக்கிறோம். இளமையில் இரவு பன்னிரண்டுமணிக்கு வேலை முடிந்துகாலார நடந்து புதுவைக் கடலைப் பார்த்த நாள்கள் நினைவில் எழுந்தன. இப்போதெல்லாம் இரவு வேளைகளில் எந்தக் கடலின் அருகிலும் யாரையும்அனுமதிப்பதில்லை என்று நண்பர்கள் சொன்னதையும் நினைத்துக்கொண்டேன். உறக்கம் வராமல் பெட்டிக்குள் வைத்திருந்த புத்தகம் ஒன்றை எடுத்துப் புரட்டத்தொடங்கினேன். ஒருமணிநேரம் படித்தபிறகு கண்கள் சோர்வடைய ஆரம்பித்தன. பிறகுதான் தூங்கினேன்.

குறிப்பிட்ட நேரத்தில் காலையில் எழுந்து அரைமணிநேரத்தில் எல்லா வேலைகளையும் முடித்துக்கொண்டு புதுஉடையுடன் வெளியே வந்தோம். ஏற்கனவேசொல்லிவைத்த வாகனம் வரவில்லை. பத்து நிமிடம் பார்த்தபிறகு வாகன உரிமையாளருக்கு செல்லிடப்பேசியில் தொடர்புகொண்டோம். வாகனம்கிளம்பிவிட்டதாகவும் ஓட்டுநரின் பெயர் பெருமாள் என்றும் சொல்லி வாகனத்தின் எண்ணையும் கொடுத்தார் அவர். அருகிலிருந்த தேநீர்க்கடைக்குச் சென்றுதேநீர் பருகிவிட்டுத் திரும்பினோம். விடுதி வாசலில் வாகனம் வந்து நிற்பதை தொலைவிலிருந்தே பார்த்தோம்.

அறிமுகப்படுத்திக்கொண்டு வாகனத்துக்குள் ஏறி அமர்ந்தோம். முதலில் சொத்தைவிளைக்குச் செல்லுமாறு சொன்னோம். என் மூன்றாண்டுக் கனவுநிறைவேறும் பரவசத்தில் நான் மூழ்கியிருந்தேன். பிரதான சாலையிலிருந்து விலகி சின்னச்சின்ன கிராமசாலை வழியாக ஓடிய வாகனம் சிறிது நேரத்தில் பெரியதென்னந்தோப்புக்கிடையே இருந்த சின்னச்சாலை வழியாக ஓடத் தொடங்கியது. பாதை சரிதான் என்பதை அங்கங்கே இருந்த பெயர்ப்பலகைகள் காட்டின. சிலநிமிடங்களில் வாகனம் கடற்கரையை அடைந்தது.

மிகப்பெரிய ஓவியத்தைப்போல அந்தக் கடற்கரை காணப்பட்டது. யாருமற்ற கடற்கரை. நானும் நண்பரும் மட்டுமே இருந்தோம். ஏதோ ஒருநடனத்துக்கான பயிற்சியைப்போல அலைகள் ஓயாமல் நெளிந்தபடி இருந்தன. நீண்ட மணற்பரப்பையும் தொலைவில் சுருண்டுசுருண்டு ஒடுங்கிய அலைகளையும்பார்த்துக்கொண்டே இருக்கலாம்போலத் தோன்றியது. இந்நேரத்துக்கு என் மகன் பத்துக் குட்டிக்கரணம் போட்டு முடித்திருப்பான் என்றுநினைத்துக்கொண்டேன்.

சூரியன் உதிக்கவிருக்கும் திசையைப் பார்த்து நாங்கள் நடக்கத் தொடங்கினோம். மணலில் கால்கள் புதைய நடப்பதும் ஒருவிதமான பெளடரை மிதிப்பதைப்போன்றஉணர்வை கரைமணல் கொடுப்பதும் விசித்திரமாக இருந்தது. வானமும் கடலும் இணையும் விளிம்பில் உருவான நிறக்கலவையின் வசீகரத்தில் மனம்பறிகொடுத்து அப்படியே நின்றுவிட்டேன். கடலின் மேற்பரப்பின் நிறம் மெதுமெதுவாக மாறத் தொடங்கியது. குழந்தைகள் துள்ளித்துள்ளிஓடிவருவதைப்போல குறுக்கும் நெடுக்குமாக எண்ணற்ற அலைகள் கைவீசித் தாவின. எதைநோக்கி எங்கள் கவனத்தைக் குவிப்பது என்று ஒருகணம்தடுமாற்றமாக இருந்தது.

ஆனந்தத்தில் எங்கள் மனம் தளும்பியது. கடலின் அடிவயிற்றிலிருந்து சூரிய உருண்டை புறப்பட்டுவருவதை பரவசத்துடன் பார்த்தோம். வெகுநேரமாகதேடிக்கொண்டிருந்த பொருளை மறைத்துவைத்திருக்கும் குழந்தை ஒருவித குதூகலத்துடன் மெதுமெதுவாக பையிலிருந்து வெளியே எடுத்துக் காட்டுவதைப்போலசூரியனை கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தி கடலின் மடியிலிருந்து தூக்கிக் காட்டுவதைப்போல இருந்தது. கடவுளே. அது ஒரு செம்பழம். தங்கத்தட்டு.நெருப்புக்குடம். செம்பருத்திப் பூக்களால் நிறைந்த கூடை. அந்தப் பக்கமாக முகம் திரும்பி நிற்கும் பெண்ணின் பூக்கொண்டை. தூளியிலிருந்து முகத்தைமட்டும் நீட்டிஎட்டிப் பார்க்கும் பிஞ்சுக்குழந்தை. நெற்றிக் குங்குமம். தேவமலர். செஞ்சாந்து பூசிய பாதம். ஒரு கணத்தில் மனம் எதைஎதையோ அடுக்கிப் பார்த்தது.எல்லாமே அந்த உண்மையான சூரியனுக்குப் பொருந்துவதைப்போலவும் பொருந்தாததைப்போலவும் இருந்தது.

பைத்தியம் பிடித்ததைப்போல அந்த சூரியனையே விடாமல் பார்த்துக்கொண்டிருந்தோம். எந்த மேகத்தின் தடையும் இல்லை. பளபளவென்று ஒளியைச் சிந்தியபடிவானத்தில் அடியெடுத்துவைத்தது சூரியன். அதன் செந்நிறத்தில் ரத்தக்குழம்பாக மாறிய கடல் ஒரு சில நிமிடங்களில் மீண்டும் பழைய நிறத்தை அடைந்தது.வெண்சக்கரமாக உருமாறிய சூரியன் வானவீதியில் வலம்வரத் தொடங்கியது. அதன் ஒளிக்கதிர் மேனியில் பட்டபோது சிலிர்த்தது. வேரிமயிர் பொங்கவெப்பாடும் பேர்ந்துதறி மூரிநிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப் போதருமாப்போலே என்று ஆண்டாளைப்போல பித்தேறிப் பாடவேண்டும்போல மனம் துடித்தது.அந்த உதயம் மிகப்பெரிய எழுச்சியை எனக்குள் ஊட்டியது. இதைப்பற்றிச் சொன்ன நண்பரை நன்றியுடன் ஒருகணம் நினைத்தக்கொண்டேன்.

கரைமணலில் சுற்றிஅலைந்தது போதாதென்று அலைகளை மிதித்தபடி வெகுதுநூரம் நடந்தோம். வந்துவந்து செல்லும் அலைகள் முழங்கால்வரை எம்பிஒருகணம் எங்களைத் தடுமாறவைத்துவிட்டுத் திரும்புவதைக் காண சந்தோஷமாக இருந்தது. கிட்டத்தட்ட ஏழேமுக்கால்வரை நானும் நண்பரும் பேசியபடிஅந்தக் கரையில் தனியாகவே திரிந்தோம்.

பசிவேளை நெருங்கியது. குளித்து சிற்றுண்டி முடிந்தபிறகு மறுபடியும் வரலாம் என்று பேசியபடி வாகனம் நின்றிருந்த தார்ச்சாலைக்குத் திரும்பினோம். அங்கே எழுதிவைக்கப்பட்டிருந்த அறிவிப்புப்பலகையில் கன்னியாகுமரியைச் சுற்றி உள்ள ஆறு கடற்கரைகளின் விவரங்கள் எழுதப்பட்டிருந்தன. வாகனத்தைஅமர்த்தியிருந்ததால் குளித்துமுடித்த பிறகு வெகுதொலைவுள்ள கடற்கரைக்கு முதலில் சென்றுவிட்டு பிறகு அங்கிருந்து ஒவ்வொன்றாகப் பார்த்தபடி திரும்பிஇறுதியாக கன்னியாகுமரியை அடைவது என்று திட்டமிட்டுக்கொண்டோம்.

குளிக்கும்போதும் மனத்துக்குள் அந்தச் சூரிய உதயக்காட்சியே மீண்டும் மீண்டும் எழுந்து கிளர்ச்சியூட்டியபடி இருந்தது. சிற்றுண்டி சாப்பிட விடுதியை அடைந்தோம்.விடுதியில் எங்களோடு தங்கியிருந்த இன்னொரு குடும்ப உறுப்பினர்கள் எங்கள் மேசைக்கு எதிர்ப்புறம் அமர வந்தார்கள். வயதான தம்பதியினர் இருவர்.அவருடைய மகள். இரண்டு பேரக் குழந்தைகள். அங்கே வந்தபின்னர் நண்பரான புகைப்படக் கலைஞர் ஒருவர். முதல் பார்வையிலேயே எங்களைக்கவர்ந்ததால் தயக்கமின்றி உரையாடத் தொடங்கிவிட்டேன். அவர்களிடமும் அந்த சொத்தைவிளை கடற்கரையைப்பற்றி சொன்னேன். அவர் பத்துஆண்டுகளுக்கு முன்னர் அந்த ஊர் வங்கிக்கிளையிலேயே வேலை செய்ததாகவும் அந்த சூரிய உதயத்தை தினம் தினமும் பார்த்திருப்பதாகவும் சொன்னார்.கொல்லன் தெருவிலேயே ஊசிவிற்பதா என்று அமைதியானேன். அவர்களும் கன்னியாகுமரியைப் பார்க்க வாடகைக்கு வண்டி அமர்த்தியிருந்தார்கள். சிற்றுண்டிமுடிந்ததும் நாங்கள் எங்களுடைய வண்டியில் அமர்ந்து பயணத்தைத் தொடங்கினோம். எங்களிடம் விடைபெற்றுக்கொண்டு அவர்கள் வேறொரு திசையில்கிளம்பினார்கள்.

திட்டப்படி வெகுதொலைவிலிருந்த முட்டம் கடற்கரையை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது வாகனம். அதன் பெயரை நினைத்ததுமே அதன் எழிலைப்பலவிதமாக படம்பிடித்துக் காட்டிய பாரதிராஜாவின் திரைப்படங்கள் நினைவில் மோதின. அந்தக் காட்சிகளை உள்ளூர அசைபோட்டுக்கொண்டிருந்தநேரத்தில் எங்கள் வாகனம் கப்பற்படைக் காவலர் ஒருவரால் தடுக்கப்பட்டது. வாகனத்திலிருந்து வெளியே இறங்கினேன்.

"எங்க போறீங்க?"

"சும்மா, கடற்கரைய பாக்கத்தான்."

"போங்க. ஆனா கரைக்கு பக்கமா போவாதீங்க. தொலைவாவே நின்னு பாத்துட்டு திரும்பிடுங்க."

"என்ன விஷயம்?"

"தெரியலைங்க சார். அலைவேகம் அதிகமா இருக்கறதா செய்தி வந்திருக்குது."

அவருக்குச் சரியாக சொல்லத் தெரியவில்லை. அவருக்குக் கிடைத்த செய்தி அவ்வளவுதான் என்று மீண்டும் மீண்டும் சொன்னார். நான் ஏமாற்றத்துடன் திரும்பிப்பார்த்தேன். கிட்டத்தட்ட கடலை நாங்கள் நெருங்கிவிட்டோம். தொலைவில் மிக உயரமாக கடலலைகள் எழுவதை அங்கிருந்தே பார்த்தேன். இவ்வளவுஅருகில் வந்தபிறகு பார்க்காமல் திரும்பும் ஏமாற்றத்தை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அதே சமயத்தில் ஒருவர் செல்லவேண்டாம் என்றுஎச்சரித்து தடுக்கும் நிலையில் பயணத்தைத் தொடரவும் விருப்பமில்லை.

"இந்த கடற்கரை மட்டும்தான் இப்படியா? எல்லா இடங்களும் இப்படித்தானா?"

"எல்லா இடங்கள்ளயும் எச்சரிக்கை கொடுத்திருக்காங்க சார். எங்கேயும் போவ முடியாதுன்னுதான் நெனைக்கறேன். போறதுன்னா போங்க சார். ஆனாஜாக்கிரதையா இருங்க. தண்ணிகிட்டமட்டும் போயிடாதீங்க."

ஒரு பெருமூச்சுதான் என் பதிலாக இருந்தது. "கடல் பக்கமே வேண்டாம், திற்பரப்புக்குச் செல்லலாம்" என்று நண்பர் ஆலோசனை சொன்னார். நான்ஏற்றுக்கொண்டேன். வாகனம் திரும்பி தக்கலை வழியாக திற்பரப்புக்கு ஓடியது.

அங்கங்கே பலர் கும்பல் கும்பலாக நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் யாருக்கும் உண்மை தெரியவில்லை. கடல் பொங்கிவிட்டது என்றார்கள்.பனைமரம் உயரத்துக்கு அலை வந்து கரையில் நின்றவர்களை இழுத்துச் சென்றுவிட்டது என்றார்கள். நாகப்பட்டணத்திலும் வேளாங்கண்ணியிலும் கடுமையானசேதம் என்றார்கள். எதையும் நம்பமுடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

மாலைதான் நாங்கள் இருப்பிடத்துக்குத் திரும்பினோம். அழிவின் விவரங்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரியத் தொடங்கின. நாங்கள் காலையில் சூரியோதயம்பார்த்த சொத்தைவிளையில் இருநுநூற்றுக்கும் மேற்பட்டவர்களையும் வாகனங்களையும் கடல் கொண்டு சென்றுவிட்டது என்றார்கள். என் கால்கள் நடுங்கத்தொடங்கின. நாங்கள் புறப்பட்டபோது யாருமே இல்லாத அக்கடற்கரையில் அரைமணிநேர அவகாசத்தில் இருநுநூறு பேர்கள் கூடிவிட்டிருக்கிறார்களா?என் மனம் படபடக்கத் தொடங்கியது. அமைதியிழந்து ஒருவித தவிப்பிலும் குற்ற உணர்விலும் குன்றினேன். சாலையில் நடக்கவே முடியவில்லை. தொடர்ந்துபற்பல பிணவண்டிகள். கன்னியாகுமரியில் கரையோரம் நின்றிருந்த ஆயிரம் பேர்களையும் கடல் விழுங்கிவிட்டது. பெரும்பாலும் பெண்கள். குழந்தைகள்.

அன்று பக்கத்தில் சுசீந்திரம் திருவிழா. சுசீந்திரம் தேர் காணச் செல்பவர்கள் கன்னியாகுமரி பகவதியைத் தரிசனம் செய்துவிட்டு திரும்பவேண்டும் என்பதுஐதிகம். அந்தப் பழக்கத்தில் கடற்கரைக்குச் சென்றவர்களில் பெரும்பாலோர் உள்ளூர்க்காரர்கள். முக்கால்பங்குக்கும் மேல் பிணமாகிப்போய்விட்டார்கள். ஆட்டோ ரிக்ஷாக்களிலும் சின்னச் சின்ன டெம்போக்களிலும் அந்தப் பிணங்களை வைத்துக்கொண்டு குமுறிக்குமுறி அழுதபடிஓடிக்கொண்டிருந்தவர்களைப் பார்க்கவே முடியவில்லை. அரைமணிநேர நடையில் கிட்டத்தட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட பிணவண்டிகளைப் பார்த்தேன். எனக்குமயக்கம் வரும்போல இருந்தது. தொடர்ந்து நடக்கவும் முடியவில்லை. அறைக்குத் திரும்பிவந்துவிட்டேன். ஒரே ஒரு கணம் தொலைக்காட்சியைஒளிரவிட்டேன்.

நாகை தொடங்கி கன்னியாகுமரிவரை மீட்டெடுக்கப்பட்ட பிணங்களின் வரிசையைக் காட்டிக்கொண்டிருந்தார்கள். வீசியெறியப்பட்ட பொம்மைகள்போலதாறுமாறாகக் கிடந்த குழந்தைகளின் பிணங்கள் மனத்தைப் பிசைந்தன. பதற்றம் பெருகியபடி இருந்தது. அறையில் தனியாக இருக்க அச்சமாக இருந்தது.அறையை வேகமாக காலிசெய்துவிட்டு நண்பருடன் சேர்ந்துகொண்டேன். கிட்டத்தட்ட அவரும் என் மனநிலையிலேயே இருந்தார். ஊரைவிட்டுக் கிளம்பவேண்டியநேரமும் நெருங்கியபடி இருந்தது. பெட்டிகளை எடுத்துக்கொண்டு வாகனத்துக்குத் திரும்பினோம். காலையில் ஒரே மேசையில் எங்களோடு உட்கார்ந்து சிற்றுண்டிசாப்பிட்ட புகைப்படக் கலைஞரைப் பார்த்தோம். அவர் கையில் கட்டு. கண்களில் மிரட்சி. கட்டுப்பாட்டைமீறி அவர் அழுதபடியிருந்தார்.

அருகில் நெருங்கி என்னவென்று விசாரித்தோம். அவர் சொன்ன விஷயம் எங்களை நடுநடுங்கவைத்தது. சொத்தைவிளைக் கடற்கரையில் படமெடுப்பதற்காகஎல்லாரும் நின்றிருக்கிறார்கள். அந்தக் கணத்தில்தான் அந்த ராட்சச அலை எழுந்திருக்கிறது. ஓடுஓடு என்று குரல் கொடுத்தபடி எல்லாரும் கரையைநோக்கி ஓடிவந்திருக்கிறார்கள். அவர்களைவிட வேகமாக வந்த அலை எல்லாரையும் சுருட்டி வாய்க்குள் போட்டுக்கொண்டது. கிட்டத்தட்ட இரண்டுநிமிடங்களுக்கு புரட்டிப் புரட்டித் தள்ளிய அலை எங்கோ ஒரு மரத்தடியில் அவரை ஒதுக்கிவிட்டுத் திரும்பிவிட்டது. விழித்துப் பார்த்தபோது கரையில் யாருமேஇல்லை. கிட்டத்தட்ட இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் நின்றிருந்த கரை ஒரே கணத்தில் கழுவிவிட்டதைப்போல மாறிவிட்டது. நண்பரால் நிமிர்ந்துகூடபார்க்க இயலவில்லை.

நண்பர் குடும்பம்? நான் அவசரமாகக் கேட்டேன்.

"அந்த பெரியம்மா கிடைத்துவிட்டார்கள். பேரனும் கிடைத்துவிட்டான். பெரியவர், அவர் மகள், பேத்தி பற்றி தகவல் தெரியவில்லை."

"அப்படியென்றால்?"

"பெரும்பாலும் மூழ்கித்தான் போயிருக்கவேண்டும்."

என் பலமெல்லாம் குன்றி சக்கையாக மாறியதைப்போல இருந்தது. அழுகை உள்ளூரப் பொங்கிவந்தது. சூரியோதயம் காட்டி எங்களை மகிழ்ச்சிவெள்ளத்தில் ஆழ்த்திய சொத்தைவிளைக் கடற்கரைக்கு இப்படி மக்களைக் காவு வாங்கும் வேசமும் வரும் என்பதை நம்பவே முடியவில்லை. பேசத்தோன்றாமல் பித்துப்பிடித்தபடி அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

"நீங்கள் போன வண்டி, டிரைவர்?"

"எல்லாமே அலையில போச்சிங்க."

மனபாரம் தாங்க இயலவில்லை. அவருக்கு தைரியம் சொல்லும் வார்த்தைகூட நெஞ்சிலிருந்து எழவில்லை. தோளில் தட்டி ஆறுதல் சொல்லிவிட்டு வண்டிக்குத்திரும்பினோம். அவர் எங்களைப் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டார். வாடகைத்தொகையைக் கணக்குப் பார்த்து கொடுத்தார் நண்பர்.

The scene in Kanyakumari
"சார், முட்டத்தல நம்ம தடுத்தப்போ கடல்பக்கமே வேணாம், வேற பக்கமா போவலாம்ன்னு நீங்க எடுத்த முடிவாலதான் நாம பொழைச்சோம்.இல்லைன்னா எல்லாருக்குமே ஜலசமாதிதான். "

வாகனஓட்டி கையெடுத்து கும்பிட்டார். பெங்களூர் வண்டியைப்பற்றி விசாரித்தேன். சாலைகள் எதுவும் சரியில்லை என்றும் தாமதமாகவாவது வந்துவிடும்என்றும் சொல்லப்பட்டது. சோர்வோடு ஒரு கட்டையில் உட்கார்ந்தோம். மனம் அன்று காலை பார்த்த சூரியோதயத்தை மறுபடியும் நினைத்துக்கொண்டது.பளீரென முகம் காட்டிய சூரியனைப் பார்த்ததும் பைத்தியம் பிடித்ததைப்போல வேகவேகமாக எழுந்த சொற்குவியலை மறுபடியும் அசைபோட்டேன்.வேதனையாக இருந்தது. காலையில் நினைவில் எழாமல்போன ஒரு சொல் அப்போது திடுமென நினைவில் உதித்தது. அது விஷக்கோப்பை.

- பாவண்ணன்( [email protected])

இவரது முந்தைய படைப்பு:

1. கடலில் ஒரு துளி


படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X