For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழ் சினிமாவில் பெண்கள் மீதான வன்முறை!

By Staff
Google Oneindia Tamil News

Cheran with Sneha in Autographதமிழ்ச் சமூகத்தைப் பொருத்தவரை தவிர்க்கவே முடியாத ஒரு ஊடகமாகத் திகழும் தமிழ்ச் சினிமா பன்னெடுங்காலமாக சமூகத்தைப் பிரதிபலித்தும்பிரதிபலிக்கச் செய்தும் வருகிறது. இச்சமூகத்தில் இயங்கி வரும் பெண் பற்றிய கற்பிதங்களைப் பாதை பிசகாமல் வெளிப்படுத்தியும் வளர்ச்சி நிலையில் விட்டுப்போனவற்றை தக்க வைத்து வந்திருக்கிறது.

இரத்தம் சிந்தப்படுவது, உடமைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துவது மட்டும் வன்முறை ஆகாது. மனித மதிப்பீடுகளின் கொலையும் மனித உரிமையை மீறும்கருத்துருவாக்கமும் வன்முறைதான். தமிழ்ச் சினிமாவில் இது அடிக்கடி பெண் மீது நிகழ்த்தப்படுகிறது.

ஆண், பெண் என்னும் இரு வேறு படைப்புகளில் பெண்ணுக்கென விதிக்கப் பெற்ற முறைகள், முரண்கள் இரண்டையும் தமிழ் சினிமா விதந்தோதுவது பெண் மீதுநிகழ்த்தும் மிகப் பெரிய வன்முறை ஆகும்.

பெண்ணிற்கென பேசும் படங்கள் கூட ஆண் மொழி காரணமாக பெண்ணின் மீது கருத்தியல் ரீதியாக வன்முறையையே நிகழ்த்துகின்றன.

தமிழ்ச் சினிமாவில் வசனங்கள், காட்சிகள், பாடல்கள், பாத்திரங்கள், கதைக் கரு, உத்திகள், நகைச்சுவை எனப் பல்வேறு தளங்களில் பெண் மீது வன்முறைகட்டவிழ்த்து விடப்படுகிறது.

"பொம்பள ஆயிட்டேன்னு பார்க்கிறேன்

"ஒழுங்கா பொம்பளயா லட்சணமா அடக்கமா நடந்துக்கணும்

"அதிகமா கோபப்படுற பொம்பள உருப்பட மாட்டா

"என்ன இருந்தாலும் ஒரு ஆம்பளய இப்படிப் பேசக் கூடாது, அதுவும் ஒரு பொம்பள பேசவே கூடாது..

என இப்படி இன்னும் இன்னும் எத்தனையோ வசன உதாரணங்களை அடுக்கலாம்.

இரண்டாம் தரமான இனமாக பெண்ணை கணிக்கும் வசனங்களை ஏராளமாகப் பேசுகிறது தமிழ் சினிமா.

இவ்வசனங்கள் நேரிடயாைகப் பெண் மீதான கற்பிதங்களைப் பேசுகின்றன. பல நிலைகளில் இத்தகைய வசனங்கள் ஆண், பெண் ஆகிய இரு பாத்திரங்களின்மூலமாகவும் அரங்கேற்றப்படுகின்றன.

"என்ன இருந்தாலும் ஒரு ஆம்பளகிட்ட ஒரு பொம்பள ஜெயிச்சிடக் கூடாது!

என்று ஆணுக்கும் பெண்ணுக்குமான போட்டியில் இறுதியில் பெண்ணை வைத்து வசனம் பேச வைக்கப்படுகிறது.

பல திரைப்படங்களில் பாலியல் வன்முறைக்கான வசனங்கள் பெண் மீது எழுதப்படுகிறது. திருடா திருடி திரைப்படத்தில் கதா நாயகனும், நாயகியும் பேருந்தில்வசனம் பேசி சண்டை போடும் காட்சியில் "உன்ன பாம்பு கொத்தும்டா, மண் லாரி ஏறும்டா, உனக்கு எயிட்ஸ் வரும்டா ..

என்று கதாநாயகி வசை பாடி வசனம் பேச, அதே வேகத்தில் வசை பாடி வசனம் பேசும் கதாநாயகன், "நான் உன்னைக் கற்பழிப்பேண்டி .. என்றுபேசுகிறான். இத்தகைய வசனங்களும் ஒரு பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்ய வேண்டும், செய்திருக்க வேண்டும் என்று நேரிடையாகவும்அர்த்தமாகும்.

"உன்னை எல்லாம் சும்மா விட்டது தப்பு

அதுக்குத்தான் இப்படி திமிர் பிடிச்சி அலையற

என்று வரும் வசனங்களும் பெண் மீது நிகழ்த்தப்படும் வார்த்தை வன்முறையாகவே இருக்கிறது. இரட்டை அர்த்த வசனங்கள் பெரும்பாலும் பெண் உடலைமையமிட்டே இயங்குகின்றன.

பெண்ணிற்கான உடலையும், அவ்வுடலைக் குறித்த அவளுக்கான மதிப்பீடுகளையும் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் வசனங்கள் தமிழ்ச் சினிமாவில்மலிவாகி வருகின்றன.

தமிழ்ச் சினிமாவைப் பொருத்தமட்டில் சமூகத்தின் கருத்தியலோடு இயைந்த கூறுகளே அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. பணம், அறிவியல்,தொழில்நுட்பம், நவீன தொழில்நுட்ப அறிவின் ஊடாக உழைப்பை விற்கும் வல்லுநர்கள்

எனச் சினிமாவுக்கும் பார்வையாளனுக்குமான இடைவெளி நிரப்பப்படும் அதே வேளையில் கருத்துக்களை, மதிப்பீடுகளை, தகவல் பொருட்களை, மக்கள்வரையில் கொண்டு செல்கின்ற காரணத்தால் ..

வியாபாரம், சம்பாத்தியம், பொழுதுபோக்கு எனும் எல்லைகளைக் கடந்து ஒரு பொருள் விற்கப்படும் நிலையிலிருந்து மாறுபட்டு, இச்சினிமாவின்தாக்கம் தமிழ் பேசும் மக்களின் சகம் பற்றிய கட்டமைவினை உறுதி செய்கிறது.

விற்பனை என்ற பெருநோக்கு ஈடேற, பெண் உடல் வெளி, தமிழ்ச் சினிமாவில் அத்தியாவசியமானதாகும்.பெண் உடல் சார்ந்த கருத்தாக்கங்கள் பல்வேறுதளங்களில் இயங்குகின்றன.

ஆண் வர்க்கத்தினரால் ஆளுமை செய்யப் பெறும் இக்கருத்துக்களில் பெரும்பாலான பார்வையாளர்களின் கணிசமான சம்மதம் உள்ளடங்கியே உள்ளது.

தமிழ் சினிமாவில் பெண்கள் மீதான கற்பிதங்களை நம் அன்றாட நடைமுறைகள் மீது பொருத்திப் பார்ப்பது மதிப்பீடுகள் குறித்த விளக்கத்திற்கு உதவியாய்அமையும். இருப்பினும் சினிமா சித்தரிக்கும் மதிப்பீடுகளை உருவாக்குபவர்களை நாம் அடையாளம் காண்பது அவசியமாகும்.

ஆதிக்கம் பெற்ற சாதிய வழக்குகளுக்கு தூபம் போடும் வெறியாட்டக் கருத்துக்களும், மேலைநாட்டு நாகரீகத் திணிப்புகளும் உடல், உணவு, உடை,வாழ்க்கை முறை போன்றவற்றிற்கான பழைய புதிய கருத்துத் திணிப்புகளும்,

முதலாளித்துவ உணர்வுகளை மரபணுக்கள் தாங்கியுள்ளதைக் கூறும் முயற்சிகளுமாக தமிழ்ச் சினிமா நிகழ்த்தும் கருத்தியல் ரீதியான சித்தரிப்புகளுக்கு ஊடாகஅதன் பின்னணியில் இயங்கும் பெண்ணின் மீதான பார்வையும், பெண் பற்றிக் கையாளப்படும் மதிப்பீடுகளும் உற்று நோக்கத்தக்கவை.

"பெண் மீது ஆண் புரியும் அடக்குமுறை - உயர் சாதிக்காரன் தாழ் சாதிக்காரன் மீதும், பணக்காரன் ஏழை மீதும், வெள்ளையன் கருப்பன் மீதும் செய்யும்அடக்குமுறைகளை விட அநியாயமானது என்று பாரதியார் தன் கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார்.

இந்த ஒப்பாய்வில் ஆண் நிகழ்த்தும் அநியாயத்தின் கை ஓங்குவதின் காரணம், மற்ற அடக்குமுறையாளர்கள் பிறரை அடக்க நினைத்து ஆதிக்கம்செலுத்துவதோடு நிற்க, ஆண்-பெண்ணை அடக்க மட்டுமன்றி ஆதிக்கம் செலுத்த மட்டுமன்றி அனுபவிக்கவும் நினைப்பதுதான்.

இந்த அனுபவிப்பு எளிமைப்படுத்தப்பட, மான், தேன், கிளி, புறா, கவிதை என்ற வர்ணிப்புச் சாயங்கள் பூசப்படுகிறது. இதற்கு மயங்கும் பெண் பாத்திரங்களும்இத்தகைய ஆணாதிக்க கருத்து வெளிப்பாடுகளும் தமிழ்ச் சினிமாவில் நிறையவே உண்டு.

பெண் போகப் பொருளாக, அறிவுத்திறன் அற்றவளாக, சுய உணர்வு கெட்டவளாக, ஆணிற்காக வாழ்பவளாக, கன்னி கழிவதே மிகப் பெரிய இலக்காகத்திருமணத்தை எதிர் நோக்குபவளாக, ஆணின் ஆணைகளுக்கு உட்பட்டவளாக சித்தரிக்கப்படுகிறாள்; காட்டப்படுகிறாள்.

"என்னை அடிச்சு இப்பத்தான் என்னைப் பொண்டாட்டியா

ஏத்துக்கிட்டார் என் புருஷன் ..

என்று தொழில் அதிபர் நிலைக்கு உயர்ந்த, கல்வி மற்றும் பொருளாதார சுதந்திரம் பெற்ற ஒரு பெண் வசனம் பேசுகிறாள்.

"சப்புன்னு என்னை ஒர் அறை விட்டிருந்தீங்கன்னா

நான் தப்பு செஞ்சிருப்பேனா.?

என்னை ஏன் அப்பவே அடிக்கலை ..

என்று வசனம் பேசுகிறாள் - அடங்காப்பிடாரியாக இருந்து கிளைமாக்ஸில் புருஷனுக்கு அடங்கும் ஒரு பெண்.

இப்படியாகக் கணவன் என்னும் பொறுப்பில் உள்ள ஆண், பெண்ணை அடித்தல் என்பது மனைவி என்ற அந்தஸ்து பெறக் கிடைக்கும் அங்கீகாரம் என தமிழ்ச்சினிமா சித்தரிக்கிறது.

ஓர் ஆண், மனைவி வீட்டாரால் அடிபடுவதை மிகப் பெரிய சோகமாகக் காட்டும் தமிழ்ச் சினிமா, ஓர் ஆண் மூலமாக பெண் அடிபடுவதை -நியாயமாகவும், நகைச்சுவையாகவும் காட்டுவதுதான் அலங்கோலம்.

அடக்கமானவள், பொறுமைசாலி, தியாகம் செய்பவள், பேசாதவள்; பத்தினித் தெய்வம் - உத்தமி. துணிச்சலானவள், செருக்குடையவள்,அடங்காப்பிடாரி, - வில்லி- முரண்பாத்திரம். இதுமட்டுமின்றி - தாலி என்பது தமிழ் சினிமா பெண்ணுக்கு எதிராகவும், ஆதரவாகவும்நெடுங்காலமாகத் தன் கைவசம் வைத்திருக்கும் ஓர் ஆயுதமாகவும் திகழ்கிறது.

வில்லன் கதறக் கதற நாயகிக்குக் தாலி கட்டும் காட்சி, பார்வையாளர்களின் பலத்த கரகோஷம், கைதட்டல், தவிப்பு, திட்டு, அழுகை இவற்றிற்குஊடே அடிக்கடி தமிழ் சினிமாவில் பார்க்கக் கிடைக்கும் அம்சம்.

தன்னை விரும்பாத பெண்ணிற்கு பலாத்காரமாக தாலி கட்டும் கதாநாயகன்களும் தமிழ்ச் சினிமாவில் உண்டு.அந்தத் தாலியை சினிமா முடியும் வரைதாங்கிக் கொண்டு இறுதிக் காட்சியில் தாலி கட்டும்போது அதை ஏற்காமல், இவ்வளவு நாள் கழித்ததற்காக ஏங்கி ஏங்கி அழுது கதாநாயகனிடம்மன்னிப்புக் கேட்டு காலில் விழும் கதாநாயகியரும் உண்டு.

அடங்காப்பிடாரி பெண்ணுக்கு இரும்பில் தாலி பூட்டி அடக்கி ஆளும் காட்சி தமிழ்ச் சினிமா காட்டும் மலிவான சிந்தனை. தமிழ்ச் சினிமாவில் தாலி எனும்இந்த ஆதாரப் பொருள் பற்றிய சிந்தனை நெடுங்காலம்தொட்டு இன்று வரை கட்டுக் குலையாமல் காப்பாற்றப்பட்டு வருகிறது.

வற்புறுத்தித் தனக்குத் தாலி கட்ட வரும் வில்லனிடமிருந்து தப்பித்து அந்த வெற்றியின் லயிப்பில் மனச் சிதைவுடன் கூடிய எள்ளல் நகைப்பிற்கு ஊடாக கழுத்தில்கயிறு சுருக்கி தன்னைத் தானே தூக்கிட்டுக் கொள்ளும் விருமாண்டி படக் கதாநாயகி வரை இத் தாலி பற்றிய கருத்துத் திணிப்பு தொடர்வது சகத்தின்கருத்தியல் ஆய்வுக்கு களம் அமைக்கும் அவசியத்தை உணர்த்துகிறது.

பாலியல் பலாத்காரம் என்பது ஒரு பெண் மீது நிகழ்த்தப்படும் வன்முறையின் உச்சம். இவ் வன்முறை ஏறக்குறைய எல்லாத் தமிழ் சினிமாவிலும்கட்டாயக் காட்சி ஆகும். கொலை செய்வதும், திருடுவது மாதிரி இதுவும் வில்லனிடமோ அல்லது கதாநாயகனிடமோ உள்ள ஒரு அவசியமான கெட்டபழக்கமாகத் தமிழ் சினிமா சித்தரிக்கிறது.

பலாத்காரம் செய்யும் ஆண், வில்லன் பாத்திரமாக இருந்தால், ஒன்று கதாநாயகி தப்பித்து விடுவாள். அல்லது தற்கொலை செய்து கொள்வாள்.கதாநாயகன் பலாத்காரம் செய்து விட்டாலோ நாயகி அவனைக் கட்டாயமாகத் திருமணம் செய்தே ஆக வேண்டும். அவன் காமுகனாக இருந்தால்அவனைத் திருத்திப் "புதிய பாதை அமைக்க வேண்டும்.

ஒரு பெண்ணிற்கு இச்சகத்தால் மறுக்கப்படும் எந்தவொரு லட்சியமோ கனவோ ஆணுக்கு மட்டும் நிறைவேறுவதாக காட்டப்படும்போது அதில் ஒருபெண்ணாக நின்று சந்தோஷிக்க முடியாமல் போகிறது.

சேரன் இயக்கிய "ஆட்டோகிராப் படத்தில் காதலில் தோற்றுப் போன ஓர் ஆணுக்கு அவனை இயல்பாக தன் அக வாழ்வுக்குள் அங்கீகரிக்கும் ஒருபெண் வாய்க்கிறாள். அதே வாய்ப்பு காதலில் தோற்று தற்கொலைக்கு முயன்ற பெண்ணுக்கு வாய்க்கும்போது அதை மறுத்துச் சமூக சேவையில்ஈடுபடும் வாய்ப்பையே அப் பெண் தேர்ந்தெடுப்பதாக காட்டப்படும் மதிப்பீடுகளின் பிம்பம் இன்றைய மாற்றுச் சினிமா.

Parthiban with Nanthitha das in Azhagiபரத்தை வாழ்க்கையை மறுதலித்த மாதவியின் மகள் எப்போதும் துறவிதானா? காதல்-காமம்-குடும்பம், இதில் எது பெண்ணின் தளம்? எங்கேஅவள் தொடங்குகிறாள்? எது அவளுக்கான முடிவு? ஓர் ஆணுக்கான நினைவோ-துணையோ ஒரு முறை வாய்த்து விட்டால் அப்பெண்ணின் உலகுஅதற்குள் அடங்கிப் போகிறது.

பெண்ணுக்கு எப்போதும் வாய்க்கும் கட்டாயத் துணைகளின் திணிப்பு கட்டாயமாக்கப்பட்ட துணையை மீறி அவள் நினைவு இல்லை. துணை இருக்கும்போதும்இல்லை, துணை செத்துப் போனாலும் நினைவுகள்.. கனவுகள் இல்லை. ஆனால் ஆணின் உலகம் விரிந்தது, பரந்தது, கடந்தது. இந்த நிலைப்பாடு பெண்ணின்மீதான கருத்தியல் வன்முறையே.

காதல் தோல்வி பற்றிய ஆண், பெண் இருவேறுபட்ட சிந்தனா வெளிப்பாடு ஒருபுறம் இருக்க மறுமணம் பற்றிய கருத்தாக்கத்தில் இரட்டை நிலையையேதமிழ்ச் சினிமா பேணுகிறது.

"தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா?

தெருவினிலே விழுந்தாலும் வேறொரு கை படலாமா?

என்று ஒரு பெண்ணின் மறுமணம் பற்றிய ஒரு பெண்ணின் சிந்தனை மறுப்பு பெண் மீதான கருத்து வன்முறைதான்.

இதுவே ஒரு ஆணுக்கு வாய்ப்பு மாறும்போது மறுமணத்தை மறுக்கும் ஆணிடத்தில்,

"இன்னொருத்தி வடிவினில் இருப்பவளும் நானல்லவா?

என்று ஆவியாக வந்தாவது ஆணிற்கான மறுமணத்தை பெண்ணே செய்விப்பாள்.

இதற்கு ஆண் எப்போதும் மறுப்புச் சொல்வதில்லை. இந்த பாரபட்ச சிந்தனை தமிழ்ச் சினிமாவில் அதிகம்.

தமிழ்ச் சினிமாவில் தன் மீது ஆசைப்படாத ஆண் மீது ஆசைப்படும் பெண் பாத்திரம், வில்லி பாத்திரம் - முரண் பாத்திரம். இம் மரபு .. "கணவனே கண் கண்டதெய்வம் படத்தில் தன் மீது காதல் கொள்ளாத இளவரசன் மீது காதல் வயப்படும் நாகராணி முதல் தன் மீது காதல் கொள்ளாத "படையப்பா மீதுகாதல் கொள்ளும் காதம்பரி வரை தொடர்கிறது.

இந்த இலக்கணம் பெண்களுக்கு மட்டுமே. ஆனால், தன் மீது காதல் கொள்ளாத பெண்ணாக இருந்தாலும், தான் காதல் கொண்டு அவளைவசப்படுத்துவதே பல கதாநாயகரின் பிரதான வேலையாக தமிழ்ச் சினிமா காட்டுகிறது.

"பெண் தன் ஆசையைப் பேசுதல் உண்டோ?

கண் பேசும் ஆவல் புரியாதோ?

பெண் காமம் பேசுதல் மரபன்று என்று கூறும் தமிழ் மரபு தெரியாத தவிட்டுக் கவிகள் தவளைச் சத்தம் போட்டுக் கொண்டே தமிழ்ச் சினிமாவில் பெண்மூலமாக ஆபாசம் பேச வைக்கும் பாடல் வரிகளை எழுதித் தள்ளுகிறார்கள்.

"தக்காளி பழம், பப்பாளிப் பழம் ..

என்ற வர்ணிப்புகளுக்கு ஊடாக,

"பூக்காரி உன் பூக்கள் மொத்தம் எத்தனை சொல்லி விடு ..

என்றும்,

"அத்தனைப் பூவையும் ஒருமுறை கிள்ளி விடு ..

என்றும்,

"ஆடாத தேகமெங்கும் ஆண் வாசனை

என்றும்,

"பருவத் திருடா, பருவத் திருடா பசிக்குதாடா ..

என்றும்,

"என் பச்ச உடம்பிலே உச்சி நரம்பிலே ..

என்றும் இன்னும் இன்னும் பெண் உடல் மீதான ஆபாசச் சித்தரிப்புகள் வன்முறையின் வெளிப்பாடே.

பெண்ணுக்கு எதிரான வன்முறை நிறைந்த பாடல் வரிகள் அரசாங்கத்தின் தணிக்கைக் குழுக்களையும் கடந்து வருவதுதான் மிகவும் வேதனை.

"ஈவ் டீசிங் செய்வதெல்லாம்

இளமைக்கு இனிமை

இலக்குகள் எல்லாமே

என்னோட உடமை

என்று கல்லூரி மாணவன் போல் ஒருவன் ஆபாசக் கையசைவுகளுடனும், அங்க அசைவுகளுடனும் பாடல் வரிகளை உச்சரிக்கிறான்.

பகடிவதை என்று கூறப் பெறும் பாலியல் சீண்டல் - திரைப்படங்களில் நகைச்சுவை உட்பட பல்வேறு தளங்களில் காட்சிப் படுத்தப்படுகிறது.

தமிழ்ச் சினிமாவில் பாலியல் வன்முறை போலவே இரு தார மணமும் ஆணின் இருப்பைப் போற்றியும் பெண்ணின் இருப்பைப் பரிகசித்தும் காட்டும் கருத்தியல்சிதைவாக இருக்கிறது.

மரபுகளை மாற்றிச் சிந்திக்கிறேன் என்று கூறும் சில படைப்பாளிகளின் படைப்புகள் உதாரணமாக கல்கி, அழகி, அபூர்வ ராகங்கள் போன்றசினிமாக்கள் பெண் குறித்த ஆளுமை நிறைந்த பாத்திரப் படைப்பைக் காட்டத் தவறுவதோடு பெண் சார் மதிப்பீடுகளின் தரத்தையும் குறைக்கின்றன.

அதிகம் பேசப்பட்ட தங்கர் பச்சானின் அழகி படத்தில் கதாநாயகனின் முட்டாள்தனமான அணுகுமுறைக்கு அசிங்கமாகப் பலியாகும் பெண்ணின் படைப்புமுடிந்த மட்டும் கேலி செய்யப்பட்டுள்ளது (மனைவி பாத்திரம் உட்பட)

"மனசுக் கேட்டு அள்ளு அள்ளு

ஊரு கெடக்கு தள்ளு தள்ளு

ஸ்கூட்டி வருது அள்ளு அள்ளு

தண்ணீர் லாரிய தள்ளு தள்ளு

என்று பெண், வாகனங்களுக்கு ஒப்புமையாக்கப்படும் போக்கும், அவள் உடல் மீதான அழகியல் கருத்துக்களின் திணிப்பும் நேரடியாக பெண் மீதுகட்டவிழ்த்து விடப்படும் வன்முறையே தவிர வேறில்லை.

தென்றல் எனும் படத்தில் - விபச்சாரனாக உள்ள ஒருவன் மேல் ஆசை கொள்ளும் கதாநாயகி - விபச்சாரியாக விதி வசத்தால் மாறி அவனைஅடைந்து சாபல்யம் பெறுவதாக காட்டப்பட்டிருப்பது தமிழ்ச் சினிமாவின் பெண் பற்றிய மதிப்பீட்டிற்கான நிஜ பிம்பமாகக் கொள்ளலாம்.

தமிழ்ச் சினிமா பெண் மீது நிகழ்த்தும் காட்சி மற்றும் கருத்தியல் வன்முறைகளை அடையாளம் காண்பது அவசியம். தமிழ்ச் சினிமா மூன்று மணி நேரமும் -சில ரூபாய்களும் அல்ல. நம் பொழுதைப் போக்க நமக்குக் கிடைத்த ஊடகமும் அல்ல.

"இருக்கிறதத்தான காட்டுகிறான் என்று கூறித் தப்பித்தல் சரியன்று. ஏன்? உள் நோக்கம் என்ன? இதை இப்படிக் கூறுவது தவறு என தட்டிக்கேட்கும் பார்வையாளரின் நிச்சயம் சினிமா உற்பத்தியில் கருத்து ரீதியான சிறு இடையீட்டை செய்ய இயலும்.

நம் வீட்டில் தவறு நடந்தால் தட்டிக் கேட்கிறோமே. இப்பொறுப்பு கொஞ்சமாவது சமூகத்தின் மீது காட்டினால் .. ஒரு சிறு அசைவு .. ஒரு சிறு குரல் ..நிச்சயம் நிறையச் சாதிக்கும். பெண்களின் திரைத் துறையின் தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகப் பங்களிப்பு நிச்சயம் மாற்றத்தைத் தரும்.

ஆனால், ஆணின் திட்டமிடப்பட்ட வலைக்குள் முடங்காமல் பெண் குரல் ஒலிக்க முடியுமானால் இது சாத்தியம். ஆண் மொழி பேசி, ஆணியச் சிந்தனைக்குரியபெண்களின் திரைத் துறை உற்பத்திக்கான ஊடாட்டம் எவ்வித மாற்றத்தையும் இத்துறையில் உண்டாக்கப் போவதில்லை.

நன்றி: "அணங்கு

தொகுப்பாசிரியர்கள்: க்ருஷாங்கினி, மாலதி மைத்ரி.

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X